ஓம் பர்வத மலை
(Om Parbat)
இமயமலையில் அமைந்துள்ள ஓம் பர்வத மலை (Om Parbat) என்பது ஆதி கைலாஷ் என்று பலரால் அறியப்படுகிறது. இதற்கு சிறிய கைலாஷ், ஜாங்லிங்காங் பீக் (Jonglingkong Peak), பாபா கைலாஷ் என்றும் பல பெயர்கள் உண்டு.
இமயமலையின் ஒரு பகுதியில் கருத்த மலையின் பின்னணியில், படர்ந்திருக்கும் வெண்மை நிற பனியானது, இந்துக்கள் வழிபடும் ஓம்காரத்தின் (ஹிந்தி ஓம் [ॐ} எழுத்து) வடிவில் அமைந்திருப்பதே இந்த கைலாச மலையின் சிறப்பம்சமாகும். இது கூர்ந்து கவனித்தால் தெரிவதாகவோ, அவ்வாறு தோன்றுவதாகவோ இல்லாமல், மிகத் தெளிவாக ஓம் காரத்தைப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், இங்கு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் ஓம்காரத்தில் அந்த புள்ளியும் தென்படுவது விசேஷமாகும்.
இந்து பெரியவர்களின் கூற்றுப்படி, இமயமலைப் பகுதியில் இதுபோன்ற ஓம்காரம் எட்டு இடங்களில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அதில் இதுவரை உலகம் பார்த்து அறிந்த ஒரே ஓம்காரம் இந்த ஓம் பர்வத மலையில் மட்டும்தான்.
ஓம் பர்வத மலைக்கு அருகே பர்வத ஏரி மற்றும் ஜாங்லிங்காங் ஏரி அமைந்துள்ளன. ஜாங்லிங் ஏரியை இந்துக்கள் மானசரோவர் என்று அழைக்கின்றனர்.
இமயமலைத் தொடரில் தார்சுலா மாவட்டத்தில் 6,191 மீ உயரத்தில் அமைந்துள்ள ஓம் பர்வதம் மலையானது இந்து, பௌத்தம், சமண மதங்கள் புனிதத் தலமாக வழிபடும் இடமாகத் திகழ்கிறது.
இந்தோ - நேபாள் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலையில் இருந்து பனி சூழ்ந்திருக்கும் அன்னப்பூர்ணா சிகரங்களைக் காண இயற்கை விரும்பிகள் அதிகம் விரும்புவர்.
ஓம் பர்வத மலைக்குச் சென்றாலும், அந்தஓம்காரத்தைக் காண வேண்டும் என்றால், அதற்கு இயற்கை ஒத்துழைக்க வேண்டும். பனிச் சிகரத்தை மூடியிருக்கும் மேக கூட்டங்கள் முழுமையாக அகண்டால்தான், ஓம்காரத்தை முழுவதுமாக கண்டு தரிசிக்க இயலும். அதுவும் ஒரு சில நிமிடங்கள்தான் மீண்டும் மேகக் கூட்டங்கள் அந்த தரிசனத்தை மறைத்துவிடுக் கூடும்.
இங்கு செல்லும் பயணிகள், வழியோடே காளி ஆறு, நீர் வீழ்ச்சி, அடர்ந்த வனம், நாராயண் ஆசிரமம், கெளரி குண்ட், மலையின் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கும் நீரோடை என இயற்கை அழகின் எல்லைகளைக் கண்டு கொண்டே செல்லலாம்.
இவ்விடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், நேபாளத்தின் எல்லைக்குள் சென்றுவிட்டுத்தான் ஓம் பர்வத மலையை அடைய வேண்டும். இதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.
தற்போது ஏராளமான சுற்றுலா மையங்கள், ஓம் பர்வத மலைக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வது அதிகரித்துள்ளது. மேலும், இங்கு செல்ல பல ஹெலிகாப்டர் சேவைகளும் வழங்கப்படுவது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.
Comments