உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புருஷோத்தமதாஸ் டாண்டனின் (Tandon) தாடி எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவுக்கு அவரது நேர்மையும் சுதந்திரச் சிந்தனையும் பிரசித்தம். ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு ஆந்திரத்தைச் சேர்ந்த பட்டாபி சீதாராமய்யாவால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். இப்போது டாண்டன் மீண்டும் தலைவர் பதவி ஏற்கத் தாம் தயாராக இருப்பதை அறிவித்தார். பட்டேல் டாண்டனை ஆதரித்தார். ஆனால், நேருவோ டாண்டனைப் பழங்கால ஆசாமி என்றும் தீவிர ஹிந்து என்றும் கருதினார். தமது எதிர்ப்பை அவர் ஒளிக்கவில்லை. பட்டேல் – டாண்டன் இணைப்பு தமது அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்று நேரு கருதியிருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை.
வழிக்குக் கொண்டுவர என்ன வழி?
டாண்டனை வாபஸ் பெற வைக்க வேண்டும்; இதற்கு என்ன வழி என்று தேடியபோது நேருவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஸி.ஆரை அவர் கேட்டார். ஆனால், ஸி.ஆர். அதற்கு இணங்கவில்லை. இந்திய ஜனநாயகத்தின் ஆட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து கட்சித் தலைவர் என்ற நிலைக்குக் குதிப்பது அவருக்கு அவ்வளவு ஏற்புடையதாக இருக்கவில்லை. இதன் விளைவாக டாண்டனை ஜே.பி. கிருபளானி எதிர்த்தார். கிருபளானிக்கு நேருவின் ஆதரவு இருந்தது. எனவே, காங்கிரஸ் தலைமைப் பதவிக்கான இந்தத் தேர்தல் நேரு – பட்டேல் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சை என்றே பலர் முடிவு கட்டினர்.
டாண்டன்தான் வெற்றிபெறப்போகிறார் என்பது தெளிவானதும் நேரு மனம் நொந்துபோனார். ஆகஸ்ட் 26-ம் தேதி காலை அவர் ஸி. ஆரிடம் தாம் கட்சி, ஆட்சி ஆகிய இரண்டிலிருந்தும் விலகிக்கொள்வதாகக் கூறினார்.
நேருவின் பதற்றம்
ஜவாஹர்லால் தேவைக்கதிமாகப் பதற்றமடைகிறார் என்பது தெளிவாயிற்று. ஸி.ஆர். இதை அவருக்கு எடுத்துக்காட்டினார். “டாண்டனா, நானா என்று கேட்டு முடிவு செய்யுங்கள்” என்பதாக காங்கிரஸை நேரு கேட்டுக்கொண்டிருந்தால் நேரு இப்போது நடந்துகொள்ளும் விதம் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், நேரு அப்படி ஒரு பிரச்சினையை காங்கிரஸில் எழுப்பவே இல்லை. எனவே தலைவர் தேர்தல் முடிவானது, நேருவிடம் காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை என்று தீர்ப்பளித்ததாகிவிடாது.
நேரு “நான் ராஜினாமா பண்ணுகிறேன்” என்று பயமுறுத்துவது இது முதல் தடவையல்ல. மகாத்மாவின் மரணத்துக்குச் சில தினங்களுக்கு முன் அவர் அப்படி அச்சுறுத்தியிருந்தார். மீண்டும், அவர் விருப்பத்துக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி, ஸி.ஆருக்குப் பதில் பிரசாத்தைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது அவ்வாறே பயமுறுத்தினார். “இப்போது மறுபடி சும்மா மிரட்டுகிறார்” என்று பட்டேல் நினைத்தார். நேரு பூச்சாண்டி காட்டுவதை அம்பலப்படுத்த எண்ணி, “ராஜினாமா செய்வதானால் செய்துவிட்டுப் போகட்டுமே!” என்றார், ஸி.ஆரிடம். டாண்டனின் வெற்றி அளித்த பூரிப்பு இன்னும் அடங்காத நிலையில் பட்டேலுடைய போக்கு இவ்வாறுதான் இருந்தது.
பூச்சாண்டியா?
நேரு பூச்சாண்டி காட்டினாரா? இருக்கலாம். ஆனால், அவருக்குச் சவால் விடுவது பேராபத்தானது என்று ஸி. ஆர். உறுதியாக நம்பினார். அது அரசாட்சியை அழிப்பதோடு, நாட்டையே பிளவுபடுத்தும். நேரு மானஸ்தர். அவர் உண்மையில் ராஜினாமாசெய்ய விரும்பாமலிருந்தாலும்கூட, அவருடைய தன்மானமானது ராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை அவருக்கு ஏற்படுத்திவிடும். பிறகு காங்கிரஸ் பிளவுபடும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இரண்டாக உடையும். மேலும், நேருதான் இந்தியாவிலேயே மிகப் பிரபலமான மனிதர். பட்டேலோ ஆட்சியை நிர்வகிக்க முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். எனவே, நேருவுக்குச் சவால் விடுவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம்.
