Skip to main content

'கிராவிட்டி' (Gravity) -ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

Cast Away, 127 hours, Life of Pi போல, சர்வைவல் (உயிர்வாழ வேண்டும் என்ற உந்துதல்) என்பதை அடிப்படையாகக் கொண்ட பல படங்கள் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கின்றன (தமிழில் மரியானைத் தவிர எதுவும் தோன்றவில்லை). ஒரு சாதாரண மனிதன், விதி வசத்தால் தனியாளாக எங்கேயாவது மாட்டிக்கொண்டு, அங்கிருந்து வீடு திரும்பப் படும் பாடுகளே, இவ்வகைக் கதைகளின் அடிப்படை. இந்த வகையான படங்கள், பத்தில் ஒன்பது, கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் உயிர் பிழைத்துவிடும் என்பது வரலாறு. அப்படி சமீபத்தில் வந்து ஹிட்டடித்திருக்கும் படம்தான் 'கிராவிட்டி'.


- - தேதி சங்கதி தெரியாதவர்களுக்கு:
10.4.13 என்பது அக்டோபர் மாதம் 4ம்  தேதியைக் குறிக்கும். அமெரிக்காவில், முதலில் மாதம், பின்னர் தேதி என்ற நடைமுறை இருக்கிறது.)
ஒரு விண்கலத்தைப் பழுதுபார்க்கும் போது ஏற்படும் விபத்தால், அந்த விண்வெளி வீரர்களின் குழுவில் அனைவரும் இறந்து போக, புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock-SPEED பட நாயகி) மட்டும் உயிர் பிழைக்கிறார். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சங்கதிகளும் சேதமாகியிருக்க, பக்கத்தில் (100கி.மீ தொலைவில் !) மிதந்து கொண்டிருக்கும் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை எப்படியாவது அடைந்தால், உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில், பல்வேறு, அக + புறத் தடைகளைத் தாண்டி, சாண்ட்ரா எப்படி பூமிக்கு வருகிறார் என்பதே கதை.

படத்தில், ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கிளேஷக்களில் இருந்து, பலவகையில் நிவாரணங்கள் உள்ளன. படம் 3198ஆம் வருடம் நடக்கவில்லை. வேற்றுகிரக வாசிகளின் அட்டூழியம் இல்லை, யார் வயிற்றையும் கிழித்துக் கொண்டு, விசித்திரமான ஜந்துக்கள் வரவில்லை, வித்தியாசமான ஆயுதங்கள் இல்லை, எல்லாம் வெடித்துச் சிதறும் நேரத்தில், நாயகன் நாயகியின் பாழாய்போன (உதட்டோடு உதடு) முத்த்த்தக்காட்சி இல்லை... இப்படிப் பல.

படத்தின் பிரதானப் பாத்திரம், சாண்ட்ரா புல்லக் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் ஆகாய மார்க்கத்தில் சீக்கிரம் பரமபதம் அடைகிறார்கள். படத்தினை ஒற்றை மனுஷியாக, தோளில் சுமக்கிறார். புதிதாக பயிற்சி முடித்து, விண்ணிற்கு வந்திருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதிலிருந்து, மெல்ல மெல்ல, தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படும் சூழல் வரை, மகிழ்ச்சி, பயம், தவிப்பு, இயலாமை எனப் பல்வேறு விதமான உணர்ச்சிகளை, அவ்வளவு பெரிய விண்வெளி உடைக்குள்ளிலிருந்து அள்ளித் தெளிக்கிறார். பல சமயங்களில், அவர் கண்ணும், உடல் மொழியும் மட்டுமே நமக்குத் தெரிகிறது. சான்ட்ராவிற்கு அடுத்து, ஜார்ஜ் க்ளூனி (George Clooney), 20 நிமிடம் சிறப்பாக கௌரவித்துவிட்டுச் செல்கிறார்.

இவர்களைத் தாண்டி, நம்மை படத்தோடு ஒன்றச் செய்வது, அதி துல்லியமான கிராபிக்ஸ், அதன் காட்சியமைப்பு, இசை மற்றும் ஒலி. படத்தின் ஒவ்வொரு நொடியிலும் கிராபிக்ஸ் வியாபித்திருக்கிறது. வான்வெளி, அங்கிருந்து தெரியும் பூமி, நட்சத்திரக் கூட்டம், உடையும் விண்கலம், சுழற்சியில் இருக்கும் உடைந்த பாகங்கள், விண்கலத்தின் உள் மிதக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் என, கிராஃபிக்ஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். 3டி, அதை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. வீரர்கள் மிதக்கும் போது, அவர்களுடனே மிதப்பது போல, சுக்கு நூறாக வெடித்துச் சிதறும் பாகங்கள், நம்மைச் சுற்றி இருப்பதைப் போல உணர முடிகிறது. 'அவதார்' படத்திற்குப் பிறகு, பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது 'கிராவிட்டி'.

