அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கும், நமது முன்னேற்றத்துக்காக வைத்திருக்கும் உடைமைகளுக்கும் காப்பீடு எடுத்து வைப்பது அவசியம்!
தமிழில்
‘உ’ என்ற எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதாவது எந்த ஒன்றையும்
எழுத ஆரம்பிக்கும் போது ‘உ’ என்கிற பிள்ளையார் சுழி போட்டு தான் நம்மில்
பலர் ஆரம்பிக்கிறோம்.
நமது வாழ்க்கையில் ஐந்து ‘உ’க்கள் மிக முக்கியமானவை.
முதல் உ – உயிர் பாதுகாப்பு
இரண்டாம் உ - உடல் நல பாதுகாப்பு.
மூன்றாம் உ – உடைமை பாதுகாப்பு.
நான்காம் உ – உணர்வுப்பூர்வமான நிதித் திட்டமிடல்
ஐந்தாம் உ – உயில்
இந்த
ஐந்து ‘உ’க்களில் ஏதேனும் ஒன்றை நம் வாழ்க்கையில் செய்யத் தவறினாலும்,
அதுவே வாழ்க்கை முன்னேற்றத்தில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி, அதனால் பல
சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த ஐந்து உ-க்கள் பற்றி விரிவாகப்
பார்ப்போம்.
முதல் ‘உ’ உயிர் பாதுகாப்பு!
மனித
வாழ்க்கையின் முழு அங்கம் உயிர். அது இல்லை எனில் எதுவும் இல்லை. மனித
உயிருக்கு பாதுகாப்பு நம் நாட்டில் மிக மிகக் குறைவு. ஆயுள் காப்பீட்டுத்
திட்டங்கள் ஆரம்பித்து சுமார் 60 வருடங்கள் கடந்து விட்டாலும், மக்கள்
தொகையில் சுமார் 10% பேர்தான் ஆயுள் காப்பீட்டு பாலிசி
எடுத்திருக்கிறார்கள். குறைவான பொருளாதார வசதி, இறந்த பிறகுதானே பணம்
கிடைக்கும் என்ற அலட்சியம், பிறகு செய்வோம் என்று காலம் கடத்துவது,
நாம்தான் எதிலும் முன்னெச்சரிக்கையாக இருக்கிறோமே; நமக்கு என்ன
ஆகிவிடப்போகிறது என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்.
இந்தியாவில்
காப்பீடு என்பது தனிநபரின் விருப்பத்துக்கு உட்பட்டது. இங்கே இரு சக்கர
வாகனத்துக்கூட அவசியம் இன்ஷூரன்ஸ் எடுத்தாக வேண்டும். ஆனால், அதிமுக்கிய
மான மனித உயிருக்கு இன்ஷூரன்ஸ் என்பது விரும்பி னால் மட்டுமே எடுத்துக்
கொள்ளலாம் என்கிற நிலை.
இன்றைக்கு
வளமாக, சந்தோஷமாக இருக்கும் நம் குடும்பம் அதேபோல் தொடர ஆயுள் காப்பீடு
எடுப்பது மிக முக்கியம். காப்பீடு எடுப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக
வருமான வரிச் சலுகை இருக்கிறது.
இரண்டாம் ‘உ’ – உடல் நல பாதுகாப்பு!
எதிர்பாராமல்
நிகழும் மருத்துவ செலவுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். க்ளெய்ம்
எதுவும் பெற வில்லை என்றால் பாலிசியை அடுத்த வருடம் புதுப்பிக்கும் போது
பிரீமியத் தொகையில் தள்ளுபடி தரப்படுகிறது. இத்தகைய மருத்துவ பாலிசியில்
சில வருடங்களாக குடும்ப உறுப்பினர்கள் யாரும் க்ளெய்ம் பெறவில்லை என்றால்
இலவச மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள சலுகை வழங்கப்படுகிறது.
அவரவர் விரும்பிய வாறு தனிநபராக காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அல்லது மொத்த குடும்பத்துக்கும் ஒரே பாலிசியாக எடுத்து பயன் பெறலாம்.
பெண்களுக்கும்,
மூத்த குடிமக்களுக்கும் காப்பீடு அளிக்கப்படுகிறது. மேலும், இந்த
வரிசையில் அபாயகரமான நோய் பாதிப்புகளுக்கும் இழப்பீடு அளிக்கப்படுகிறது.
எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவச் செலவுக்கு நாம் சிறுக சிறுக சேர்த்து
வைக்கும் செல்வத்தை இழப்பதை தவிர்த்து, சில ஆயிரம் ரூபாயை பிரீமியமாக செலவு
செய்து உடல்நலனை பேண உதவும் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்தல்
அவசியமாகும்.
மூன்றாம் ‘உ’ – உடைமை பாதுகாப்பு!
