Skip to main content

அன்றைய தஞ்சையும் இன்றைய சென்னையும்!!!!!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 2

இன்று தண்ணீர் பங்கீட்டுக்காக அண்டை மாநிலங்களிடம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வழி தெரியாமல் தவிக்கிறோம். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்க வில்லை. காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தீராத நிலையிலும் கர்நாடகம், மேகதாட்டுவில் அணையைக் கட்டத் துடிக்கிறது. காவிரி ஆற்றின் நீரியியல் ஓட்டம் முக்கியத் துவம் வாய்ந்த மேகாதாட்டுவில் மட்டும் அணை கட்டப்பட்டுவிட்டால், காவிரியை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. 

ஆனால், நமது முன்னோர்கள் துளி பாரபட்சம்கூட இல்லாமல் நீரைப் பங்கீடு செய்தார்கள்.
இன்றைக்கு காவிரி ஆற்றில் தமிழகத் துக்கு மேல் பகுதியில் அணையைக் கட்ட முயற்சிக்கிறது கர்நாடகம். ஆனால், அன்றைக்கு ‘ஆற்றில் இருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் இன்னொரு வாய்க்கால் வெட்டக்கூடாது; ஒரு ஏரிக்கு நீர் வரத்து கிடைக்கும் மேற்பகுதியில் இன்னொரு ஏரி வெட்டக்கூடாது’ என்பது பழந்தமிழர் வகுத்த கடுமையான சட்டம். இதனை ‘காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று கி.மு. 1117- ஆண்டு ஸ்ரீவல்லப பாண்டியனின் குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

தற்போது மதுரையின் சோழவந்தான் கிராமத்தின் அன்றைய பெயர் சதுர்வேதி மங்கலம். அந்தக் கிராமத்தின் ஊர் சபைக் கூட்டத்தில் இந்த விதி இயற்றப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆற்றின் மேல் பகுதியில் புதியதாக ஒரு கால்வாய் வெட்டினால் கீழ் பகுதியில் இருக்கும் பாசனதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள் அவர்கள். இந்த விதிகளை மீறி தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்தில் மாங்காடு நாட்டைச் சேர்ந்த சோழ முத்தரையன் என்கிற அரசு அதிகாரி, பராக்கிரம பாண்டியன் கால்வாய்க்கு மேலாக ஒரு கால்வாயை வெட்டினான். அப்போது மக்களே ஒன்றுசேர்ந்து அரசனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அந்தக் கால்வாயை மூடினார்கள் என்கிறது கல்வெட்டு குறிப்பு. 

அதேபோல ஏரிகளில் தண்ணீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட மடை, மதகு, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் நீர்ப் பங்கீட்டு அளவுக்கு கருவிகளாகவும் அமைந்தன. ஒவ்வொரு ஏரியிலும் ஆயக்கட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும்போது நான்கு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, ஆறு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, 12 நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று என தனித் தனி மதகுகள் அமைக்கப்பட்டன. மூன்று மதகுகளையும் ஒருசேர திறந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஆயக்கட்டுப் பகுதிக்கு இரண்டு நாழிகைகளில் முழுமையாக தண்ணீர் பாய்ந்துவிடும் என்பது அவர்கள் கண்டுபிடித்த கணக்கு. இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் மதுராந்தகம் ஏரி, தூசு மாமண்டூர் ஏரிகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டன. 

இதுதவிர ‘முறைப்பானை’என்கிற முறையும் இருந்தது. அதாவது, 10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிடப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு துளை, ஐந்து ஏக்கருக்கு ஒரு துளை, 10 ஏக்கருக்கு ஒரு துளை என இந்தத் துளைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. மதகைத் திறக்கும் அதே நொடியில் நீர் நிரப்பிய பானையின் துளையை திறந்துவிடுவார்கள். பானையின் நீர் முழுவதும் காலியானால் குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்ததாக கணக்கிட்டனர். இது சுழற்சி முறை பாசனம் என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும்போது நாழிகை யைக் கணக்கிட ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதில் தவறு செய்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இதனைப் பின்பற்றிதான் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘வாரபந்தி’ என்கிற சுழற்சி பாசனமும், 18-ம் நூற்றாண்டில் பாலாற்று ஏரிகளில் ‘மாமூல் நாமா’ என்கிற சுழற்சி முறை பாசனமும் உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி எல்லாம் தனது ஆய்வுகளின் மூலம் விரிவாக எழுதியிருக்கிறார் பொதுப்பணித்துறையின் வடிவமைப்புப் பிரிவு தலைமை பொறியாளரும் நீர் பாசன ஆய்வாளருமான முனைவர் பழ.கோமதிநாயகம். 

ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு அடிப்படை மழை நீர். அதனை ஏரிகள், குளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி யும் சேகரித்தனர் பழந்தமிழர். ‘மழை நீர் சேகரிப்பு’ என்கிற விஷயம் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பொதுவெளியில் வெகுவாக அறியப்படுகிறது. அதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இருந்த தில்லை. அதிகபட்சம் கூரையில் ஒழுகும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்தோம். ஆனால், கி.பி. 10- நூற்றாண்டிலேயே பழந்தமிழர் மழை நீரை சேகரிக்கும் தொழில்நுட்பங்களில் தேறியிருந்தனர். அவர்கள் ஏரிகள், குளங்கள் தவிர கோட்டைகள், மாளிகைகள், கோயில்கள் ஆகியவற்றையும் மழை நீரை சேகரிக்கும் வகையில் கட்டினார்கள். கோட்டைகளின் அடிப் பகுதிகளில் சுடுமண் குழாய்கள் பதிக்கப்பட்டு கோட்டை வளாகத்தில் சேகரமாகும் மொத்தத் தண்ணீரும் அகழிகளில் விடப் பட்டன. அகழிகளில் இருந்து அருகில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் சென்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், தஞ்சை பெரிய கோயில். 

இந்தக் கோயில் வளாகத்தில் சேகர மாகும் மழை நீர் மற்றும் தஞ்சை நகரத்தில் சேகரமாகும் மழை நீர் இரண்டும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் செவ்வப்பன் ஏரிக்கு (சேப்பன வாரி) சென்றது. சேறு கலந்த அந்தத் தண்ணீர் அந்த ஏரியில் தெளிந்த பின்பு மீண்டும் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத் துக்குச் சென்றது. இதனை குடிநீராகப் பயன்படுத்தினர் மக்கள். இதை வடிவமைத்தது தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கன். இதன் மூலம் மழைக் காலங்களில் தஞ்சை நகர வீதிகளில் தண்ணீர் ஒரு துளி தேங்கி நிற்கவில்லை என்று குறிப்பிடு கிறது ராஜராஜன் கல்வெட்டு. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோயில் சுற்றுவட்டாரங் களில் பெரியளவில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. காரணம் அன்றைக்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகர வடிவ மைப்பு. 

ஆனால், சிறு மழைக்கே பொதுவாகத் தாங்குவதில்லை சென்னை. இப்போது பெய்யும் பெருமழை நகரத்தை நரகமாக்கிவிட்டது நமக்கான கடும் எச்சரிக்கை. முதல் இரண்டு நாட்கள் மழையை ரசித்தவர்கள் எல்லாம் இப்போது மிரண்டுத் தவிக்கிறார்கள். ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வாழ்வியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை நகரில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட தொலை நோக்கு காலம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நகரம் பன்மடங்கு வளர்ந்த பின்னும் அதற்கான திட்ட மிடல் இல்லாமல் போய்விட்டது. இப்போது உள்ள வடிகால்கள் நீரியல் ஓட்டத்துக்கு (Flow by gravity) மாறான மட்ட அளவுகள் கொண்டவை. தவிர, பெரும்பாலான மழை நீர் வாய்க் கால்கள் அடையாறு, கூவம், ஓட்டேரி நல்லா ஆகிய சிற்றாறுகளுடன் இணைக் கப்படவில்லை. மழை நீர் வடிகால் களில் இருந்து தண்ணீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் தேங்குவதற்கு இதுவும் முக்கிய காரணம். கடந்த 15 ஆண்டுக ளில் சென்னையின் மழை நீர் வாய்க்கால்களில் நடந்திருக்கும் பரா மரிப்பு பணிகள் எந்த அளவுக்கு முழுமை யானவை என்று ஆராய வேண்டிய நேரம் இது. 

கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் போதிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் இன்றி, திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், கல்லூரிகளும் அரசுக் கட்டிடங்களும் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி னால், கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலமே தெரியும் - ராணுவம் வந்து மீட்கும் அளவுக்கு ஏன் இப்படி சென்னை மிதக்கிறது என்று!. 

--நன்றி: டி.எல்.சஞ்சீவிகுமார்- தமிழ் இந்து

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...