Skip to main content

துபாய்! துபாய்!! துபாய்!!!

பல நாடுகளை ஏற்கனவே பார்த்து விட்டாலும், இதோ வெகு அருகிலேயே இருக்கும் துபாய் மற்றும் இலங்கையை இன்னும் பார்க்கவில்லை என்ற குறை எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்து வந்தது. நெருங்கிய நண்பர் ஒருவர் இலங்கைக்கு சென்றுவிட்டு வந்து, "என்னடா, அப்பிடியே கேரளாவுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு," என்று சொல்லவே, இலங்கை செல்லும் ஆசை குறைந்துவிட்டது.

துபாய் செல்லும் சந்தர்ப்பம் கடந்த 30 ம் தேதி கிட்டியது. என்னுடைய அலுவலக வேலை நிர்பந்தத்தின் காரணமாக என்னுடைய பெரும்பாலான பயணங்கள் தனியாகவே அமைந்துவிடும். ஒரு சில பயணங்கள் என் நெருங்கிய நண்பர்களுடன். ஒரே ஒரு முறை குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து சென்று வந்தேன்.

துபாயில் காலை ஆறு மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளிவந்தபோது ஏதோ அடுப்புக்குள் வந்த மாதிரி ஒரு சூடு. உடனடியாக காத்திருந்த காரில் ஏறி ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். என் மனைவி தீவிர சைவம் என்பதால், ஒரு வேளை சாப்பிட சரியாக கிடைக்காவிட்டால் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சர்விஸ் அப்பார்ட்மென்ட்டை புக் செய்து வைத்திருந்தேன். நல்ல காற்றோட்டமாக, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் என்று சகல வசதிகளுடன் இருந்த அந்த  சர்விஸ் அப்பார்ட்மென்ட்டைப் பார்த்தவுடன் என் மனைவிக்கு குஷி வந்துவிட்டது. சாப்பாடு சரியில்லை என்றால் நானே சமைத்து விடுகிறேன் என்று சொல்லியவுடன், ஒரு நாள் வாடகை நம் இந்திய மதிப்பில் ரூ.14,000/- என்றாலும், நானும் குஷியாகிவிட்டேன்.

துபாய் நண்பர் வெங்கடேஷ் அருகிலிருக்கும் சுக் சாகர் என்ற இந்திய உணவகத்துக்கு அழைத்து சென்றார். சூடாக இட்லி, வடை சாப்பிட்ட பிறகு துபாயில் 5 நாட்களை கடத்திவிடலாம் எனத் தோன்றியது. ஒரு பாலைவனத்தை இப்படி ஒரு மெகா நகரமாக மாற்றி அமைத்ததற்காகவே துபாய் அரசை பாராட்டவேண்டும். தண்ணீர், காய்கறிகள், பழங்கள், அரிசி அனைத்து பொருட்களுமே இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் என்றாலும் எதிலுமே குறை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எல்லாமே ரொம்ப, ரொம்ப விலை அதிகம். எனக்குத் தெரிந்து துபாயில் விலை குறைந்த ஒரே சமாசாரம் பெட்ரோல்தான். ஒரு லிட்டர் கிட்டத்தட்ட ரூ.22 என்று கேட்டவுடன் பேசாமல் ஒரு டேங்கர் பெட்ரோலை சென்னைக்கு கடத்தினால் என்ன என்று கூட அபத்தமாக தோன்றியது. பல நாடுகளில் பெரிய, பெரிய ஷாப்பிங் மால்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால், மாறுதலுக்கு வேறு எங்காவது செல்லலாம் என்று துபாய் தங்க வீதிக்கு (கோல்ட் சூக்-gold souk ) சென்றோம். ஜாய் ஆலுக்காஸ் இங்கும் பெரிய கடை ஒன்றைத் திறந்து அட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் இலவசம் என்று கூவி, கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். தங்கம் வாங்கும் ஆசை இருந்தாலும், டப்பு அதிகமில்லை என்பதால் "விண்டோ ஷாப்பிங்" செய்துவிட்டு (பிளாட்டினம் காயின் முதற்கொண்டு எல்லாம் கிடைக்கிறது), வண்டி ஏறினோம்.

ஆனால், சில பிரபல மால்களையும் விடவில்லை. துபாய் மால், தேரா மால், எமிரேட்ஸ் மால் ஆகியவை மிக பிரமாதமாக இருக்கின்றன. துபாய் ஷேக்குக்கு துட்டு அதிகம் என்ற காரணத்தினால், ஊரையே ஏசி செய்து வைத்ததோடு நில்லாமல், பஸ்சுக்கு காத்திருக்கும்போதும் பொது மக்கள் வெயிலில் வாடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பஸ் ஸ்டாப் வரை ஏசி செய்திருக்கிறார் (படம் கீழே);


மறுநாள், துபாய் பாலைவனத்திற்கு சென்றோம் (Desert Safari ). எல்லாமே இருந்தும் சுற்றுலா மூலம் நல்ல வருவாய் வரும் என்று தெரிந்தும், சர்வ அலட்சியத்துடன் இருக்கும் நாம் எங்கே, வெறும் பாலைவனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதன் மூலம் விதவிதமான சுற்றுலா திட்டங்களை வைத்து வெளிநாட்டு பயணிகளைக் கவரும் துபாய் எங்கே! பாலைவன சவாரி, அதிகாலையில் பாலைவனத்தில் இருந்து பெரிய, பெரிய பலூன்கள் மூலம் சூரிய உதயத்தை ரசிக்க பிரமாதமாக ஏற்பாடுகள், பாலைவனத்தில் இரவு பிரத்யேக கூடாரங்களில் தாங்கும் வாய்ப்பு, இரவு நடனத்துடன் (belly dance ) உணவு என்று ஏராளமாக இருக்கின்றன.




