-ஜார்ஜ் ஆர்வெல் 1949-ல் எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயப்பு
(காந்தி ஜெயந்தி முடிந்து ஒரு நாள் ஆனாலும் இந்த அரிய கட்டுரையைப் படிக்கலாம்)
காந்தியின் சுயசரிதை முதன்முதலில் வெளியானபோது அதன் ஆரம்ப அத்தியாயங்களை மட்ட ரகக் காகிதத்தில் அச்சான ஓர் இந்திய நாளிதழில் படித்தேன். அவை எனக்குள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின, அப்படிப்பட்ட தாக்கத்தை காந்தி என்னுள் அப்போது ஏற்படுத்தியிருக்காவிட்டாலும்கூட.
காந்தி என்றால் ஒருவருக்கு என்ன தோன்றும்? சுதேசி கதர் துணி, ஆன்ம பலம், சைவ உணவு - இவை எதுவும் அப்போது என்னைக் கவரவில்லை. பின்தங்கிய, பசியோடு இருக்கும், அதிக அளவு மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டுக்குச் சரிப்பட்டு வராதவையாகத்தான் காட்சியளித்தன, மத்திய காலத்துக்குரியவையான அவரது திட்டங்கள்.
அவரை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது அல்லது அவரைத் தாங்கள் பயன்படுத்திக்கொள்வதாக அவர்கள் நினைத்துக்கொண்டது வெளிப்படையே. அவர் என்றாவது நமக்குப் பயன்படுவார் என்ற நினைப்பில்தான் காந்தியிடம் எல்லாரும் கனிவாக நடந்துகொண்டார்கள். இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ்கள் எல்லாம் 1942-ம் ஆண்டுதான், அதாவது காந்தி தங்களுக்கு எதிராக அகிம்சை ஆயுதத்தைப் பிரயோகித்தபோதுதான் - உண்மையில் அவர் மேல் பெருங்கோபம் கொண்டார்கள்.
காந்தியை விநோதமாகவும் எரிச்சலோடும் பார்க்கும் ஆங்கிலேய அதிகாரிகள் சிலர் எல்லோரையும்போல அவரை விரும்பியதுடன் போற்றவும் செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. கபடத்தன்மை என்பது ஆங்கிலேயர்களுக்கே உரிய துர்புத்தி என்று சொல்வதுபோல் இந்தியர்களுக்கே உரிய துர்புத்தியாக இ.எம் ஃபாஸ்டர் (E.M.Foster) குறிப்பிடும் சந்தேகப் புத்தி என்பது கொஞ்சம்கூட இல்லாதவராகத்தான் காந்தி தோன்றுகிறார்.
நேர்மையின்மையை அவரால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்பதில் எந்த விதச் சந்தேகமும் இல்லை. என்றாலும், எல்லா மனிதர்களும் நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எல்லோரிடமும் நல்லியல்புகள் இருக்கின்றன என்றும் அவற்றின் வழியாகத்தான் அவர்களை அணுக வேண்டும் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.
வறுமையான மத்தியதரக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும், வாழ்க்கையைச் சற்றே இடர்ப்பாடுகள் காணப்பட்ட சூழலிலிருந்து தொடங்கினாலும், யாரையும் பெரிதும் கவராத உடல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவருக்குப் பொறாமை உணர்வோ தாழ்வுமனப்பான்மையோ கிடையாது. நிற உணர்வை, தென்னாப்பிரிக்காவில் அதன் மோசமான வடிவத்தில் முதன்முதலில் சந்தித்தபோது, அது அவரைச் சற்றே வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.
நிறப் போர் என்று கருதப்பட்ட போரில் ஈடுபட்டிருந்தபோதுகூட அவர் மக்களை நிறம், சமூக நிலை போன்றவற்றின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவில்லை. மாகாணம் ஒன்றின் ஆளுநர், பஞ்சாலை அதிபர், கூலித் தொழிலாளியாக பசி பட்டினியுடன் இருந்த தமிழர், பிரிட்டிஷ் ராணுவ வீரர் என அனைவரும் அவரைப் பொறுத்தவரை சமமான மனிதர்களே. அனைவரையும் சமமாகத்தான் பாவிக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அங்குள்ள இந்திய சமூகத்துக்காகக் குரல்கொடுத்து ஆங்கிலேயர்களிடம் கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில்கூட அவருக்கு இருந்த ஐரோப்பிய நண்பர்களுக்குக் குறைவே இல்லை.
எல்லாம் கலந்த அசாதாரணமான ஒரு கலவை காந்தியின் இயல்பு. மோசம் என்று நாம் சொல்லக்கூடிய எதுவும் அதில் இருக்காது. தான் வாழ்ந்ததாலேயே மட்டுமே இந்த உலகை வளப்படுத்திய ஓர் அசாதாரணமான, ஆர்வமூட்டும் மனிதர் காந்தி என்று அவரது மோசமான எதிரிகள்கூட ஒப்புக்கொள்வார்கள்.
காந்தியின் சமாதானப் போக்கு என்பது ஆன்மிக ரீதியிலானது எனினும் தேவையான அரசியல் விளைவை அதைக் கொண்டு ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். போர் எதிர்ப்பை மேற்கத்தியப் போர் எதிர்ப்பாளர்கள் பார்த்த விதமும் காந்தி பார்த்த விதமும் வேறுவேறு. போரைப் பற்றி சங்கடமான கேள்விகளைத் தவிர்த்துவிடும் மேற்கத்தியப் போர் எதிர்ப்பாளர்கள் போலல்ல காந்தி. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய யூதர்கள் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு அவர் லூயி ஃபிஷருக்கு அளித்த பதில்போல வேறு எந்தப் போர் எதிர்ப்பாளரும் துணிச்சலாகப் பதில் அளித்ததில்லை.
