எங்க ஊரு வாசம் ---பாரத தேவி
உண்மையான கிராமத்து வாழ்க்கை எப்படியிருந்தது, இயந்திரமயமாகி விட்ட வாழ்வில் நாம் என்னவெல்லாம் தொலைத்துவிட்டோம் என நினைத்து பெருமூச்சு விடவைக்கும் ஒரு அருமையான பதிவு.....
வாழ்வோடு கலந்த பொங்கல்
தைமாதம் பிறக்கப் போகிறது. அதனால் விவசாயிகள் எல்லோரும் ரொம்பவும் மகிழ்ச்சியாயிருந்தார்கள். ஏனென்றால் காடுகளிலும், வயல்களிலும் விளைந்த தானியங்களை எல்லாம் வீடு கொண்டு வந்து சேர்த்தாகிவிட்டது. அவை பெரிய, பெரிய குலுக்கைகளிலும், மூடைகளிலுமா வீடு நிறைந்து இருக்கின்றன. அதோடு இருந்த தட்டை, தாள்களை அறுத்துக்கொண்டு வந்து ஆடு, மாடு தீவனங்களுக்காக உயரமும் நீளமுமான படைப்புகளாக அடுக்கியாகிவிட்டது.
பிரிந்தும் தளர்ந்தும் இருந்த மழைக்கு ஒழுகிக்கொண்டு இருந்த கூரை வீடுகளைப் பிரித்து கம்பந்தட்டை, தரகு, பனைஓலை என்று கொண்டுவந்து கச்சிதமாக வேய்ந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு வீடு ஒழுகுமே என்ற கவலை இல்லை. புதுத் தானியமும், புதுக் கூரையும், புதுப் படப்பின் மணமுமாக மேகாற்றோடு வீசி கிராமம் எங்கும் மணம் பரப்ப, விவசாயிகளும், அவர்களின் குடும்பங்களும் நெஞ்சு நிறைய சுவாசித்து மகிழ்ந்தார்கள்.
ஆடி மாதத்திலிருந்து வெறும் கோவணமும் தலைப்பாக்கட்டுமாக வெற்று உடம்போடு அலைந்த விவசாயி எல்லோர் இடுப்பில் ‘லங்கோடும்', தோளில் துண்டுமாக மகிழ்ச்சியோடு மந்தையிலிருக்கும் ஆலமரத் திண்டில் உட்கார்ந்து பேசியவாறு பொழுதைக் கழித்தார்கள். ஆடு, புலி, ஆட்டம் ஆடினார்கள்.
‘தைபிறந்தால் வழிபிறக்கும்' என்ற பழமொழியின் சொல் புதிதாகக் கல்யாணம் முடிக்கவும், வீடு கட்டுவதற்காகவும் என்று இருந்தாலும்கூட வெள்ளாமை அறுத்த தரிசுகளில் அவரவர் இஷ்டத்திற்கு ஒற்றையடிப் பாதையாகவும், வண்டிப் பாதையாகவும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகவும் தோதாகக் கிளைபிரிந்து சென்றன.
அந்தப் பாதைகளின் வழியே தானியங்களை வாங்கிப் போக வியாபாரிகள் வந்தார்கள். பொங்கலுக்கான புதுச் சட்டிப் பானைகளைச் சுமந்துகொண்டு வியாபாரிகள் வந்தார்கள் ஊருக்குள்ளேயே ‘உலை' போட்டு அரிவாள், சொறண்டி, வம்பட்டி ‘செறப்பான்' அரிவாள்மனை இத்தனையும் தீட்டிக் கொடுப்பதற்காக அதற்கான தொழிலாளர்கள் வந்தார்கள். அந்த காலத்தில் மூன்று படி, கம்பு, சோளம் என்று பெரும் பானைகளில் சோறு ஆக்கியதால் சில சமயம் பானையில் அடியில் கஞ்சி பற்றிவிடும். அதைச் சுரண்டி எடுப்பதற்காகத்தான் இந்தச் செறப்பான்கள்.
பொங்கலும், பொங்கலின் வேலையும் ஒரு பக்கமிருந்தாலும் வியாபாரி கொடுத்த நூறு ரூபாய் நோட்டைப் பார்க்க ஊரே கூடியது சிறு பிள்ளைகளும் அங்கே வந்து சேர்ந்தபோது ஊர்ப் பெரியவரான முத்தையா அவர்களை விரட்டினார்.
“வாங்க வாங்க பொங்க வருது உங்களுக்கெல்லாம் தலய சிரைக்க வேண்டாமா?” என்று அவர்களைப் பூவரச மரத்து நிழலில் உட்கார்ந்திருந்த முடிதிருத்துபவரிடம் கூட்டிக்கொண்டு போனார். அந்தக் காலத்தில் சிறுவர்களுகெல்லாம் வட்டக் குடுமிதான். ‘சேக்' என்றும் ‘கிராப்' என்றும் ஒன்றும் கிடையாது. பெரிய பெரிய ஆண்களுக்கும் குடுமிதான். அதாவது முன்புறம் கொஞ்சமாய் வெட்டிவிட்டு பின்புறம் முடி வளர்த்துக் கொண்டை போட்டுக்கொள்வார்கள். அது மட்டுமல்ல முடிவெட்டியதும் அப்படியே வீட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது. இரண்டு வயதுப் பிள்ளைகள் என்றாலும் கிணற்றுக்கோ, குளத்துக்கோதான் போக வேண்டும். பிறகு சில்லென்ற தண்ணீரில் குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் பெரியவர்களுக்கும் இதே கட்டுப்பாடுதான்.
--நன்றி: தமிழ் இந்து
Comments