சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு.
ரசனை - ரசிக்கும் தன்மை மக்களிடையே நல்ல உறவை வளர்க்கும். பரஸ்பர அன்புடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.
"அப்புசாமி - சீதா பாட்டி' இசைக் கூடல் அமைப்பும், ரசனையை வளர்க்கும் நல்லதொரு விஷயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்பாகும் .
இந்த இசைக் கூடலில், சிறந்த சமூக சேவகியான டாக்டர் ஷ்யாமா, பத்திரிகையாளர் காந்தலட்சுமி சந்திரமவுலி, தேஜோமயி கல்வி மையங்களின் தலைவர் உமாயோகேஸ்வரன் இவர்களுடன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். அக்கறை என்னும் அமைப்பையும் இவர்கள் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
"அப்புசாமி - சீதா பாட்டி' நகைச்சுவை பாத்திரத்தை உலவவிட்டு நிலை நிறுத்தியவர் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் ஆவார். அவர் இதை நடத்தும் குழுவில் முக்கியமானவர்.
மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, மயிலை கற்பகாம்பாள் நகரில் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் கலையரங்கத்தில் அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடலின் இசை நிகழ்ச்சி நடந்தது. மகாத்மா காந்தியுடன் மறைந்த பிரபல சங்கீத விதூஷி சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாளுக்கும் இசையஞ்சலி செலுத்தும் விதமாக, அவருடைய மாணவி பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி ரங்கராஜனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், டி.கே.பி.,யின் புகழ்பெற்ற பாடல்களான குருவருளும் (ஆபோகி) (கவுரிசங்கர் ஸ்தபதி) ஸ்ரீமன் நாராயணா (பவுளி) (அன்னமய்யா) சுஜன ஜீவன (கமாஸ், ரூபகம், தியாகராஜர்) குறிப்பாக ரங்கநாயகம் (நாயகி) (ஆதி) (ஸ்ரீதீட்சிதர்) சுருக்கமாக தோடி ராகம் ஜீவனை தந்து தொடர்ந்து சுப்ரமண்யோம் (ஸ்ரீதீட்சிதர் - ஆதி) பட்டம்மாள் புகழ் சுதானந்த பாரதியின் எப்படிப் பாடினரோ (பீம்ப்ளாஸ்) (ஆதி) எனத் தொடர்ந்தது.
காந்திக்கு மிகவும் பிரியமான வைஷ்ணவ ஜனதோ (பஜன்) நிறைவாக வாழிய செந்தமிழ் பாடலுடன், குருவை நினைவுபடுத்தும் கச்சித சங்கதிகளுடனும் பட்டு கத்தரித்த நயத்துடனும், சம்பிரதாய சுத்தமாகவும் இசையை வழங்கினார்.
அமரர் டி.கே.பி.,யின் மறக்க முடியாத இசை வாரிசு இவர் என்பதையும், காந்திக்கு இதுவே இந்த இசைக் கூடலின் ஒப்பற்ற அஞ்சலியென்றும் கூற வைத்தது.பக்கவாத்தியத்தில், வயலினில் இளம் கலைஞர் சுதா ஆர்.எஸ்.அய்யர் (வயலின்) சுருதி சுத்தம் மதுரமாகவும் இருந்தது. குரு ராகவேந்திராவின் நயமான லயமும், கூடுதல் மெருகை தந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
இப்படிப்பட்ட ரசனை பரிமாற்றங்களை செய்யும் இந்த அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடல், மாறுபட்ட அமைப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
நன்றி: தினமலர்
Comments
//சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு.//
நீங்க சொல்ற சென்னை என்பது மாம்பலம், மயிலாப்பூர், தில்லக்கேணி மட்டுமே அடங்கிய சென்னையா இருக்கும், இப்போ கிரேட்டர் மெட்ராஸ்ல அதை எல்லாம் தாண்டி வந்துட்டோமே(அப்போ ரசமட்டம் ஆகி இருக்குமோ)