அன்றாடம்
பயன் படுத்தும் பொருட்களுக்கும், நமது முன்னேற்றத்துக்காக வைத்திருக்கும்
உடைமைகளுக்கும் முறையாக காப்பீடு எடுத்து வைப்பது அவசியம். நம் வாகனங்கள்,
வீடு, அதிலுள்ள பொருட்கள், தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை காப்பீடு
செய்வது நல்லது. மேலும், தொழில் சார்ந்த பொருட்களுக்கும் காப்பீடு செய்ய
வேண்டும்.
பொதுவாக,
வாகனத்துக்கும் மற்றும் தொழில் சார்ந்த பிரிவுக்கு மட்டும் காப்பீடு
செய்கிறார்கள். வீடு மற்றும் அதிலுள்ள பொருட்களுக்கு உடைமை காப்பீடு (ஹவுஸ்
ஹோல்டர் பாலிசி) எடுக்காமல் விட்டு விடுகிறோம்.
பலர் அத்தகைய
பொருட்களுக்கு கடன் பெற்றிருந்தால் மட்டும் காப்பீடு எடுக்கிறார்கள். கடன்
தொகை செலுத்திய பின்னர் அத்தகைய காப்பீடு செய்வதை தவிர்க்காமல், நம்மிடம்
பொருள் இருக்கும் வரை காப்பீடு செய்வது மிகவும் நல்லது.
அன்றாடம்
பயன்படுத்தும் பொருட்களுக்கு காப்பீட்டை தவிர்ப்பவர்கள், எதிர்பாராமல்
நிகழும் இழப்பி னால் பொருளாதார பாதிப்பு, வருமான இழப்பில் சிக்கிக்
கொள்கிறார்கள். இதனை தவிர்க்க உடைமை பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் எடுப்பது
அவசியம்.
நான்காம் உ – உணர்வுப்பூர்வமான நிதித் திட்டமிடல்!
நமது
வாழ்க்கை என்னும் பயணத்தில் எவ்வளவோ ஆசைகளும், கனவுகளும், உள்ளடக்கி
இருக்கும். ஆனால், பல திட்டங்கள் நிறைவேறாமல் போவதற்கு காரணம், நாம் நிதித்
திட்டமிடல் செய்யாமல் இருப்பதே. ஒவ்வொரு உணர்வுப்பூர்வ மான ஆசை களையும்
கட்டாயம் நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் மலர வேண்டும்.
என்ன தேவை, எத்தனை ஆண்டுகள் கழித்து தேவை, எவ்வளவு தொகை தேவை, அதனை எப்படி
செயல்படுத்துவது என உங்களுக்கு நீங்களே கேள்விகள் கேட்டால், அதற்கான விடை
நிதித் திட்டமிடலில் கிடைக்கும்.
குறுகிய
காலம் (ஐந்து வருடம்), நடுத்தர காலம் (5-10 வருடம்), நீண்ட காலம் (10
வருடத்திற்கு மேல்) என பிரித்த பின்னர் முதலீட்டு தொகை, காலம், வட்டி
வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்தே உங்கள் கனவு நிறைவேறும். 5 வருடத்தில்
சுமார் 12% ஆண்டு வருமானம் கிடைக்கலாம். 10 வருடங்களில் 15 சதவிகிதத்துக்கு
மேல் ஆண்டு வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கணவன்,
மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து நமது எதிர்கால தேவை என்ன,
அதற்கு எப்படி திட்டமிட வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு
முதலீடு செய்ய வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக முடிவு செய்தால், அது
நிச்சயம் நடக்கும்.
ஐந்தாம் உ – உயில்!
ஆயுள்
காப்பீடு மூலம் நாம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்போது குடும்பத்துக்கு
எப்படி பாதுகாப்பை ஏற்படுத்தி தருகிறோமோ, அதேபோல் முறையாக முன்னரே உயில்
எழுதி வைப்பது மூலம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இடையே சண்டை
சச்சரவை தவிர்க்க முடியும். படிப்பறிவு இல்லாத நமது முன்னோர்கள் பரம்பரை
பரம்பரையாக யார் சொத்தை அனுபவிக்க போகிறார்கள் என்று உயில் எழுதிவிட்டு
செல்வார்கள். ஆனால், இன்று நன்கு படித்தவர்கள்கூட இத்தகைய செயலை செய்யத்
தவறுகின்றனர்.
நாம் தொடங்கும் வங்கிக் கணக்கு, எடுக்கும் இன்ஷுரன்ஸ் பாலிசி, முதலீடு என
எல்லாவற்றுக்கும் நமக்குப்பின் அது யாரைச் சென்றடைய வேண்டும் என்பதை
சொல்கிறோம். ஆனால், சொத்து என்று வரும்போது மட்டும் நாம் அதை செய்யாமலே
விட்டுவிடுகிறோம். எனவே, எதிர்கால பிரச்னையைத் தடுக்க தகுந்த ஆலோசனையுடன்
உயில் எழுதி வைப்பது முக்கியம்.
இந்த ஐந்து ‘உ’க்களையும் நாம் சரியாக கடைப்பிடித்தால் நிதிச் சிக்கலிலிருந்து நிச்சயம் விடுபடலாம்.
Comments