ஏற்றுக்கொள்ளும் வேடம் எதுவானாலும் அதை சிரமேற்கொண்டு சிறப்புடன் செய்யும் ஒரு மிகச் சிறந்த நடிகர் கமல் ஹாசன். அவருடைய இன்றைய வெளியீடான மன்மதன் அம்பு அவருடைய அர்பணிப்புக்கு ஒரு உதாரணம். நடிப்பு, பாடல், திரைக்கதை, வசனம் என்று ஏகப்பட்ட பொறுப்புகளை சுமந்தாலும் எல்லாவற்றையும் செவ்வனே செய்திருக்கிறார் நம் உலகநாயகன்.
கமல்-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் எந்தப் படமும் தோற்றதில்லை. இந்தப் படமும் அதை நிரூபிக்கிறது.
எந்த இடத்திலும் தொய்வு விழாமல் கொண்டு செல்லும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை நிச்சயம் பாராட்டவேண்டும். கமலின் நடிப்பைப் பற்றி நாம் எதுவும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தவரை கமல் மிகவும் மெனக்கெடவில்லை என்றே எனக்குப்படுகிறது. தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவன் அழகாக சிரிக்கிறார், அளவாக நடிக்கிறார். ரொம்பவும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்புக்கு ஒரு சபாஷ். அம்புஜாக்ஷியாக வரும் த்ரிஷா மிக அழகாக இருக்கவேண்டும் என்றே ஒரே நோக்கில் ஒரு ஷோகேஸ் பொம்மை மாதிரிதான் வருகிறார். இவர்களைத் தவிர ஏராளமான நடிகர்கள் இந்தப் படத்தில். யாருக்கும் இரண்டு சீனுக்கு மேல் இல்லை.
இசை அமைத்திருக்கும் தேவிஸ்ரீ பிரசாத் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நல்ல உழைப்பு. கமல் படம் என்பதால் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார், வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் எழுத்தாளர் ஞானியின் மகன் என்று கேள்விப்பட்டேன். அட்டகாசமான ஒளிப்பதிவு. முதல் படமா என வியக்கவைக்கும் அளவு அருமையான வேலை. வாழ்க வளமுடன்.
மிகச் சிறிய வேடம் என்றாலும் ரமேஷ் அரவிந்த் நன்றாக நடிக்கிறார். ஒரே காட்சியில் வந்தாலும் சூர்யா அசத்திவிட்டு போகிறார்.
நிறைய இடங்களில் வசனத்தில் கிரேசி மோகன் சாயல் தெரிகிறது. பேசாமல் அவரையே எழுதச் சொல்லியிருக்கலாம், இன்னுமொரு அவ்வை ஷண்முகி கிடைத்திருக்கும்.
வில் ஸ்மித் நடித்து 1996 ம் ஆண்டு வந்து ஹிட்ச் (Hitch) என்ற படத்தின் சாயல் என்றாலும், கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும் அதை மறக்கச் செய்துவிடுகிறார்கள்.
மன்மதன் அம்பு-ரசிகர்களின் நெஞ்சில் பாயவேண்டி எய்தது. குறி தப்பவில்லை.
Comments
The climax is not palatable. The way they change the lovers as if they are changing their dress will not be acceptable to common man. It may be acceptable to the intellectuals.