சில வருடங்களுக்கு முன் நண்பன் ஷங்கர் Wales சென்றுவிட்டு திரும்பியபோது, அங்கு Nando's Chicken என்கிற போர்ச்சுகீஸ் (Portugese) வகை grilled chicken சாப்பிட்டதாகச் சொல்லி அதனுடைய தனித்துவமான (unique) சுவையைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனான். புதிதாக சந்தைக்குள் வரும் பிசினஸ் ஐடியாவையெல்லாம் முயன்று பார்க்க நினைக்கும் என்னிடம் நண்டோஸ் பெரி-பெரி சிக்கனின் சென்னை franchise உரிமையை முயன்று பார்க்கச் சொன்னான். அதற்கு முன் அந்த பெரி-பெரி சிக்கனில் அப்படி என்னதான் இருக்கிறது என்று முயன்று பார்க்கலாம் என்று நினைத்தேன். இந்தியாவில் நண்டோசின் ஒரே ஒரு கிளை மும்பையில் மட்டுமே உள்ளது எனத் தெரிந்தது.
சரி, மும்பை செல்லும் போது முயற்சிக்கலாம் என விட்டுவிட்டேன். பிறகு சில மாதங்களில் கோலாலம்பூர் (மலேசியா) சென்றபோது, அங்குள்ள KLCC எனப்படும் ஷாப்பிங் மாலில் நண்டோசின் பெரி-பெரி சிக்கன் கடையைப் பார்த்தவுடன் குஷியாகி அங்கு சென்றபோது மறக்கமுடியாத culinary experience கிடைத்தது. பெரி-பெரி சிக்கனின் வியாபார ரகசியமே அதனுடைய நாக்கைச் சப்புகொட்ட வைக்கும் பெரி-பெரி சாஸ் (sauce) தான். அது என்ன பெரி பெரி என்பவகர்களுக்கு இதோ ஒரு சின்ன, சுவையான அறிமுகம்:
பெரி-பெரி ஒரு மிகச் சிறிய மிளகாய். இதன் பூர்விகம் தென் ஆப்ரிக்கா என்று ஒரு செய்தி. இந்த சிறிய மிளகாய் பார்ப்பதற்கு பிலி-பிலி என்ற பறவையின் கண் போல இருந்ததால் அந்த பெயர் என்று சொல்லுவார்கள். பின்னாளில் இந்த மிளகாய் போர்ச்சுகீஸ் வந்த போது பிலி-பிலி என்பதை அவர்கள் பெரி-பெரி என்று உச்சரிக்க அதுவே அதன் பெயராகிவிட்டது. இந்த சிறிய மிளகாயில் ஏகப்பட்ட காரம் இருப்பதை உணர்ந்த போர்சுகீஸ் மக்கள் அதை தாராளமாக உணவில் சேர்க்க தொடங்கினர். போர்சுகீஸ் உணவு கிட்டத்தட்ட நம்முடைய இந்திய உணவைப் போலவே காரம் சற்று அதிகமாகவே இருக்கும்.
1900 களின் ஆரம்பத்தில் போர்சுகீஸ் மக்கள் கூட்டம் கூட்டமாக வேலை செய்யும் போது திறந்த வெளிகளில் மணல் அடுப்பின் மேல் கோழியை சுட்டு அதன் மேல் பெரி-பெரி மிளகாயின் கலவையை தடவி பரிமாறிய போதுதான் பெரி-பெரி சிக்கன் உதயமானது. இந்த மிளகாய் கலவை பின்னாளில் ஒரு பெரும் வியாபார வெற்றி பெற்றது. இதன் கலவையில் என்னென்ன உள்ளது என்பது இன்று வரை கோகோ-கோலாவின் formula வைப் போல பெரும் ரகசியமாகவே விளங்குகிறது.
1987 இல் முதல் பெரி-பெரி சிக்கன் கடை ஜொஹன்னஸ்பர்க் நகரில் சிக்கன் லான்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இதுவே நாண்டோஸ் சிக்கன் (Nando's Chicken) என்று பெயர் மாற்றம் பெற்றது, காரணம் இதன் உரிமையாளர் பெயர் Fernando.
இன்று உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் இந்த பெரி-பெரி சிக்கன் KFC மற்றும் McDonalds போல fast food வகையைச் சேராது. இதன் கோழிகள் செயற்கையாக தயாராவதில்லை. முழுக்க, முழுக்க க்ரில்லிங் முறையில் கோழி சுடப்படுவதால் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கப்படுவதில்லை. எனவே உடலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என்று சொல்லுகிறார்கள்.
ஓகே, ஆரம்பத்தில் நண்பன் ஷங்கர் எனக்கு நண்டோஸ் சிக்கன் franchise இந்தியாவில் ஆரம்பிக்க ஐடியா கொடுத்ததை சொல்லி இருந்தேன் அல்லவா? அதன் மாஸ்டர் francise மும்பையில் இருப்பதால் அவர்களுக்கு என் விருப்பத்தை எழுதி சென்னையில் அதன் franchise ஆரம்பிக்கும் விருப்பத்தை தெரிவித்து அதற்கு எவ்வளவு கட்டணம் எனக் கேட்டிருந்தேன். சில்லரையாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆகும் என உடனே பதில் வந்தது. என்னிடம் சில்லரையாக சுமார் ஒரு கோடியே நாற்பத்தொன்பது லட்சம் கம்மியாக இருக்கிறது என்பதால், பெரி-பெரி ஸாசை சாப்பிட்டு இதுபோல அவ்வபோது blog பதிவு மட்டும் செய்யலாம் என விட்டுவிட்டேன்.
மும்பை அல்லது சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூர் செல்லும் நண்பர்கள் இந்த பெரி-பெரி சிக்கனைச் சுவைத்து மகிழலாம். அல்லது, குறைந்தபட்சம் பெரி-பெரி ஸாஸ் பாட்டில்களில் விற்கப்படுகிறது. இதில் அசைவ சமாசாரம் ஏதுமில்லை, வெறும் மிளகாய் கலவைதான். முயன்று பாருங்கள்.
Comments