“ஆகஸ்டு 26-ம் தேதி இரவு ஸி. ஆர். ஒரு நிமிஷம்கூடத் தூங்கவில்லை” என்று நாமகிரி நினைவுகூர்கிறார். “அவர் ரொம்பக் கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். மறுநாள் அதிகாலையில் அவர் சர்தாருக்கு போன் செய்து சொன்னார்: ‘நீங்கள் தனியாக எதையும் நிர்வகிக்க முடியாது; அவரைத் தொலைத்துக்கட்டிவிட முயற்சி செய்யாதீர்கள்; அவரில்லாமல் உங்களால் என்ன சாதிக்க முடியும்? நீங்கள் ரொம்பவும் உடல்நலம் குன்றியிருக்கிறீர்கள்.”
ராஜாஜியின் வெற்றி
ஸி. ஆர். வெற்றிபெற்றார். நேரு, பட்டேல் இருவருமே மலை முகட்டிலிருந்து கீழே உருளாமல் பத்திரமான இடத்துக்குப் பின்வாங்கினார்கள். 27-ம் தேதி நேரு எழுதிய மற்றொரு கடிதம் ஸி. ஆருக்கு ஆள் மூலம் கொடுத்து அனுப்பப்பட்டது. மனம் நொந்துபோன நேருதான் இதையும் எழுதியிருந்தார். ஆனால் இதில் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வு வெளிப்பட்டது. கடிதத்தில் ஆட்சி அல்லது கட்சியை விட்டு வெளியேறுவது பற்றிப் பேச்சில்லை. நேரு எழுதியிருந்தார்.
“ஒரு பெரிய பிரச்சினையில், நான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னுடைய சகாக்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் எங்கோ, ஏதோ தவறு இருப்பதாகத்தான் அர்த்தம். மேலும் கொடுத்த வாக்கு மீறப்பட்டிருக்கிறது; நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்ப்பது சுவைக்கவில்லை. நான் இந்த வேலைக்கு ஏற்ற அளவுக்குத் தகுதி பெற்ற பெரிய மனிதன் அல்ல போலும்! வெளியுலகுக்கும் ஓரளவு உள்நாட்டுக்கும் கூட நான் துணிக்கடை பொம்மை மாதிரி அலங்காரமாக நிற்க வேண்டும் என்று கருதுகிறார்கள் போல. நின்ற இடத்தில் அசையாதிருக்க வேண்டும்; நாட்டு நிர்வாகத்தின் மெய்யான காரியங்களில் அதிகம் தலையிடாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?”.
பட்டேலும் ஸி. ஆருக்குக் கடிதம் எழுதினார். ஜவாஹர்லாலின் மனச்சோர்வை நீக்க வேண்டும் என்றே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டார். “நீங்கள் கொடுத்த அறிவுரைப்படி நான் நடந்துகொண்டிருக்கிறேன். நேரு இந்த விஷயத்தை உணர்ச்சிவசப்படாமலும் அறிவுபூர்வமாகவும் அணுகுவார் என்றே இன்னமும் நம்புகிறேன்.”
நீடித்த உரசல்
ஆயினும் உரசல் நீடிக்கவே செய்தது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் தமது மந்திரிசபையில் ஓர் அங்கத்தினருமான ரஃபி அகமத் கித்வாய், டாண்டன் உருவாக்குகிற காங்கிரஸ் காரிய கமிட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அப்படிச் சேர்த்துக்கொள்ளப்படாவிட்டால் தாமும் காரிய கமிட்டியில் இடம்பெற முடியாது என்றும் ஜவாஹர்லால் அறிவித்தார். ஆனால் உ.பி. அரசியலில் நீண்ட காலமாகவே கித்வாய், டாண்டனின் எதிரியாக இருந்துவந்தவர்.
காங்கிரஸ் விதிகளின்படி காரிய கமிட்டி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவருக்குப் பூரண உரிமை உண்டு. என்றாலும் நேருவைக் கலந்தாலோசிக்க டாண்டன் தயாராகவே இருந்தார். ஆனால் கித்வாயை மட்டும் கிட்டத்தில் நெருங்க விட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். அனைவரும் எதிர்பார்த்தது போல் டாண்டனுடைய நிலையை பட்டேல் பலமாக ஆதரித்தார்.
