பர்வதகிரி என்றும் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படும் இந்த மலை திருவண்ணாமலையிலிருந்து 37 கி.மீ. தூரத்திலும், போளூரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலும் உள்ளது. செங்கம் செல்லும் சாலையில் தென்மாதி மங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் மலையை நோக்கிப் பயணித்தால் முதலில் வருவது பச்சையம்மன் கோவில். சப்த முனிகள் கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி நம் கண்களையும் மனதையும் நிறைக்கின்றது. பச்சையம்மன் ஆலயத்தின் உள்ளே சென்றால் மிகுந்த தேஜஸோடு பச்சை நிறத்தில் பச்சையம்மன் காட்சி தருகிறார். வனச்சரக சோதனைச் சாவடியைத் தாண்டி உள்ளே நடந்தால் முதலில் வருவது பஞ்சமுக ஆஞ்சனேயர், ஒரு கையில் கதையும், இன்னொரு கையில் சஞ்சீவி மலையும் ஏந்திய வண்ணம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார்.
நாம் வீரபத்திர சுவாமி ஆலயத்தை அடைகிறோம். பெரிய கண்களும் கையில் வாளுமாக வீரபத்திரர் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் பின்பகுதியில் நடந்து சென்றால் அங்கே தென்படுகிறது ரேணுகா பரமேஸ்வரி ஆலயமும் ஆகாச கங்கையும். திவ்ய சொரூபிணியான ரேணுகா பரமேஸ்வரி சகல பிணிதீர்க்கும் தீர்த்தக் குளமான ஆகாச கங்கையின் குளக்கரையிலேயே அமர்ந்திருக்கின்றார். சிறிது தூரத்தில் வனதுர்க்கையையும் ஜகதீசரையும் காண முடிகிறது. தொடர்ந்து நடந்தால் மலையேறுவதற்கான முதல் படி வருகிறது. அங்கே கணநாதரையும் சிவலிங்கத்தையும் தரிசிக்கலாம்.
'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 'ஓம் நமசிவாய' என்ற கோஷங்கள் மலையில் எதிரொலித்தவாறு ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து மலையை நோக்கி நம்மைப் பயணிக்க வைக்கின்றன.
படிகளில் நடக்கும்போது ஏற்படும் சிரமம் நாம் இறைவனை தரிசிக்கப் போகிறோம் என்ற நினைவு வந்ததும் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது. இங்கே விசேஷம் என்னவென்றால் நமது கைகளால் நாமே இறைவனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்யலாம்.
சிறிது தூரம் சென்றதும் சித்தர்கள் அமைத்து வழிபட்ட நாகலிங்க மணி மண்டபம் சிதிலமடைந்திருந்தாலும் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வெளிச்சம் இல்லாத நிலையிலும் அந்த மண்டபத்தின் உன்னதம் நமக்குத் தெரிகிறது. அங்கிருந்த பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ள பாதை மிக வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.
மிக மிக முக்கியமான இடம் வந்துவிட்டது. மிகவும் செங்குத்தான 700 அடி உயரமுள்ள மலையின் துவக்கம். மலையில் ஏற ஏதுவாகப் பழங்கால முறைப்படி மலையில் துளை இட்டு கடப்பாரையை அதில் நுழைத்து மூலிகை ரசம் கொண்டு இறுக்கமாக்கி எந்த நிலையிலும் வெளியே வந்துவிடாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது. முகப்பில் உள்ள வீரபத்திரர், காளி சிலைகளுக்குக் கற்பூரம் ஏற்றி வழிபட்டபின் கடப்பாரைகளாலான படியில் ஏறுகிறோம். அதன் பின்னர் ஏணிப் படியும், ஆகாயப் படியும் வருகின்றன. இரண்டு மலைகளை இணைக்கும் ஆகாயப்படி மிகவும் ஆபத்தானது.
மண்டபத்தில் நுழைந்து மேலே சென்றால் இடது பக்கம் சித்தர் குகையும் ஆசிரமமும் தென்படுகின்றன. வலதுபுறம் நாம் வெகுநேர ஆவலுடன் எதிர்பார்த்து நடந்து வந்த ஸ்ரீபிரம்மராம்பிகை சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி சன்னதி வந்துவிட்டது. அதைக் கடந்து சென்றால் திருக்குளம். மழை தவிர வேறு எந்த நீர் ஆதாரமும் இந்த மலையில் இல்லை.
கோவிலின் உள்ளே நுழைகிறோம். விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், வீரபத்திரர், காளி ஆகியோர் வரிசையாக அமைந்துள்ளனர். அவர்களை முறையாகப் பூஜித்துவிட்டு ஈசான்ய மூலையில் அமைந்துள்ள போகர் மற்றும் அகத்தியரை வணங்குகிறோம்.
அதன் பின் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியும் ஆகாயத்தில் இருந்துகொண்டு அடியவரை ரட்சிக்கின்ற அன்னையாம் பிரம்மராம்பிகையும்… ஆஹா! பார்க்கப் பார்க்க ஆனந்தம். அன்னைக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்த பின் இந்த அகிலத்தையே ஆட்டுவிக்கின்ற நாயகனாம் ஸ்ரீமல்லிகார்ஜுனரைப் பார்க்கின்றோம்.
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், ஓங்காரத்தின் முழுவடிவம், திவ்ய சொரூபிணியானான ஐயன் எம்பெருமான் நடு நாயகமாக நந்தியம் பெருமான் முன்னிலையில் அமைதியாக, பரப்பிரம்மமாக, மேலே ஜலதாரையுடன் வீற்றிருக்கின்றார்.
கண்களில் நீர் மல்க, உடல் சிலிர்க்க இறைவனைக் குளிர்விக்க எடுத்துச் சென்ற அபிஷேகத் திரவியம் மற்றும் பூஜைப் பொருட்களை எல்லாம் கொண்டு பூஜிக்க ஆரம்பித்தோம்.
ஒவ்வொரு அபிஷேகத்தின் முடிவில் அலங்காரமும் ஆராதனையும் செய்யும்போது ஓம் நமசிவாய கோஷம் விண்ணைப் பிளந்து நமது எண்ணமெல்லாம் நிறைந்து சிவானுபவம் எங்கும் பரிபூர்ணமாய் விளங்கியது. சிவ நாமம், சிவ ஸ்தோத்திரம் மற்றும் பாடல்களுடன் பூஜையை நிறைவு செய்தோம்.
மனமும் உடலும் லேசாக இறைவன் அனுபூதியை ரசித்து, உணர்ந்து மகிழ்ந்து ஆனந்தம் அடைந்து சிறிது நேரம் அனைவரும் தியானத்தில் ஆழ்ந்தோம். அப்போதும் தென்னாடுடைய சிவனே போற்றி! ஓம் நமசிவாய! என்கிற கோஷங்கள் நமது காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது.
Comments