“ஜெர்மானிய யூதர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். இச்செயல், ஹிட்லரின் கொடுங்கோன்மையைப் பற்றி உலக மக்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் நன்றாக உணர்த்திவிடும்” என்றார் காந்தி. போர் முடிந்த பிறகு, “எப்படியும் யூதர்கள் கொல்லப்பட்டுவிட்டனரே, அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருந்தால் அர்த்தமுடையதாக இருந்திருக்கும்” என்று தனது நிலையை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் சொன்னது காந்தி அன்பரான லூயி ஃபிஷரையே சற்று உலுக்கிவிட்டது. அவர் தனக்குத் தோன்றியதை நேர்மையாகச் சொல்லியிருக்கிறார் அவ்வளவே.
இதே போல், 1942-ம் ஆண்டு ஜப்பானியப் படையெடுப்புக்கான சாத்தியம் இருந்தபோது அகிம்சை வழியிலான எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்று மக்களை காந்தி தூண்டினார், அப்போது லட்சக் கணக்கான மக்கள் தற்கொலைசெய்துகொண்டு இறந்துபோகும் சாத்தியம் இருந்ததாக காந்தி ஒப்புக்கொண்டார்.
சர்வாதிகாரத்தை காந்தி சரியாகப் புரிந்துகொள்ள வில்லையோ என்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது போராட்டத்தின் கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் பார்த்தாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. மக்கள் கூட்டத்தைத் திரட்டும் மாபெரும் சக்தி அவரிடம் இருக்கிறது என்பதாலேயே ஆங்கிலேய அரசு அவரை அச்சத்துடன் அணுகியது. உலகைத் தன் குரலால் தட்டி எழுப்பிவிட முடியும் என்று அவர் நம்பினார். உங்கள் குரலை உலகம் கேட்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அரசாங்கத்தின் எதிரிகள் பாதி இரவில் திடீரென்று காணாமல் போவதும் அதற்குப் பிறகு, அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் போவதுமான சூழலைக் கொண்ட ஒரு நாட்டில், காந்தியின் வழிமுறைகள் எப்படிப் பின்பற்றப் பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்கச் சற்றுக் கடினமாக இருக்கிறது.
எல்லா மனிதர்களும் ஏறக்குறைய அணுகக் கூடியவர்களே. பெருந் தன்மையான எந்தச் செய்கையும் அவர்களிடத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தனிநபர்களைக் கையாள்வது குறித்து காந்தி கொண்டிருந்த எண்ணம். இதுவும் கேள்விக்குரியது. பைத்தியக்காரர்களைக் கையாளும்போது மேற்கண்ட கருத்து உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புத்திபேதலிக்காதவர் யார்? ஹிட்லர் புத்திபேதலிக்காதவரா? ஒரு கலாச்சாரத்தின் பார்வையில் மற்றொரு கலாச்சாரம் முழுக்க பைத்தியமாக இருக்கச் சாத்தியம் இல்லையா?
யாரோ ஒருவர் பொத்தானை அமுக்கியதும் ஏவுகணைகள் சீறிப்பாய்வது நிகழ்வதற்கு சில ஆண்டுகளே நமக்கு எஞ்சியுள்ள நிலையில், இந்தக் கேள்விகளெல்லாம் தீவிரமாகவும் உடனடி யாகவும் விவாதிக்க வேண்டியவை. இன்னோர் உலகப் போரை உலகம் தாங்குமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம், அகிம்சை வழியில்தான் மீட்சி இருக்கிறது என்பது மட்டுமே நம்மால் நினைத்துப் பார்க்கக் கூடிய சாத்தியம்.
நான் மேலே எழுப்பி யிருக்கும் கேள்விகளைத் தீவிரமான பரிசீலனைக்கு உட்படுத்தும் மேன்மை காந்தியுடையது. உண்மையில், எனது இந்தக் கேள்விகளைப் பற்றி அவர் எங்காவது ஒரு இடத்திலோ தன்னுடைய எண்ணற்ற பத்திரிகைக் கட்டுரைகளிலோ விவாதித்திருக்கிறார்.
அவர் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்ன விஷயத்தைப் பற்றிப் பேசவோ நினைக்கவோ அவர் பயந்தார் என்று யாரும் சொல்ல முடியாது. காந்தியின் மீது எனக்குப் பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது என்றாலும், ஓர் அரசியல் சிந்தனையாளராக காந்தி தவறிழைத்துவிட்டார் என்றோ அவரது வாழ்க்கை ஒரு தோல்வி என்றோ நான் சொல்லவே மாட்டேன்.
அவரை மகானாக ஆக்கும் முயற்சிகளை ஒருவர் மறுத்தாலும் (காந்தியே தன்னை அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டதில்லை) மகான் என்ற நிலை மனித குலத்துக்கு எதிரானது, பிற்போக்கானது என்று அதை மறுத்தாலும்கூட, அவரை வெறும் அரசியல் தலைவராகப் பார்த்தோம் என்றால், நம் காலத்தின் உலகத் தலைவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால், நமக்கு ஒன்று புரியும் - அவர் எவ்வளவு தூய்மையான நறுமணத்தை விட்டுச்சென்றிருக்கிறார் என்பது!
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) (1903-1950), ஆங்கில எழுத்தாளர், ‘அனிமல் ஃபார்ம்’, ‘1984’ போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதியவர்.
Courtesy: tamil.thehindu.com
Comments