மீண்டும் மத்தியஸ்த அம்பு
நேரு இல்லாத காங்கிரஸ் காரிய கமிட்டி என்பது கட்சியில் பெரிய பிளவு ஏற்பட்டுவிட்டதைப் பகிரங்கமாக அறிவித்ததாகிவிடும். ஸி. ஆர். மத்தியஸ்த அம்புகளை மீண்டும் எய்தார். உடல்நலம் குன்றியிருந்த பட்டேலைப் போய்ப் பார்த்தார். எங்கோ இருந்த மவுண்ட் பாட்டனைக்கூடச் சம்பந்தப்படுத்த முயன்றார். மௌலானா அபுல்கலாம் ஆஸாத்தை உடன் அழைத்துக்கொண்டு, ராஜேந்திர பிரசாத்தைச் சந்தித்தார். டாண்டனை, விட்டுக்கொடுக்குமாறு பிரசாத் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். டாண்டனுடன் தொடர்புகொள்ளுமாறு ஜனாதிபதி தமது காரியஸ்தர்களுக்குச் சொன்னார். ஆனால் அவர்கள் தொடர்புகொள்வதற்கு முன்பு மனம்மாறியும் விட்டார்!
ஸி.ஆருக்கு பிரசாத் எழுதினார்: “இங்குமங்குமாக தூதுபோய்க்கொண்டிருக்கிற நிலையில் இருப்பது எனக்கு ஒரு தர்மசங்கடமான உணர்வை உண்டாக்குகிறது. இதில் எனக்குத் திறமை போதாது என்று நினைக்கிறேன். என்னை மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.”
பகிரங்க அறிக்கை
ஸி.ஆர். ஒரு பகிரங்க அறிக்கையில் சொன்னார்: “நமது பிரதமர், துணைப் பிரதமர் ஆகிய இருவரது வழிகாட்டலும் கண்டிப்பாகத் தேவைப்படுகிற நிலையில்தான் இன்று நமது நாட்டின் நிலவரங்கள் உள்ளன. இவர்களில் ஒருவர் ஓய்வுபெற்றால் நிர்வாகம் அபிவிருத்தி அடையும் என்ற கருத்து எனக்கு உடன்பாடானது அல்ல. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஒன்றாக ஒத்துழைத்துவந்துள்ள எங்களில் பலர், தொடர்ந்து, பாக்கியுள்ள எங்கள் பணியாண்டுகளில் அவ்வாறே ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.”
நேரு, பட்டேல், டாண்டன், ஆஸாத் ஆகியோர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் ஸி. ஆரும் கலந்துகொண்டார். மூன்று மணி நேர விவாதத்துக்குப் பிறகும் பலன் ஒன்றுமில்லை.
நேருவின் எழுச்சி
இதற்கிடையில் ஜவாஹர்லால், தாம் இழந்து விட்டிருந்த தன்னம்பிக்கையைப் படிப்படியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டிருந்தார். “என்னைத்தான் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டீர்களே” என்ற மனத்தாங்கல் பாணியில் பேசிக்கொண்டிருந்த அவர் இப்போது, “நானில்லாமல் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்ற சவால் விடுகிற பாணியில் பேச ஆரம்பித்திருந்தார். ஸி. ஆருக்கு அவர் ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார்:
“பண்பாடுபற்றி புருஷோத்தமதாஸ் டாண்டனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அதன் ஒரு நகலை உங்களுக்கு இத்துடன் இணைத்து அனுப்புகிறேன். உங்களுக்கு ஒரு வேடிக்கை பொழுதுபோக்காக இது அமையலாம்.”
ஸி. ஆரின் பதில் கச்சிதமாக இருந்தது: “பண்பாடு பற்றிய உங்கள் கடிதம் எழுதப்பட்ட சமயமும் அதிலுள்ள விஷயங்களும் டாண்டன்ஜிக்கு நிச்சயம் புதிராக இருக்கும். இப்போது இது எதற்கு? இப்போது நம் முன் உள்ள ஒரே கேள்வி நீங்கள் காரிய கமிட்டி உறுப்பினர் ஆவீர்களா, மாட்டீர்களா என்பதுதான்.”
‘மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போலிருந்தது ஸி.ஆரின் நிலைமை. பல சமயங்களில் அவரைத் தப்பர்த்தம் செய்துகொண்டார்கள். இதனால் எல்லாம் அவர் உற்சாகம் குன்றி இருந்தார். எட்வினா மவுண்ட்பாட்டனுக்கு அவர் எழுதினார்: “ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகி – அதனாலேயே சலிப்படைந்துவிடுகிறார்கள். அவர்களை இணை பிரியாதிருக்கச் செய்ய முயற்சிப்பவர்களிடமும் அவர்களுடைய சலிப்பு வெளியாகிறது. எல்லாப் புன்னகைகளும் சோகமானவையாக இருக்கின்றன. மகிழ்ச்சியே அவற்றில் இல்லை. நான் மிகவும் வருத்தமடைந்திருக்கிறேன்.”