பாலைவன மணலில் சும்மா சர்வ சாதாரணமாக ஒரு கையிலேயே காரை ஓட்டிய (மறு கையில் செல் போன்) அந்த ஓட்டுனரைப் பாராட்டவேண்டும். 

மறு நாள் அலுவலக வேலையாக துபாய் இண்டர்நேஷனல் ட்ரேட் சென்டர் வரை சென்று விட்டு, மதியம் உலகின் மிக உயரமான கட்டிடமான "புர்ஜ் காலிபா (Burj Khalifa ) சென்றோம். 




மேலே இருக்கும் மூன்று படங்களுமே புர்ஜ் காலிபாவின் 124 லெவலில் இருந்து எடுத்தவை
ஏறத்தாழ 2718 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் 164 மாடிகள் உள்ளன. பொதுமக்கள் 124 மாடிகள் வரைதான் அனுமதிக்கப்படுகிறார்கள்.  உலகின் மிக உயரமான கட்டிடம் என்பது தவிர மேலும் சில பெருமைகளும் இதற்கு உண்டு:
  • உலகின் மிக உயரமான தனித்த கட்டிடம் (tallest free - standing )
  • உலகில் அதிக மாடிகள் உள்ள கட்டிடம்
  • உலகில் அதிக உயரத்துக்கு செல்லும் மின்-தூக்கி (lift )
  • உலகில் அதிக உயரத்தில் இருக்கும் கண்காணிப்பு மேடை (observation  desk )
இந்தக் கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது துபாய் பரப்பளவில் எவ்வளவு சிறியது என்பது தெரிகிறது. 





பெட்ரோல் வளம் அதிகம் என்பதால் தங்கம் கூட ATM மெஷின் மூலம் கிடைக்கிறது. (படம் கீழே)


துபாயில் திருட்டு பயம் என்பது அறவே கிடையாது. திருட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. பெட்ரோல் விலையும், கார்கள் விலையும் குறைவு என்பதால் சிறிய கார்களைக் காண்பது அரிதாகவே இருந்தது. 

சாலைகள் மிக சுத்தமாக, பெரும்பாலும் காலியாகவே இருக்கின்றன (நம் சென்னை நெரிசலோடு  ஒப்பிடும்போது அப்படித் தெரிகிறதோ?) 






நான் சந்தித்த வரையில் இந்தியர்கள் (குறிப்பாகத் தமிழர்கள்) சற்று அதிருப்தியாகவே இருக்கிறார்கள். கடுமையான வேலை செய்தும் விலைவாசி மிக அதிகம் என்பதால் சேமிப்பு குறைவாகவே இருக்கிறது, குடும்பத்துடன் இருப்பது மிக கஷ்டமான காரியம் என்கிறார்கள்.

துபாயில் என்னை மிகவும் உறுத்திய விஷயம் இந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். விமான நிலையத்திலேயே சுற்றுலா பயணிகள் என்று தெரிந்தும் மரியாதை குறைவாகவே நடத்துகிறார்கள். இமிக்ரேஷன் வரிசையில் நிற்கும்போதே தேவையே இல்லாமல் ஒரு செக்யூரிட்டி அதிகாரி "லைன் மே ஜாவ்" என்று நாய் மாதிரி குலைத்துக் கொண்டிருந்தான். பெரும்பாலான இந்தியர்கள் பலி கடா மாதிரி தலையைக் குனிந்து கொண்டே செல்கிறார்கள். இமிக்ரேஷன் வரிசை எவ்வளவு நீளமாக இருந்தாலும் தெரிந்தவர்கள் வந்தால் (குறிப்பாக இஸ்லாமியர்கள்) செக்யூரிட்டி அதிகாரிகள் அவர்களைப் போற்றி பாதுகாத்து கொண்டுபோய் வரிசையில் முதலில் நிற்க வசதி செய்கிறார்கள்.

பயணம் முடிந்து விமானம் ஏறியபோது என் மனைவியிடம் இருந்து ஒரு கேள்வி, "இவ்வளவு முறை சிங்கப்பூர் சென்று வருகிறீர்களே, எது பெஸ்ட், சிங்கப்பூரா, துபாயா?"

என்னைப் பொறுத்த வரை துபாய் என்ன முக்கினாலும், எவ்வளவு புர்ஜ் காலிபா வந்தாலும் சிங்கப்பூரை நெருங்கக் கூட முடியாது. எல்லாவற்றையும் விட சிங்கப்பூரில் மனிதாபிமானம் அதிகம் என்பதே என் கருத்து.

Comments

very useful information
Thank u

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்