சிலை சிலையாம் காரணமாம் - 1:
கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை...
2011 அக்டோபர் 30... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt) பன் னாட்டு விமான நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக, முதலா வது ஓடுதளத்தில் தன்னை ஆயத் தப்படுத்திக் கொண்டிருக்கிறது யுனை டெட் ஏர்லைன்ஸ் விமானம். அதில் பயணிக்கக் காத்திருக்கும் பயணி களுக்கு இமிக்ரேஷன் சடங்குகளை முடிப்பதற்காக அவசரகதியில் இயங் கிக் கொண்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.
ஆண்டுக்கணக்கில் கூண்டுக்குள் சிக்க வைக்கப் போகும் ஆபத்து தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியா மல், 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென பரபரப்பாகிறது விமான நிலையம். வந்திருப்பது சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ என்றதும் வணக்கம் வைத்து வழிவிடுகிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். அடுத்த சில நிமிடங் களில் ‘இன்டர்போல்’ (Interpol) வாகனத்தில் இறுக்கமான முகத்துடன் பயணித் துக் கொண்டிருந்தார் சுபாஷ் சந்திர கபூர் என்ற அந்தப் பெரியவர்.
சுபாஷ் சந்திர கபூர் - சர்வதேச அளவில் செயல்படும் சிலைக் கடத் தல் மாஃபியாக்களின் அதி முக்கியப் புள்ளி என்றும்; கடந்த 5 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் இருக்கும் கபூர், கடந்த 35 ஆண்டுகளில் இந்தியா வில் இருந்து சுமார் 50 ஆயிரம் கலைப் பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியிருப்பதாகவும் சொல்கிறது ‘இன்டர்போல்’. இவரால் கடத்தி விற்கப் பட்ட இந்திய கலைப் பொருட்கள் உலகின் அத்தனை பிரபல மியூசியங்களிலும் இப்போது காட்சியில் உள்ளன. கபூர் சரித்திரத்தைப் புரட்டுவதற்கு முன்பாக, இந்தியாவில் இருந்து பழம் சிலைகள் உள்ளிட்ட கலை பொக்கிஷங்கள் கடத்தப்படுவதன் பின்னணியைப் பார்க்கலாம்.
ஆங்கிலேயர்கள் நமது செல்வங் களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக காலம்காலமாக பொதுப்படை பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், இந்திய கலைச் செல்வங்களையும் தொன்மையான புராதனச் சின்னங்களையும் வெளிநாடுகளுக்குக் கடத்துவதையும் சேதப்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியது ஆங்கிலேய அரசுதான்!
இந்திய பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு 1784-ல் ‘ஆசியவியல் கழகம்’ ஏற்படுத்தப்பட் டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மொழியியல் அறிஞருமான சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir. William Jones) தலைமையில் செயல்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பண்பாட்டு மரபுச் சின்னங்களைப் பாது காத்தல், அழிந்துபோன தொன்மை நகரங் கள்குறித்த வரலாற்றை மீட்டெடுத்தல், நல்ல நிலையில் உள்ள வரலாற்று எச்சங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தியது.
