மணி ரத்னம் இதுவரை இயக்கிய படங்களில் என்னுடைய முதல் மதிப்பெண் மௌன ராகம் படத்திற்குத்தான். கணவன்-மனைவி இடையே நடக்கும் ஒரு மெல்லிய போராட்டத்தை மிக அழகாக, ரசிக்கும்படி சொல்லியிருப்பார். நிறையபேர் அவருடைய Magnum Opus நாயகன் படம்தான் என்பார்கள். உண்மை. ஆனால் அது God Father படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பதால் அதை அவருடைய "பெஸ்ட் ஒரிஜினல் மூவி" என்ற வரிசையில் சேர்க்ககூடாது.
என் நண்பன் நாகு, ராவணன் படத்தைப் பார்த்துவிட்டு "ஒரு ராம நாராயணன் படத்திற்கு எப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போவாயோ அதே போல இந்த படத்திற்கும் போ, உன்னால் ரசிக்க முடியும்," என்று சொன்னபோது, என் மனதில் இரண்டு எண்ணங்கள் ஓடின. ஒன்று, நான் ராம நாராயணன் படங்களை இது வரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்கும் ஐடியா ஏதும் இல்லை. இரண்டு, அவ்வளவு மட்டமாகவா இந்த படம் இருக்கும்?
இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே ஏராளமான விமரிசனங்கள் வந்துவிட்டதால் நான் ஒரு சிறிய வித்தியாசத்தை செய்யலாம் என நினைத்தேன்; இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் வடிவங்களைப் பார்த்துவிட்டு அவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. நான் சமீப காலமாக ஹிந்தி படங்களைப் பார்ப்பதில்லை. அவை பெரும்பாலும் குப்பையாக இருக்கின்றன என்பது மட்டுமல்ல காரணம், இருக்கின்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதற்கே நேரம் இல்லாமைதான்.
- இரண்டிலுமே முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒருவர் என்றால் அது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்கள்தான். அருமையான, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் எனத் தோன்றும் துல்லியமான ஒளிப்பதிவு.
- இசை என்னைப் பொறுத்தவரை மிக, மிக சுமார் ரகம்தான். (உசிரே போகுது பாட்டு ஒரு விதிவிலக்கு)
- ஐஸ்வர்யா ராய் ஒரு பொம்மை மாதிரி வந்துபோகிறார். இதற்கு கோடிகளைக் கொட்டி கொடுக்கவேண்டுமா? இதே கதாபாத்திரத்தை ஒரு சினேகா அல்லது தமன்னா செய்திருக்கமுடிய்ம் என்பது என் கருத்து.
- ஹிந்திப் பதிப்பில் கோவிந்தா செய்திருக்கும் ரோல் நிச்சயமாக தமிழில் கார்த்திக் செய்ததை விட நன்றாக இருக்கிறது.
- பிரபு எதற்க்காக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என தெரியவில்லை. வீணடிக்கப்பட்ட ஒரு ரோல்.
- ஹிந்திப் பதிப்பில் விக்ரமின் தேவ் ரோல் மிக அருமை. அதில் பத்தில் ஒரு பங்கு கூட தமிழில் ப்ரிதிவிராஜ் செய்யவில்லை.
- அதேபோல தமிழ் பதிப்பில் விக்ரம் செய்ததை ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நெருங்கக் கூட முடியாது. இதைப் போல ஒரு சொதப்பல் நடிகரை மறுபடி, மறுபடி தன்னுடைய படங்களில் மணி ரத்னம் எப்படி சான்ஸ் கொடுக்கிறார் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி.
- இந்த லட்சணத்தில் படத்தில் எடிட்டிங் சரியில்லாமல் போனதால் படம் தோல்வி அடைந்ததாக அமிதாப் அவருடைய blog இல் பிலாக்கணம் பாடியிருக்கிறார். பாவம், அவருடைய பையன்தான் என்றாலும் நடிப்பு வரவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே முறை?
- இதைப் போல ஒரு கதையை மணி ரத்னம் ஏன் தேர்வு செய்தார் என்பது இன்னுமொரு பெரிய கேள்விக்குறி.
- சமீபகாலமாக மணி ரத்னம் படம் என்றாலே சுஜாதா வசனம் என்பது ஒரு கூடுதல் பலமாக இருந்தது. இதில் வசனம் சுஹாசினியாம். அய்யோ பாவம் மணி ரத்னம். ஏன் பாலகுமாரன் போன்ற புத்திசாலிகளை அணுகவில்லை? வசனமா அது? படு உளறல். சொல்லிக்கொள்ளும்படி ஒரு வசனம் கூட இல்லை.
- தேர்ந்தெடுத்திருக்கும் இடங்கள் எல்லாமே அமர்க்களம். இதில் மணி ரத்னம் 100% பெறுகிறார்.
- மணி ரத்னத்தின் அடுத்த படம் ஹிந்தியில் என்கிறார்கள். வாழ்த்துக்கள்.
வரும் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று பார்ப்பதற்காக முறையே Inception (என்னுடைய அபிமான நடிகர் Leonardo DiCapiro, மற்றும் இயக்குனர் Christopher Nolan) , அனந்தபுரத்து வீடு & களவாணி ஆகிய படங்களுக்கு சத்யம் தியேட்டரில் முன்பதிவு செய்துவிட்டேன். இந்தப் படங்களின் விமரிசனங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.
Comments
If you go with a Mani-movie mind set up then it will be a very big disappointment. Otherwise the movie is enjoyable