படத்தை இயக்கி, திரைக்கதையிலும், படத்தொகுப்பிலும், தயாரிப்பிலும் பங்கெடுத்திருப்பவர், மெக்ஸிக திரைப்பட இயக்குனர், அல்ஃபோன்சோ கௌரன் (Alfonso Cuarón). ஏற்கனவே சில்ட்ரன் ஆஃப் மென், ஹாரிபாட்டரின் மூன்றாவது பாகம் என ஒரு சிலப் படங்களை இயக்கி, விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவர். அவரது இந்த முயற்சி, கண்டிப்பாக ஹாலிவுட்டில் ஒரு மைல்கல்.

வெறும் கிராஃபிக்ஸ் பூச்சை மட்டுமே நம்பாமல், ஒரு சாதாரணள், அசாதாரணமான தருணங்களை எப்படியெல்லாம் எதிர் கொள்கிறாள் என, தனி மனித உளவியிலை மையமாக வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார். சாண்ட்ரா, தற்கொலை செய்து கொள்ளத் தயாராகும் காட்சி, ரேடியோவின் கிராஸ் டாக்கில் கேட்கும் பேச்சு, அதற்கு சாண்ட்ராவின் பதில் சிறந்த உதாரணங்கள். படத்தின் பல இடங்களில், மிஷ்கினைப் போல, நீளமான, வசனங்கள் குறைந்த / இல்லாத காட்சிகள், மேலும் அழுத்தத்தையும், பரபரப்பையும் கூட்டுகின்றன.

படத்தில் காண்பிக்கும் விண்வெளி சமாச்சாரங்கள் பெரிய ரீல், படத்தில், பல்வேறு இடங்களில், பல வகையான நுண் குறியீடுகள் உள்ளன என, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அசை போடத் தேவையான விஷயங்களை, இப்போதே இணையத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நல்ல ஒலி-ஒளி-3டி அமைப்புள்ள திரையரங்கில் 'கிராவிட்டி'யைப் பாருங்கள். உங்கள் வாழ்வில், 90 நிமிடங்கள் நீங்களும் விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.

--நன்றி: தமிழ் தி இந்து 

என்னுடைய சில எண்ணங்கள்

இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு உதவி இயக்குனர் என்னுடைய கதையை சுட்டுவிட்டார்கள் என்று புலம்பியதை எங்கேயோ படித்த ஞாபகம். இத்தனை நாள் தமிழ் படங்களைப் பற்றி மட்டும் இவ்வாறு கூறி வந்தவர்கள், இன்று தேர்ச்சி பெற்று ஒரு படி மேலே சென்று ஹாலிவுட் படத்தைப் பற்றியும் புகார் சொல்ல ஆரம்பித்திருப்பது நல்ல (!!!) முன்னேற்றம்.

எனக்கு சான்ட்ரா புல்லக்கை சுத்தமாகப் பிடிக்காது. இவர் ஒன்றும் பெரிய நடிகை இல்லாவிட்டாலும் ஓவராக அலட்டுவார். ஆனால், இந்தப் படத்தில் மிக நன்றாகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கென்னவோ, இந்தப் படத்தைப் பார்த்த போது அமரர் சுஜாதா எழுதிய "வானத்தில் ஒரு மௌனத்தாரகை" என்ற அருமையான கதை நிறையவே ஞாபகத்துக்கு வந்தது. அந்தக் கதை சுஜாதா '80 களில் எழுதியது. அதில் ஒரு விண்வெளி வீரர் பழுதாகிவிட்ட விண்கலத்தை சரி செய்ய விண்வெளிக்கு அனுப்பபடுவார். அவர் செல்லும் விண்கலமும் பழுதாகிவிடும் நிலையில், அரசு மேற்கொண்டு பெரும் செலவு செய்து அவரைக் காப்பாற்ற வேண்டாம் என விட்டுவிடுவார்கள். அவருடைய குடும்பம் அவர் வந்துவிடுவார் என்ற எண்ணத்திலேயே இருக்க, விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் அவரும் தன்னைக் காப்பாற்ற உதவி வந்துவிடும் என்ற நினைப்பிலேயே இருக்க கதையை முடித்துவிடுவார் சுஜாதா. ஹ்ம்ம்ம்ம்ம்....கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது போல சுஜாதவை தமிழ் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...