அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போரைப் பற்றி செய்தித்தாள்களும், தொலைக் காட்சி சானல்களும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதிவரும் இந்த நேரத்தில் சில தேவையில்லாத சம்பவங்களும் நடக்கின்றன.
ஊழலின் மொத்த உருவமான சில அரசியல்வாதிகளும், மக்களுக்கு இதுவரை எந்தவித நன்மையையும் செய்திராத சில அரசியல் கட்சிகளும் இதில் குளிர் காய்ந்து ஆதாயம் காண முனைந்துள்ளன.
பொது மக்களின் வரலாறு காணாத ஆதரவு அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு கிடைத்துள்ளதைக் கண்டு, என்ன நடந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்கக் கூடாது என்ற முனைப்பில் இருக்கும் நம் மத்திய அரசு, விதவிதமாக இந்த அறப் போராட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது.
இன்று அன்னாவுக்கு ஆதரவாக சேர்ந்து வரும் கூட்டம், நம்முடைய அரசியல் கட்சிகள் கூட்டுவதுபோல குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் சேரும் கூட்டம் அல்ல. நாடெங்கிலும் சாதி, மதம், தொழில், கல்வி என்று எந்தவிதமான வேறுபாடும் பார்க்காமல், ஊழலையும், அரசியல்வாதிகளையும் கண்டு சலித்துப்போன சாமானியர்களின் கூட்டம்.
இதில் லேட்டஸ்ட், இந்தப் போராட்டம் மேல் சாதியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் தலித் மக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஒரு செய்தியை (வதந்தியை) பரப்ப முயன்று வருகிறது நம்முடைய முட்டாள் மத்திய அரசு.
ஊழல் என்பது ஒரு நாடு தழுவிய நோய், இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால் இது போன்ற செய்திகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். முக்கியமாக நம்மால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் லஞ்சம் என்ற பேரில் எந்தவிதமான கைமாறும் இருக்கக்கூடாது.
"நான் அன்னா" ஒவ்வொரு இந்தியனும் நினைக்க வேண்டும். ஊழல் எதிர்ப்பு என்பது நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய ஒன்று.
Comments
Lets start from ourself.., from today!