எங்க ஊரு வாசம்: பாரத தேவி
விருந்தாளிக்கு வெண்கலப் பானை தண்ணி
வெண்கலத்தில் சாமான்களைப் புழங்கியதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பின் கிழக்குப் பார்த்த மூலையில் இரண்டு குடம் தண்ணீர் பிடிக்கும் வகையில் பெரிய, பெரிய பானைகள் ரொம்ப பவுசாக உட்கார்ந்திருக்கும். இந்தப் பானைகள் அங்கே இருக்கும் எல்லாப் பொருட்களிலும் பிரதானமானது.
ஒருமுறை, அல்லது இரண்டு நெல்லுச் சோறு பொங்கும்போது அந்தத் தண்ணியை இந்தப் பானையில் ஊற்றி ஒரு கை உப்பைப் போட்டுவிடுவார்கள். இரண்டு நாள் கழித்து அந்தத் தண்ணி புளித்துப் போகும். பிறகு அதில் இரண்டு குடம் பச்சைத் தண்ணியை ஊற்றி விடுவார்கள். அது கிராமத்து எளிய சனங்களுக்கு.
அமுத சுரபியாக மாறிவிடும். ஏனென்றால் இப்போதையது போல் அப்போது ஒரு கிலோ அரிசியை ஆக்கி, சூடாகச் சாப்பிட முடியாது. அப்போது பெரும்பாலும் கூட்டுக் குடும்பம்தான். அதோடு பிள்ளைகள் பிறப்பதைத் தடுக்க எந்தத் தடையும் இல்லாததால் ஒவ்வொருவரும் பத்துப் பிள்ளைகள் வரை அண்டியும் சவலையுமாகப் பெற்று எடுத்தார்கள்.
அதனால் ஒரு வீட்டுக்கு வரகரிசி, குருதவல்லி அரிசி ஏதாக இருந்தாலும் இரண்டு படி வரை ஆக்க வேண்டும். அந்தச் சோறு மறுநாள்வரை கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென்று இந்தப் புளித்த தண்ணியில் நாலு போனி மோந்து ஊத்தி உலை வைக்க வேண்டும். அதோடு காய்ச்சிய சோறையும் உருட்டி, உருட்டி இந்தப் பானையில் போட்டு விட்டால் எட்டு நாள் சென்றாலும் கெட்டே போகாது. வயிற்று வலிக்கு,
உடம்பு சூட்டுக்கு இந்தத் தண்ணியை ஒரு சொம்பு மோந்து உப்புப் போட்டு ஆற்றிக் குடித்துவிட்டால் போதும் சூடு இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப்போகும். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து விருந்தாளிகள் வந்தால் எப்போதும் நடந்துதான் வருவார்கள். நல்ல உச்சி வெயிலில் வருபவர்களுக்கு வந்ததும் வராததுமாய் இந்தத் தண்ணியில ஒரு சொம்பு மோந்து கொடுத்துவிட்டால் போதும் கப்பென்று வயிற்றுப் பசி அடங்கி உடம்பும் மனமும் குளிர்ச்சியாகிவிடும். பிறகு பேசிக்கொண்டே ஒரு வெற்றிலையைப் போடுபவர்கள். இரவு வந்த பின்புகூடச் சாப்பாட்டை நினைக்கமாட்டார்கள்.
புதிதாகக் கல்யாணமாகி வீட்டுக்கு வரும் புது மணப்பெண்ணை முதன்முதலில் இந்தப் பானையைத்தான் தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். அடுத்து 'உப்பு மறவை'. அதற்கடுத்து வீட்டின் ஓரமாக இருக்கும் ஏர் கலப்பை. பிறகு ஆடுகளும், மாடுகளும் நிறைந்த மாட்டுக் கொட்டாக்கள்.இந்தப் புளித்த தண்ணியில் சோறு ஆக்குவதால் பித்தளைப் பாத்திரங்களில் சாப்பிட முடியாது.
அதனால் அந்தக் காலம் வெண்கலத்தில் சாப்பிடுவதற்கான பாத்திரங்கள் இருந்தன. அந்தப் பாத்திரமும் அப்படிக் கனக்கும். சருவம், குடங்களும் அப்படித்தான் கனக்கும். இவற்றையெல்லாம் குளங்கள், கிணற்றடிக்குக் கொண்டுபோய் புளியும், செங்கல் பொடியும் சேர்த்து பளபளப்பாக்குவது குமரிகளின் வேலை. அதோடு ஒவ்வொரு வீட்டிலும், ஒரு துட்டு (தாமிரம்) சருவம் இருக்கும். உடம்பு வலி, இளைப்பு, சுறுசுறுப்பும் தூக்கமுமில்லாமல் இருக்கும் நோயாளிகள் இந்தச் சருவத்திலிருந்து தண்ணீரை மொண்டு குடித்தால் எல்லா நோயும் குணமாகும் என்று அந்தச் சருவத்திலிருந்து தண்ணீரைக் குடிப்பார்கள்.
இதில் இளவட்டங்களுக்கான வேலைகள் பிஞ்சையில் இருக்கும் ஆமணக்குச் செடிகளை வேரோடு பிடுங்கிவந்து வீடு சேர்ப்பது. செதில் செதிலாய் இடிந்தும் சரிந்தும், வீட்டுக்குள் கண்ட இடமெல்லாம் எலிகள் தோண்டியிருக்கும் பொந்துகளை மூடவும் கூடை, கூடையாய் மண் சுமந்து கொண்டுவந்து போடுவார்கள். பிறகு கயிறு இழுக்கும் போட்டி, கம்பு விளையாட்டு, மாட்டு வண்டி ஒட்டம் என்று எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்பதற்காகத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளப் புறப்பட்டுவிடுவார்கள்.
இந்தப் பொங்கல் நாளில் சிறுவர்களுக்கான வேலையும் உண்டு. அக்கா, தங்கச்சிகளுக்காக வேலிகளுக்குப் போய் மருதாணி பறித்து வருவது, நெற்றியில் வைக்க பொட்டு சேர்ப்பதற்காக நாட்டுக் கருவலங்காய் பெறக்கி வருவது. இந்தக் கருவலங்காயை நன்றாக இடித்து ஒரு செறட்டையில் சாறு பிழிந்து அதில் லாடத்தின் முனையை வைத்துவிட்டால் போதும். கருப்புப் பொட்டாகிவிடும். சிறு குழந்தைகளிலிருந்து பெரிய ஆட்கள்வரை நெற்றியிலும், கன்னத்திலும் வைத்துக்கொள்ளலாம், தோலுக்கும் நல்லது. உடம்புக்கும் குளிர்ச்சி.
--நன்றி: தமிழ் இந்து
Comments