எங்க ஊரு வாசம்: பாரத தேவி
புது நெல்லு புதுச் சோறு!
பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழி இந்த மாதத்துக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது. போன வருசத்திலிருந்து இதுவரை ஆக்கிக்கொண்டிருந்த பழைய பானைகளையெல்லாம் கழித்துவிடுவார்கள். அப்படிக் கழிக்கும்போது கோழிகளின் அடை ஓட்டுக்காக, பயறு வகைகளை வறுப்பதற்கு வரையோட்டுக்காக, குத்தும் உரலுக்கு வாப்பட்டிக்காக, பானையின் வாவளையத்தை பிரிமணைக்குப் பதிலாக... இப்படித் தேவைக்கு ஏற்றபடி பானைகளை உடைத்துத் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்வார்கள். அதோடு புதுப்பானையில் வெள்ளையடிப்பதற்கான சுண்ணாம்பைப் போட்டால் பானை அப்படியே விரிந்துவிடும் அதனால் அதற்கும் பழைய பானைதான் தேவைப்பட்டது.
இப்படிப் பானைகளைக் கழித்த பின் வீட்டின் கதவுகள், ஏர் கலப்பை, மோக்கா, மோனி, பின்உருளை, முன்உருளை, குத்துக்கால் என்று அனைத்தையும் தூக்கிக் கொண்டுபோய் குளத்தில் போட்டு எல்லாவற்றையும் துப்புரவாகக் கழுவி கொண்டுவருவார்கள்.
பொங்கல் வருவதற்கு முன்னால் நெல்லைத் தவிர வெவ்வேறு தானியங்களை எடுத்து புதுச் சோறு ஆக்கிவிடவேண்டும். அப்போதுதான் பொங்கலன்று நெல்லுச் சோறு ஆக்கலாம். அப்போதெல்லாம் நெல்லுச் சோறு என்பது கிடைக்காத அரிய உணவாக இருந்தது.
இப்படி ஒரு நல்ல நாள், தீய நாளைக்குத்தான் நெல்லுச் சோற்றைப் பார்க்க முடியும். இந்தச் சோற்றைப் பொங்கலுக்குச் சாப்பிட வேண்டுமென்பதற்காகவே சாமை, தினை, குருதாலி இந்த மூன்ற தானியத்தையும் ஒன்றாகப் போட்டு அவித்து காயவைத்துக் குத்தி, புடைத்து ஒரு நல்ல நாளில் விரதமிருந்து சோறாக்குவார்கள். வாழையிலை, தேக்கு இலை இரண்டும் கிடைக்காவிட்டால் தாமரையிலை போட்டு உற்றார், உறவினர்களை எல்லாம் கூப்பிட்டு மார்கழி மாதத்திலேயே புதுச் சோறு ஆக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள்.
பொங்கல் நெருங்க, நெருங்க ஊருக்குள் இருக்கும் எல்லாருக்குமே வேலை செய்து முடியாது. துணி வெளுப்பவர் பொங்கலுக்கு எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் துணியை வெளுத்துக் கொடுக்க வேண்டுமென்று ‘வெள்ளாவி’ வைப்பதற்கு முள்ளு, மொடலு என்று எல்லாச் செடிகளையும் வெட்டிச் சேர்ப்பார். இரண்டு கழுதைகளோடு ‘உவர்மண்’ இருக்கும் இடம் தேடி தூரமான காடுகளுக்கு, வயல்களுக்குப் போய் மண்ணை அள்ளிக்கொண்டு வருவார்கள். உவர் மண்ணில் அழுக்குத் துணிகளை முக்கி வெள்ளாவியில் வைத்து அவித்து, சூடு ஆறிய பின் அடித்துத் துவைத்துப் பிழிந்து எடுத்துவிட்டால் போதும். எந்த மாதிரி கசடு அழுக்காக இருக்கும் துணிகூடப் பளிச்சென்று இருப்பதோடு உவர்மண்ணின் வாசனையில் துணிகள் கமகமக்கும்.
பெண்களுக்குப் பொங்கலுக்கான அரிசி, பருப்பு சேகரித்து வைப்பது பெரிய வேலை. ராஜகிரீடம் சூட்டியவாறு மூடைகளில் இருக்கும் நெல்லை எடுத்து அவித்துக் காயப்போட்டுக் குத்தி, அரிசியாக்க வேண்டும். நெல்லில் தோட்டச் சம்பா, புழுதிச் சம்பா, வையக்கொண்டான், மூங்கிச் சம்பா, வெள்ளைக் கொட்டான், கரு கொட்டான், மணவாரி என்று இன்னும் நிறைய வகைகள் உள்ளன. அவற்றைப் பானை, பானைகளாக அவித்துத் தட்டி, காயப்போட வேண்டும். உளுத்தம் பருப்பைத் தவிர காணப் பயறு, கல்லுப் பயறு என்று எல்லா பயறுகளையும் வரையோட்டில் இட்டு வறுக்க வேண்டும். வெஞ்ஞனத்திற்கு தேவையான மசால் சாமான்களை வறுக்க வேண்டும்.
பெரியவர்களுக்கு இப்படி வேலையென்றால் குமரிகளுக்கு அவித்த நெல்லைக் குத்தி அரிசியாக்க வேண்டும், வறுத்த பயறுகளைத் திருவையிலிட்டு உடைத்துப் பருப்பாக்க வேண்டும். மசாலா சாமான்களை இடித்துப் பொடியாக்க வேண்டும். அப்போது சல்லடை என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் சொளகு (முறம்)தான். பித்தளை சாமான்கள், வெங்கல சாமான்கள், துட்டுச் சருவங்கள்தான் அப்போது புழகத்திலிருந்தன. முக்கியமாகச் சாப்பிடுவதற்கு வெண்கலத்தில்தான் வட்டில், கும்பா. வெஞ்ஞனம் வைக்கும் கொட்டுக்கூடை, கஞ்சியைக் கரைப்பதற்கு கட்ரா, நாக்கொண்ட சொம்பு என்று அனைத்தும் வெண்கலத்தில்தான் இருக்கும்.
--நன்றி: தமிழ் இந்து
Comments