தனி ஒருவரின் கடைசி ஆசையால் கர்நாடகாவில்
ஒரு கிராமமே கண் தானம் செய்தது
கர்நாடகாவில் சாலை விபத்தில் உடல் இரு துண்டாகி இறக்கும் தருவாயிலும் உறுப்பு தானத்தை வலியுறுத்திய ஹரீஷின் வேண்டுகோள்படி, அவரது கிராமமே கண் தானம் செய்துள்ளது. ‘இறந்தும் உலகை பார்க்கலாம்’ என தனி ஒருவன் ஏற்படுத்திய விழிப்புணர்வு, அங்கு பல நெகிழ்ச்சி சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.
துமகூரு மாவட்டம் கெரேகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (26), பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 16-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியதில் ஹரீஷின் உடல் இரு துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் கூறும்போது, “நான் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்” என காப்பாற்ற வந்தவர்களை கைகளை கூப்பி கேட்டுக்கொண்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 20 நிமிடங்களில் ஹரீஷ் உயிரிழந்தார்.
இதையடுத்து கடைசி ஆசையின்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சேதமடைந்ததால் தானம் செய்ய இயலவில்லை. ஹரீஷின் உருக்கமான இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து கர்நாடகாவில் கண் தானம், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களில் மாநிலம் முழுவதும் ஹரீஷின் பெயரால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பு தானம் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுபோல ஹரீஷின் சொந்த ஊரான கெரேகவுடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் கண் தானம் செய்ய விரும்பு வதாக அறிவித்தனர். இதை யடுத்து பெங்களூரு நாராயணா நேத்ராலயா கண் மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். இதில் முதல் நபராக ஹரீஷின் தாயார் கீதாம்மா (62) கண் தானமும், உறுப்பு தானமும் செய்வதாக கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, 11 முதல் 83 வயதானவர்கள் வரை கண் தானம் செய்வதற்கான உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதில் 102 பெண்கள், 89 ஆண்கள், 9 சிறுவர்கள் என மொத்தம் 200 பேர் தங்களது கண்களை தானம் செய்வதாக பதிவு செய்துள்ளனர். 11 வயதான பூமேஷ் என்ற 5-ம் வகுப்பு மாணவனும் கண் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானம் செய்வோம்
இதுகுறித்து ஹரீஷின் தாயார் கீதாம்மா கூறும்போது, “எனது மகனின் கடைசி ஆசைப்படி, கண்கள் தானம் செய்யப்பட்டது. இதனால் எனது மகனின் கண்கள் இன்று உலகை பார்த்துக் கொண்டிருக்கிறது. இறந்த பிறகு விலை மதிப்பில்லாத நம்முடைய கண்கள், உறுப்புகள் வீணாக மண்ணில் புதைக்கப்படுகின்றன.
நாம் இறந்தாலும், நம்முடைய கண்கள் உலகைப் பார்க்க வேண்டும். கண் தெரியாதவர் களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் கிராமத்தில் இதுவரை 200 பேர் கண் தானம் செய்துள்ளனர். இன்னும் 180 பேர் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். எங்களுடைய கிராமத்தைப் போலவே அனை வரும் கண் தானம், உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
நன்றி: தமிழ் இந்து
Comments