அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசியப் பாதுகாப்பு முகமையின் (என்.எஸ்.ஏ.) உளவு வேலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியே வரும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிரவைக்கின்றன. எதிரி நாடுகள், அச்சுறுத்தல் நாடுகள், நட்பு நாடுகள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், பெரும்பான்மை நாடுகள் அமெரிக்காவால் உளவு பார்க்கப்பட்டி ருக்கின்றன. இந்த உளவு வேலைக்குப் பெரிய ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தியிருப்பது... தகவல் தொழில்நுட்பம் - முக்கியமாக இணையம்.
இந்திய ரகசியங்கள் மோசமாக வேட்டையாடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு மாதத்தில் மட்டும் 1350 கோடி தகவல்கள் திருடப்பட்டி ருக்கின்றன எனும்போது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள், ராணுவ வியூகங்கள், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பத் துறைப் பணிகள், தொழில்துறை இலக்குகளில் தொடங்கி இந்நாட்டின் ரகசியங்கள் என்று எதுவும் மிச்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உள்ள நியூயார்க்கிலும் இருக்கும் இந்தியத் தூதரக அலுவலகங்களிலும் உளவுக்கருவிகளைக் கொண்டு தகவல்கள் உறிஞ்சப்பட்டிருப்பது இந்தச் சந்தேகத்தை நியாயப்படுத்துகிறது. எவ்வளவு பெரிய மோசடி? எப்படி முடிகிறது நம்முடைய ஆட்சியாளர்களால் வாய் மூடிப் பார்த்திருக்க?
பிரேசிலும் அமெரிக்காவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் அதிபர் தில்மா ரூசுஃப் (Dilma Rousseff) கொந்தளித்திருக்கிறார். "நாகரிகமான உலகில் நாடுகள் இடையேயான உறவு கண்ணியமாக இருக்க வேண்டும். இது அநாகரிகம்" என்று சாடியுள்ள அவர், அமெரிக்கா மீது சுமத்தியிருக்கும் ஒரு குற்றச்சாட்டு நாம் கவனிக்கத் தக்கது. "அமெரிக்கா, ‘பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக உளவு பார்க்கிறோம்’ என்று சொல்கிறது. உண்மையில் தன்னுடைய நாட்டின் பெருநிறுவனங்களின் லாபங்களுக்காக, அவர்களுடைய சந்தைக்காக, அவர்களுடைய தேவைக்கேற்ற தகவல்களை வழங்குவதற்காகவே அமெரிக்கா உளவு பார்க்கிறது" என்று சொல்லியிருக்கிறார் தில்மா ரூசுஃப். மேலும், பிரேசில் மக்களுக்கான குடிமை உரிமைகளைப் பாதுகாப்பதில் தன்னுடைய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக, மெக்ஸிகோவுடன் இணைந்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதுடன், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுயேச்சையான இணையச் சேவையைத் தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறும் பிரேசில் விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
மன்மோகன் சிங்கின் மௌனத்துடன் தில்மா ரூசுஃபின் ஆக்ரோஷத்தை ஒப்பிட்டுப்பாருங்கள்... நம்முடைய அரசியல் சட்டத்தின் முகவுரை, "இறையாண்மையுள்ள சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு" என்று இந்தியாவைக் குறிப்பிடுகிறது. இந்த வார்த்தைகள் யாவும் அவற்றின் அர்த்தத்தை இழந்துகொண்டிருக்கின்றன நம்முடைய ஆட்சியாளர்களால்!
Comments