Skip to main content

மனித உடல் உறுப்புகளின் சந்தை!

மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market.




நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .
மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?
’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.
பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?
முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.
தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.
ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!
அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை (Red Market) பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.
சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.
சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.
கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.
மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.
ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.
-courtesy: vinavu.com

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...