Skip to main content

மடையர்களை போற்றுவோம்!!!!!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 3

இன்றைய நிலையில் ராஜசிம்ம மங்கலம் ஏரி (???)

நம் முன்னோர்களின் ஏரி தொழில்நுட்பங்களை அறிந்துக்கொள்வதற்கு முன்பாக ஏரிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வோம். மனிதன் வெட்டியது அல்லாமல் இயற்கையாகவே உருவாகும் ஏரிகளும் உண்டு. அவை 6 வகைப்படுகின்றன. பூமித் தட்டுகளின் அசைவால் உருவாவது டெக்டோனிக் (Tectonic) ஏரி (உ.ம்: டிசோ மொரீரி ஏரி-லடாக்). எரிமலை வெடிப்புகளால் உருவாவது வேல்கனிக் (Volcanic) ஏரி (உ.ம்: டவோடா ஏரி-ஜப்பான்). தொடர் காற்று வீச்சால் உருவாவது எயோலியன் (Aeolian) ஏரி (உ.ம்: சாம்பார் ஏரி-ஜெய்ப்பூர்). தொடர் நீர் பாய்தலால் உருவாவது புளுவியல்(Fluvial) ஏரி (உ.ம்: கபர்டால் ஏரி-பிஹார்). பனிப் பாறைகளின் சரிவுகளால் உருவாவது கிளாசியல் (Glacial) ஏரி (உ.ம்: சந்திராடால் ஏரி-இமாச்சலம்). கடலோர இயக்கங்களால் உருவாவது கோஸ்டல் (Coastal) ஏரி (உ.ம்: பழவேற்காடு ஏரி-சென்னை). 

ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளே அதிகம். இந்தியாவில் 2,52,848 ஏரிகள், குளங்கள் உள்ளன. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 1,66,283 ஏரிகள் உள்ளன. சரி, மனிதன் ஏரிகளை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதன் முதலில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்தான். மழை இல்லாதபோது மழை நீரை சேமிக்க ஆறுகளின் அருகே சிறு நீர் நிலைகளை ஏற்படுத்தினான். இதுவே ஏரியின் தொடக்கக் காலம். அடுத்ததாக ஆற்றில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டுவர ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக சவுக்கு, மூங்கில் கம்புகளை அடித்தார்கள். 

அவற்றின் இடையே கோரை மற்றும் நாணல் புற்களைக் கொண்டு அடைத்து, களிமண் பூசி சுவர்போல தடுப்பு ஏற்படுத்தினார்கள். இதன் பெயர் கொரம்பு. கொரம்பில் நீர் நிரம்பியபோது கால்வாய்கள் அமைத்து உயரமான இடங்களில் இருந்த குளங்களுக்கு நீரைப் பாய்ச்சினார்கள். இதுவே பிற்காலத்தில் அணைகள் அமைய அடிப்படையாக அமைந்தது.
பழந்தமிழர் நீர் நிலைகளை இலஞ்சி, வாவி, நளினி, கயம், கண்மாய், ஏரி, கோட்டகம், கேணி, குளம், மலங்கன், கிடங்கு, குட்டம், வட்டம், தடாகம், மடு, ஓடை, பொய்கை, சலந்தரம் என்று அழைத்தனர். 

அப்போது நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இதைத்தான் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார், 

‘நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண்தள்ளா தோரே’ 
 
(புறநானூறு 18) என்று பாடினார். அதாவது, ‘எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கரை அமைத்து நீர் நிலைகள் உருவாக்கிய மன்னர்களே இந்த உலகில் தங்களது பெயரை நிலை நிறுத்திக்கொள்வார்கள்’ என்கிறார் குடபுலவியனார். அதேபோல 10 வயது முதல் 80 வயது வரை குடிமராமத்துப் பணி செய்வது கடமையாக கருதப்பட்டது. இப்படியாக நீர் நிலைகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் பழந்தமிழர் வாழ்வோடு ஒன்றியதாக இருந்தது. 

நம் முன்னோர் ஏனோதானோவென்று ஏரிகளை வெட்டிவிடவில்லை. இன்றைய பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் சவால் விடுபவை அவை. பாண்டியன் மூன்றாம் ராஜசிம்மன் கட்டிய ராஜசிம்ம மங்கலம் ஏரி உட்பட, தமிழகத்தின் பாரம்பரிய ஏரிகளைக் கழுகுக் கண் கொண்டு பார்த்தால் அவை பிறை நிலவின் வடிவில் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, பழந்தமிழர் ஏரிகளை 8-ம் நாள் பிறை வடிவில் அமைத்தார்கள். ஏரிகள் இந்த வடிவத்தில் அமைவதால் கரையின் நீளம் குறைவாகவும், அதேசமயம் அதிக நீர்க் கொள்ளளவு கொண்டதாகவும் இருந்தன. இது சிக்கனமான வடிவமைப்பு முறை. இதைத்தான் சங்கப் புலவர் கபிலர், 

‘அறையும் பொறையும் மணந்த தனைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரிதன் பறம்பு நாடே’
என்று பாடினார். 

ஏரியை வடிவமைத்தப் பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் ‘மடை’. அந்த மடைகளை அமைக்க முதலில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதிர்ந்த பனை மரத்தை ‘வாய்ச்சு’ என்கிற கருவியால் வெட்டுவார்கள். மரம் வெட்டுப்படாமல் நெருப்புத் தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. அப்படியான மரங்களைத் தேர்வு செய்து, அதன் உள்தண்டை நீக்கிவிடுவார்கள். உறுதியான நீண்ட குழாய் தயார். இதனை ஏரிக் கரையின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பின்பு பாறை மற்றும் மரச் சட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன. 

வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருந்தார்கள். மடைகளைத் திறப்பது சாதாரண விஷயமல்ல; உயிரைப் பணயம் வைக்கும் சாகசப் பணி இது. வெள்ளக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும். கரை வெடிக்கக் காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊரே அழிந்துவிடும். வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கிவிடுவார்கள். அப்போது ஒரே ஒருவர் மட்டும் ஏரிக் கரைக்குச் செல்வார். கடல்போல கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். நீரில் மூழ்கி, மூச்சடக்கி, கரையின் அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம். அதேவேகத்தில் வெள்ளம் அதை திறப்பவரையும் இழுத்துச் செல்ல முற்படும். அதன் வேகத்தில் இருந்து தப்புவது மிகவும் சிரமம். 

மடையைத் திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக்கொண்டுதான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர். மாண்டுபோனவர் பலர். தியாகிகளான இவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளோ, கல்வெட்டுகளோ வரலாற்றில் எதுவுமில்லாமல் போனதுதான் சோகம். இவர்கள் ‘மடையர்கள்’என்று அழைக்கப்பட்டார்கள். 

மனதை தொட்டுச் சொல்லுங்கள், இனியும் யாரையாவது ‘மடையா’ என்று திட்டுவீர்கள் நீங்கள்? 

--நன்றி: டி.எல்.சஞ்சீவிகுமார்- தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...