சுபாஷ் கபூரின் நியூயார்க் ஆர்ட் கேலரி சிலைகள் |
இந்தியா முழுமையும் நில அளவை செய்து எல்லைகள் வகுத்தவர் சர்வேயர் ஜெனரல் லெப்டினென்ட் கர்னல் மெக்கன்ஸி. நில அளவை பணிக்குச் சென்ற இடங்களில் இருந்த புராதனச் சின்னங்கள் உள்ளிட்டவைகளை, தனது கைகளாலேயே ஓவியங்களாக வரைந்த மெக்கன்ஸி, 8,076 கல்வெட்டுகளையும் தொகுத்தார். இவர் வரைந்த ஓவியங்கள் மொத்தம் 2,630. இவை அரிய பொக் கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டன. 1861-ல் இந்திய தலைமை ஆளுநர் அலெக்சாண்டர் கன்னிங்காம்
(Alexander Cunnigham) தலைமை யில் ‘இந்திய தொல்லியல் துறை’ உரு வாக்கப்பட்டது. இதன் பிறகுதான் கோயில்கள், சிலைகள், புராதனச் சின்னங்கள் பாதுகாக்க சட்டம் வகுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 1878-ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் செயலாளராக இருந்த சாலிஸ்பரி பிரபு (Lord Salisbury) இந்திய புதையல் சட்டத்தை (Indian Treasure Trove Act) கொண்டுவந்தார். இதன்படி, பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கும் பொருட்கள் 100 ஆண்டுகள் பழமை யானதாக இருந்தால் அது அரசுக் குச் சொந்தம். அதன் மதிப்பு 10 ரூபாய்க்குக் கீழிருந்தால் அதை நிலத்தின் உரிமையாளரே அனுபவிக்கலாம். 10 ரூபாய் மதிப்புக்கு அதிகமாக இருந் தால் அதை அரசிடம் ஒப்படைக்க வேண் டும். ஒப்படைக்கப்படும் பொருளின் மதிப் பில் நான்கில் ஒரு பங்குக்கான தொகையை நிலத்தின் உரிமை யாளருக்கும் புதையலை எடுக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிக்கும் அரசே ஊக்கப் பரிசாக வழங்கும். பூமியில் இருந்து கிடைக்கும் பழம்பொருட்களை மக்கள் மறைத்துவிடவோ, அழித்து வேறு பொருளாக மாற்றிவிடவோ கூடாது என்பதற்காக இப்படியொரு வழிமுறையைக் கையாண்டது ஆங்கிலேயே அரசு.
1904-ல் ‘பழங்கால நினைவுச் சின்னங் கள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட் டது. இச்சட்டம், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து தொன்மையான பழம்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித் தது. இதை மீறுவோருக்கு ரூ. 5,000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் சிறை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட்டது. 1947-ல் இச்சட்டத்தை கடுமையாக்கி ‘பழம் பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாட் டுச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதன் படி, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுக் குச் சொந்தம் எனவும் தொல்லியல்துறை யின் பொது இயக்குநர் தொன்மை அல்லாத கலைப் பொருட்கள் ஏற்றுமதிக்கான உரிமம் வழங்கும் அதிகாரம் படைத்தவர் எனவும் அறிவிக்கப்பட்டது.
1950 ஜனவரி 26-ல் இந்திய அரசியல மைப்புச் சட்டம் உருவானபோது, அதன் 7-வது அட்டவணையின் பட்டியல் ஒன்று இனம் 67-ல் வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள், பாரம்பரிய பொருட்கள், உள்ளிட்டவைகளைப் பாதுகாப்பது குறித்து சட்ட வரைவுகள் ஏற்படுத்தப் பட்டன. இதன் பிறகு 1958, 1972, 1976 என மூன்றுமுறை, பாரம்பரியக் கலை மற்றும் புராதனச் சின்னங்கள் பாதுகாப் புச் சட்டத்தில் (The Antiquities and Art Treasures Act) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் சிலைகள் உள்ளிட்ட தொன்மைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் பெரிதாக யாரும் தண்டிக்கப்படவில்லை. ஏன் தெரியுமா?
தமிழக கோயில்களுக்குச் சொந்தமான சிலைகளைக் கடத்தியதாக தீனதயாள் அவரது கூட்டாளி லட்சுமி நரசிம்மன் ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி) போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தீனதயாளிடம் இருந்து ஓவியங்கள், ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் நூற்றுக்கணக்கான பழமையான கலைப் பொருட்களும் லட்சுமி நரசிம்மனிடம் இருந்து 9 ஐம்பொன் சிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களது கிளைகளை நோக்கி விசாரணை போய்க்கொண் டிருக்கும் நிலையில்..,
சிலைக் கடத்தல் மர்மங்களை அம்பலப்படுத்துகிறது இந்தத் தொடர்....
நன்றி: குள.சண்முகசுந்தரம், தமிழ் இந்து
Comments