Skip to main content

சென்னையின் சேதத்துக்கு காரணம் என்ன?

 ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு - 6

கார்கள் சென்ற சாலையில் படகுகள் சவாரி 
ஏரிகளிலும், நீர்நிலைகளிலும் வீடுகள் முளைத்ததின் விபரீத விளைவு
அடையாறு - வெள்ளப் பெருக்கு

 
எங்கெங்கு காணிலும் தண்ணீரடா

சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் பாய்வதை மக்கள் மிரட்சியோடு பார்க்கின்றனர். உயிர்ப்பலி உயர்ந்து கொண்டே செல்கிறது. 

ஆனால், சென்னைக்கு புயல் புதிது அல்ல. காலம்காலமாக கடும் புயல்களை தாங்கியது அது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு தாக்குதலின்போதும் சென்னை தன் னைத் தானாக தகவமைத்துக் கொண்டது. முதல் உலகப் போர் காலகட்டம்வரை இது நீடித்தது. அதன் பிந்தைய நகர மயமாக்கல்தான் சென்னையின் இயல் பான நீரோட்டத்தை சிதைக்கத் தொடங்கியது. 

சென்னையின் அடிப்படை அமைப்பைப் பார்ப்போம். இங்கு ஆண்டு சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர். (தென்மேற்கு பருவமழை 400 மி.மீ, வடகிழக்கு பருவமழை 700 மி. மீ) கடந்த 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் பதிவான 2,566 மி.மீ. மழையே சென்னையில் பதிவான அதிகபட்ச மழை. நகரில் 24 மணி நேரத்துக்கு தொடர்ந்து 20 மி.மீ. மழை பெய்தாலே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பிவிடும். 

1943, 76, 85, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் அடை யாறு ஆற்றிலும் 1943, 76 ஆகிய ஆண்டு களில் கூவத்திலும் வெள்ளம் பெருக் கெடுத்திருக்கிறது. கொளத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும் பாக்கம், வள்ளுவர் கோட்டம், வேளச் சேரி, மாம்பலம் உள்ளிட்ட 36 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

சென்னையில் ஓடும் ஆறுகள் கொசஸ்தலை, கூவம், அடையாறு. சோளிங்கர் மலையடிவாரத்தில் (கிருஷ்ணாபுரம், நகரி) உற்பத்தியாகும் தண்ணீரும் காவேரிப்பாக்கம் ஏரி வழியாக வெளியேறும் பாலாற்றின் உபரி நீரும் சேர்ந்தது கொசஸ்தலை ஆறு. இதன் உபரி நீர், கேசவரம் அணைக் கட்டுக்கு செல்லும்போது உருவானது கூவம். பொத்தேரி, வல்லக்கோட்டை பகுதிகளின் தண்ணீரானது மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் சேர்ந்து உற்பத்தியாவது அடையாறு. 

இந்த 3 ஆறுகளும் மேடான மேற்கிலிருந்து பள்ளமான கிழக்கை நோக்கி ஓடி வந்து கடலில் கலக்கின்றன. அப்படி ஓடி வரும் ஆறுகளை நம் முன்னோர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் மூலம் இணைத்தனர். 

ஒவ்வொரு ஆற்றிலும் நீர்மட்டத்தை கணக்கிட அளவுகோல்கள் இருந்தன. மழைக் காலங்களில் நீர்மட்டம் உயரும் போது ஏரிகளின் மதகுகள் திறந்து விடப்பட்டன. ஒரு ஆற்றின் தண்ணீர், ஏரிகளின் வழியாக மற்றொரு ஆற்றுக்கு சென்றது. ஏரிகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘வாக்கம்’ என்றும் ஆறுகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘பாக்கம்’ என்றும் அழைக்கப்பட்டன. 2 அல்லது 3 ‘வாக்கம்’களுக்கு இடையே ஒரு ‘பாக்கம்’ இருந்தது. பாக்கங்களை (ஆறுகளை) வாக்கங்கள் (ஏரிகள்) இணைத்தன. சென்னையில் இந்த நீர்வழித் தடத்தை இன்றும் பார்க்கலாம். ஏரிகளாக இருந்த வில்லிவாக்கம், புரசைவாக்கம் பகுதிகளின் தண்ணீர் இப்போதும் நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றில் கலக்கிறது. 

இப்படியாக கொசஸ்தலை கொந் தளித்தால் கூவம் கூப்பிட்டுக்கொள்ளும். கூவம் பொங்கினால் அடையாறு அழைத் துக் கொள்ளும் இந்த மூன்றையும் முகத் துவாரங்களில் வாங்கிக்கொண்டது வங்காள விரிகுடா. இந்த நீர்வழித்தட அமைப்பு காரணமாக புயல், வெள்ளங்க ளின்போது ஊருக்குள் பெரியளவில் வெள்ளம் புகாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால், இந்த நீர்வழித் தடங்களை எல்லாம் நாம் அழித்துவிட்டோம். 