நெகிழவைத்த பட்டேல்
நோய்வாய்ப்பட்டிருந்த பட்டேல் யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு காரியம் செய்தார். இந்தோர் அருகே, மாதர் சேவா கேந்திரமாக ஆரம்பிக்கப்பட விருந்த கஸ்தூர்பா கிராமத்தின் அடிக்கல்நாட்டு விழாவில் பேசும்போது அவர் சொன்னார்:
“நமது தலைவர் ஜவஹர்லால் நேருவே. காந்திஜி தமது வாழ்நாளிலேயே அவரைத் தமது வாரிசாக நியமித்தார். காந்தியின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பது காந்தியின் சேனா வீரர்களுடைய கடமை. நான் தலைவனுக்குத் துரோகம் செய்யும் வீரன் அல்ல.”
ஸி.ஆர். மனமுருகிப் போய்ப் பட்டேலுக்கு எழுதினார்: “அச்சடித்த செய்தியாகப் படிக்கும் போதே உங்களுடைய இந்தோர் பேச்சு மனத்தைத் தொடுவதாக அமைந்திருக்கிறது. நேரில் கேட்க இன்னும் உருக்கமாக இருந்திருக்கும். ஒருவர் என்னவெல்லாம் செய்யக் கூடுமோ அவ்வளவும் நீங்கள் செய்துவிட்டீர்கள். இதுவும்கூடச் சிலரது சந்தேகங்களைப் போக்கவில்லை என்றால் மனிதன் வேறு என்னதான் செய்ய முடியும்? நாம் செய்துள்ள தவறுகள், பாவங்கள் எவ்வளவோ இருந்தும் நம்மை இதுவரை ரட்சித்துவந்துள்ள மகாசக்தியைப் பிரார்த்தித்து, அதனிடமே முடிவை விட்டுவிடுவோம்.”
ஆனால் நேருவுக்கு உண்மையான திருப்தி ஏற்படவில்லை. காரிய கமிட்டிபற்றி ஸி. ஆர். எழுதிய புதியதொரு கடிதத்துக்குப் பதிலெழுதும் முகமாக அவர் சொன்னார்: “இந்த விஷயத்தில் உங்கள் அறிவுரைப்படி நான் நடந்துகொள்ளாததற்கு என்னை மன்னியுங்கள்.”
அன்றே பட்டேல் ஸி. ஆருக்கு எழுதினார். “இப்படி மனத்தைத் தொடர்ந்து துன்புறுத்திக்கொள்வதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நேரு நடந்து வர வேண்டிய பாதையைச் செப்பனிட என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்தக் கடைசி எல்லை வரை சென்று பாடுபட்டிருக்கிறேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றே காண்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை. கடவுளிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஒன்றே நாம் செய்யக்கூடியது. நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி.”
சமாதானத்துக்கு வெற்றி
ஸி. ஆரும், பட்டேலும் குறிப்பிட்ட அந்த மகாசக்தி உதவிக்கு வரவே செய்தது. ஸி.ஆர்., ஆஸாத் ஆகிய இருவர் மூலம் இயங்கியது. அக்டோபர் 15-ம் தேதி, ஒவ்வொன்றும் நீண்ட நேரம் நடந்த மூன்று கூட்டங்கள் நடந்தன. அவற்றின் முடிவில் டாண்டன், இருபது பேர் அடங்கிய காரிய கமிட்டியை அறிவித்தார். கமிட்டியில் நேரு இருந்தார்; ஸி. ஆரும் இருந்தார்; கித்வாய் இல்லை! பல ரவுண்டுகள் நடந்த ரோஷமான குத்துச் சண்டையில் இறுதி வெற்றி டாண்டனுக்கே.
ஸி. ஆரைப் பாராட்டித் தந்திகள் குவிந்தன. காங்கிரஸ் பிளவுபடாமல் காத்தது அவருடைய தனிப்பட்ட சாதனை என்று கருதப்பட்டது. ஆனால் ஸி. ஆர். மகிழ்ச்சியில் மிதக்கவில்லை. சமரசம் ஏற்பட்டிருந்தாலும் அது அரைகுறை மனத்துடன்தான் உருவாகியிருந்தது. வெகு சீக்கிரமே வேறு ஓர் உண்மையான கவலை அனைவரையும் ஆட்கொண்டது. அது பட்டேலின் உடல்நிலை பற்றிய கவலை.
- ராஜ்மோகன் காந்தியின் ‘ராஜாஜி வாழ்க்கை வரலாறு’ நூலிலிருந்து, தமிழாக்கம்: ‘கல்கி’ கே.ராஜேந்திரன்
Comments