ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். பேட்டி என்றதும் "வேண்டாம்" என்றவர், "ஐந்தே நிமிஷம்" என்றதும் சம்மதித்தார்.
"இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?"
"காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்."
"இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம் முன் காந்தி பாதை, நேரு பாதை என்று இரு பாதைகள் இருந்தன. இறுதியில் இரண்டாவது பாதையில்தான் நாம் பயணித்தோம். இப்போது அந்தப் பாதையை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?"
"நாம் தேர்ந்தெடுத்த பாதை சரியானது. ஆனால், எதை நாம் நேரு பாதை என்று சொல்கிறோமா அதற்கு அடித்தளமும் காந்திதான் என்பதை மறந்துவிடக் கூடாது."
"இன்றைக்கும் காந்தி தேவைப்படுகிறாரா?"
"என்றைக்கும் காந்தி நமக்குத் தேவைப்படுகிறார்."
"சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது இடதுசாரி இயக்கம். இன்றைக்கோ ஒரு பலமான எதிர்க்கட்சி நிலையில்கூட அவர்கள் இல்லை. இந்தப் பின்னடைவுக்கு என்ன காரணம்?"
"பிரச்சினைகளைப் பேசிய அளவுக்குத் தீர்வுகளை இடதுசாரிகள் பேசவில்லை. எதிர்ப்பு அரசியல், நீடித்த பயணத்துக்கு உதவாது. அப்புறம், இடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது."
"உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது?"
"மகத்தான சாதனை - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே."
"சுதந்திரக் காலகட்டத்திலிருந்தே மேற்கத்திய சிந்தனையாளர்களால் ‘இந்தியா உடையும்’ என்ற ஆரூடம் தொடர்ந்து சொல்லப்பட்டுவந்திருக்கிறது. இப்போது அருந்ததி ராய் போன்றவர்கள் அதைப் பற்றி மேலும் பலமாகப் பேசுகிறார்கள்…"
"இந்தியா ஒருபோதும் உடையாது. இந்தக் கூட்டாட்சி அமைப்பு உலகுக்கே முன்னுதாரணம் ஆகும்."
"மொழி உணர்வு, இன உணர்வைத் தாண்டி வளர்ச்சி அடிப்படையிலான பிரிவினைக்கு வித்திட்டிருக்கிறது தெலங்கானா. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. இனி வளர்ச்சி உணர்வுதான் தீர்மானிக்கும்."
"அப்படி என்றால், வளர்ச்சிக்கான அரசியல் என்று சொல்லப்படும் அரசியலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?"
"உண்மையான வளர்ச்சிக்கான அரசியலை ஆதரிக்கிறேன்."
"விளிம்புநிலை மக்கள் வாழ்வை எப்போதும் கரிசனத்துடன் பார்த்தவர் நீங்கள். இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் அவர்கள் பலன் அடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?"
"ஏழைகள் வாழ்க்கை முழுமையாக மாறியிருக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால், நிச்சயம் வளர்ச்சியில் அவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். ஒருகாலத்தில் நான் ரிக்ஷாக்காரர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். இன்றைக்கு ரிக்ஷா தொழிலே அருகிவிட்டது இல்லையா?"
"இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றால், என்ன மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்?"
"அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம், பிடிமானம் குறைக்கப்பட்டு, மக்களுடைய பங்கேற்பு அதிகரிக்கப்பட வேண்டும்."
"சரி, தமிழக அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"(நீண்ட யோசனைக்குப் பின்…) ஆரோக்கியமாக இல்லை. ஆக்கபூர்வமானதாக மாற்ற வேண்டும்."
"வாசிக்க நேரம் ஒதுக்க முடிகிறதா?"
"ம்… நிறைய பேர் எழுத வந்திருக்கிறார்கள், இல்லையா?"
"ஆனால், எழுத்தாளர்கள் எண்ணிக்கை உயர்வு மக்கள் இடையே மதிப்பை உண்டாக்கவில்லையே?"
"(சின்ன சிரிப்போடு…) பாவம்… என்ன காரணம்? ம்… இரு தரப்பினருமே காரணம். எழுத்தாளர்களுக்கும் கம்பீரமாக நடந்துகொள்ளத் தெரியவில்லை. மக்களுக்கும் மதிக்கத் தெரியவில்லை."
"தமிழ்ச் சமூகம் முக்கியமாக எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?"
"குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்."
"தனிப்பட்ட வாழ்க்கைக்கு வருவோம். முதுமையில் வாழ்க்கை கொடுமை என்கிறார் அசோகமித்திரன். முதுமையிலும் வாழ்க்கையை ரசிக்கிறேன் என்கிறார் கி.ராஜநாராயணன். ஜே.கே-வுக்கு எப்படி?"
" நான் கி.ரா. கட்சி. வாழ்க்கையை எப்போதும் உற்சாகமாகவே பார்க்கிறேன். ஆனால், உற்சாகத்துக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்."
"முதுமையில் பழைய காதலை நினைவுகூர்வது எப்படி இருக்கிறது?"
"நினைவுகூர வேண்டியது இல்லை. எந்த வயதிலும் காதல் கூடவே இருக்கிறது. எந்த வயதிலும் அது இனிமைதான். ஆனால், இந்த வயதில் ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுகூடக் காதலாகத்தான் படுகிறது."
"முதுமையில் கடவுள் எந்த அளவுக்குத் தேவைப்படுகிறார்?"
"எல்லா பருவத்திலுமே தேவைப்படுகிறார். இப்போது மேலும் நெருக்கமாகியிருக்கிறார்."
"அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது; பெரும்பாலும் படுத்தே இருக்கிறீர்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். ‘சபை’இல்லாமல் உங்களால் இருக்க முடியாதே… என்ன செய்கிறீர்கள்?"
"நான் இருக்கும் இடம் எதுவோ, அதுவே என் சபை. அதனால், சபை இல்லாமல் ஜே.கே. என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சபை எப்போதுமே இருக்கிறது. இங்கேயும் இருக்கிறது!"
Comments