கோவளம் பூஞ்சேரியில் தொடங்கி முட்டுக்காடு, பள்ளிக்கரணை, பல்லா வரம், பொழிச்சலூர் வரை இருந்த ஏராள மான ஏரிகள், குளங்கள் எல்லாம் இருப்புப் பாதைகளாகவும் நெடுஞ்சாலை களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. வல்லக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அடையாறு ஆறு தொடங்கும் மாகாணியம் மலையப்பட்டு வரை இருந்த ஏரிகள், குளங்களைக் கொண்ட நீர்வழித்தடம் நகரங்களாக வளர்ந்து நிற்கின்றன. பொத்தேரி முதல் முடிச்சூர், மணிமங்கலம், ஆதனூர் வழியாக அடையாறு வரையிருந்த நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. 

ரெட்டேரியின் வியாசர்பாடி நீர்வழித்தடத்தில் இருந்த ஏரிகளில் ஒன்றுகூட இன்றைக்கு இல்லை. வேப்பேரியின் தண்ணீர் சேத்துப்பட்டு வழியாக எண்ணூர் - கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. அதுவும் இன்று காணாமல்போய்விட்டது. 

நந்தனம் தொடங்கி வள்ளுவர் கோட்டம் தாண்டியும் பரந்துவிரிந்திருந் தது பெரிய ஏரி (Long tank). மழைக் காலங்களில் கூவம் பொங்கினால் பெரிய ஏரி வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் தஞ்சமடையும். எதையும் மிச்சம் வைக்காமல் அழித்துவிட்டோம். மேற்குமாம்பலத்தில் அந்த ஏரியின் எச்சமாக இப்போது இருப்பது ‘லேக் வியூ’ சாலை எனப்படும் ஏரிக்கரைச் சாலை மட்டுமே. 

நாம் அழித்துவிட்ட நீர்வழிப்பாதை களில் மீண்டும் ஏரிகள், குளங்களை உருவாக்க முடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் மீண்டும் ஆறுகளை இணைப்பதே சென்னையின் வெள் ளப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமை யும். இதுபற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை தயாரித் துள்ளது பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளரான காந்திமதிநாதன் மற்றும் நீரியல் நிபுணர் ஒடிஸா பாலு உள்ளிட்டோர் அடங்கிய குழு. 

சென்னை யின் ஆறுகள் ஓடிய ஏரி, குளங்களின் நீர்வழித்தடத்தில் மீண்டும் ஏரிகளை யும் குளங்களையும் வெட்ட முடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் இருக்கும் கால்வாய்களை பயன்படுத்தியும், குழாய்களை அமைத்தும் மீண்டும் அந்த ஆறுகளை இணைக்கலாம் என்கிறது அவர்களது அறிக்கை. 

அதன்படி, வாலாஜா அணைக் கட்டு - கோவிந்தவாடி கால்வாய் - காவேரிப்பாக்கம் ஏரி - கேசவரம் அணைக்கட்டு வழியாக பாலாற்றை கொசஸ்தலை ஆற்றுடன் இணைக்க லாம். இன்னொரு பக்கம் கோவிந்தவாடி கால்வாய் - கம்பக்கல் வாய்க்கால் - ஸ்ரீபெரும்புதூர் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாற்றுடனும் பாலாற்றை இணைக்கலாம்.
ஆரணி ஆற்றை கொசஸ்தலை ஆறு - கண்டலேறு - பூண்டி கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கதுடன் இணைக் கலாம். 

கூவத்தை ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டு - புது பங்காரு கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாறு ஆற்றுடன் இணைக்கலாம். 

இன்றைய சென்னை திட்டமிடப்படாத நகரம். அவசர கதியில் அசுரனைபோல வளர்ந்து நிற்கிறது அது. ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த ரத்த நாளங்களை நாம் அறுத்து எறிந்துவிட்டோம். அறுக் கப்பட்ட கோபத்தில் நம் மீது பாய்கிறது ஆறு. அதன் ஆவேசத்தை தாங்காமல் வெள்ளத்தில் மிதக்கிறோம். மீண்டும் அவற்றை இணைத்து வைப்பதே கடந்தகால பாவத்துக்கு தேடிக் கொள்ளும் பரிகாரமாக அமையும். 

--நன்றி: டி .எல்.சஞ்சீவிகுமார் - தமிழ் இந்து

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்