தலைவர் மறைந்திருக்கலாம். அவர் எழுத்துக்கள் என்றும் சிரஞ்சீவியானவை |
தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா,
மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின்
விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட
கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் நான்
எழுத விரும்புவது டயபடிஸ் பற்றி…(ஜூனியர் விகடன் 2003)
?உலகத்தில் டயபடிஸ்காரர்கள் எத்தனை பேர் ?
!பதினேழரை கோடி. இன்னும் ஐந்து வருஷத்தில் இருபத்துநாலு கோடியாகப்
போகிறது! இந்தியாவில்? போன வியாழக்கிழமை கணக்கிட்டபடி, நாலு கோடி
இந்தியர்கள் டயபடிஸ்காரர்கள். அது 2010க்குள் பதினொன்றரைக் கோடியாகப் போகிறதாம்! உலகின் டயபடிஸ் தலைநகரம் இந்தியாதான் என்கிற சந்தேகத்துக்குரிய பெருமை நமக்கு உண்டு.
?எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?
!சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித்
தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக்
கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால்,
கறிவேப்பிலையைக் கூட விட்டு வைக்காமல் சாப்பிட்டு விடுவீர்கள். இனிப்பு
ஏதாவது கொண்டு வந்தால், கண்கள் பிரகாசமடையும். கல்யாணச் சாப்பாட்டில் இலை
ஆரம்ப நிலைக்கு வந்ததுபோல், சுத்தமாக அத்தனையும் சாப்பிடுவீர்கள். அடிக்கடி
தண்ணீர் குடிப்பீர்கள். ராத்திரி ஒரு முறையாவது புலி துரத்துகிற மாதிரி
பயங்கரக் கனவு கண்டு எழுந்திருப்பீர்கள். அரைமணிக்கு ஒரு முறையாவது
மூத்திரம் போவீர்கள். மனைவி – கணவனுக்குத் தெரியாமல் சாக்லேட், மைசூர்பா
சாப்பிடுவீர்கள். காலை அடிக்கடி காலால் சொரிந்து கொள்வீர்கள். கண்ணைப்
பார்த்ததும் கண்டு பிடித்து விடலாம் முதன்முறையாக. வருடாந்திரச்
செக்கப்பில் ரத்தப் பரிசோதனை பண்ணிப் பார்த்தால் தெரிந்துவிடும்.
?டயபடிஸ் எந்த வயசில் வரும் ?
!சாதாரணமாக நடுவயதில் தெரியவரும். சிறு வயதில் வந்தால், அது வேறு வகை. அதை ஜுவினைல் டயபடிஸ் என்பார்கள். 35-40 வயசானால்
ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது உத்தமம். அது உங்கள் அப்பா, அம்மா, தாத்தா,
பாட்டி… யாருக்காவது இருந்தால், உங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது.
?என் கணவருக்கு டயபடிஸ் இருந்தால் எனக்கு வருமா ?
! வராது. சண்டைதான் வரும்.
‘டயபடிஸ் இருக்கிறது என்று சொல்லாமல் கல்யாணம் செய்து கொண்டு விட்டீர்களே?’
‘கல்யாணம் பண்ணிக்கிறப்ப எனக்கே தெரியாதுடி!’
‘டீ போட்டுப் பேசாதீங்க!’
‘நீ குடிக்க டீ போடு முதல்ல…’ – இப்படி.
? டயபடிஸ் செக்ஸைப் பாதிக்குமா ?
! பாதிக்கும். ரெட்டினோபதி (கண்), நெஃப்ரோபதி (சிறுநீரகம்), மைக்ரோ
ஆன்ஜியோபதி (இதயத்தில் சிறு குழாய்கள்) என்று ‘பதிதேவர்’கள் பலர் உள்ளனர்.
கால் எரிச்சலை நியூரைட்டிஸ் என்பார்கள்.
? டயபடிஸ் என்பதற்கு என்ன அர்த்தம் ?
முழுப்பெயர் டயபடிஸ் மெலிட்டஸ் (diabetes mellitus). டயபடிஸ் என்பது ஒரு கிரேக்க வார்த்தை. வடிகால், நீர் நீக்கி – உடலில் நீரை சைபன் போல் வடித்து விடுகிறதே… அதனால்!
? மெலிட்டஸ் என்றால்?
!தேன்! மொரார்ஜி தேசாய்க்கு முன்பேயே, 1684-லேயே
வில்லிஸ் என்கிற இங்கிலீஷ்காரர் டயபடிஸ்காரரின் மூத்திரத்தை நாக்கில்
தொட்டுப் பார்த்துத் தேனாக இனிப்பதைக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார். ‘மூத்திரப் பேய்‘ என்கிற பெயரும் இட்டார் – இது வந்தவர் நிறைய மூத்திரம் போவதால்.
Comments