பேசும் சினிமா வருவதற்கு முன்னால் ஊமைப்படங்களைத்தான் மக்கள் பார்த்தார்கள். தமிழின் முதல் பேசும் சினிமாவின் பெயர் காளிதாஸ். தென்னிந்தியாவின் முதல் பேசும் சினிமாவும் அதுதான். இதே நாளில்தான் அது வெளியானது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சமஸ்கிருத மகாகவி காளிதாஸ்.அவர் சாகுந்தலம், மேகதூதம் எனும் அமர காவியங்களை இயற்றி உள்ளார்.அவரைப் பற்றிய சினிமா இது.
தமிழ்ப்படம் என சொல்லப்பட்டாலும் அதில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பேசியுள்ளனர். இதில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. “இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை” போன்ற தேசபக்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி இருந்தார்.அவர்தான் முதல் சினிமா பாடலாசிரியர்.
இதன் முதல் காட்சி சென்னையில் இருந்த ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.
கான் பகதூர் அர்தேசிர் இரானி எனும் புகழ்பெற்ற இயக்குநரின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனியின் மூலம் இந்த படம் தயாரிக்கப்பட்டது. அவரின் உதவியாளரான எச். எம். ரெட்டி படத்தை இயக்கினார். எட்டாயிரம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் 75 ஆயிரம் வரை வசூல் செய்தது.
1931 முதல் 40 வரை எடுத்த படங்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன.அவற்றில் காளிதாஸ் படமும் ஒன்று.
என் கருத்து :
பிலிம் நியூஸ் ஆனந்தன் பல்வேறு தமிழ் படங்களைப் படங்களைப் பற்றி ஏரளாமான தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். அவற்றை சரிவர பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறாராம். கோடிகளை சம்பாதிக்கும் நம் தமிழ் ஹீரோக்கள் யாராவது அவருக்கு தேவையான பொருளுதவி செய்து அந்த அறிய தகவல்களை காப்பாற்ற முன்வருவார்களா??? IMDB என்று ஒரு அருமையான இணையதளம் ஆங்கிலத்தில் வெளியான (கிட்டத்தட்ட) அனைத்து படங்களைப் பற்றியும் தகவல்களை தருகிறது. ஆனந்தனின் அருமையான தகவல்களை இது போன்று ஒரு இணையதளம் உருவாக்கிக் காப்பாற்ற பொருளுதவி செய்ய நம்முடைய தமிழ் திரையுலகில் யாருமே இல்லையா என்ன???
Comments