SHIP OF THESEUS - தீசஸின் கப்பல் - திரைப்பட விமர்சனம்
ஆங்கில இலக்கியத்தில் Ship of Theseus என்ற சொல்லுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த சொல்லின் விளக்கத்தை இவ்வாறாக எடுத்துக் கொள்ளலாம்; ஒரு பழுதடைந்த கப்பலின் அத்தனை பாகங்களையும் மாற்றி விட்டால், அந்தக் கப்பல் பழைய கப்பலாகவே இருக்குமா?? அதன் தன்மை மாறாதா?? இதை ஆங்கில இலக்கியத்தில் "Theseus Paradox" (தீசஸின் முரண்பாடு) என்றும் கூறுவார்கள்.
இந்தப் படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்; ஆலியா கமல் என்ற கண் பார்வை பழுதடைந்த ஒரு பெண் photographer. அறுவை சிகிச்சை செய்து கொண்டு கண் பார்வை சரியான பின் தன்னால் எடுக்கபடும் புகைப்படங்கள் தரமாக இல்லை என நினைக்கும் ஒரு கதாபாத்திரம். மைத்ரேயா என்ற ஒரு புத்திசாலித்தனமான மனிதன். பொது மக்களுக்கு நல்ல பொருள்/மருந்து கிடைக்க வேண்டுமென மிருகங்களை ஆராய்ச்சி கூடங்களில் வதை செய்வதை எதிர்க்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு மனிதன் வாழ ஓர் உயிரை வருத்தலாகாது என்பது மைத்ரேயாவின் வாதம். பங்கு வர்த்தக தரகராக, பணம் சம்பாதிப்பது ஒன்றிலேயே குறிக்கோளாக இருக்கும் நவின்.
சில நாட்களுக்கு முன், ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஆமிர் கான், மற்றும் அவருடைய மனைவி கிரண் ராவ் இருவரும் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி எடுத்துள்ளதாக செய்தி வந்தது, இந்த படம் கிரண் ராவ் தயாரித்தது. உறுப்பு தானத்தை பற்றிய எண்ணங்களை வித்தியாசமான பார்வையில் காட்டுகிறது.
ரசிகர்கள் பக்குவப்படவில்லை அதனால் என்படம் ஓடவில்லை என ஒப்பாரி வைக்கும் படைப்பாளிகளைக் கண்டிருக்கிறோம்!! ஆனால், எத்தனை படைப்பாளிகள்
வியாபாரத்தைப் பொருட்படுத்தாத உரிய கலை அம்சத்தைக் கொண்ட படங்களை இயக்கும்
தைரியம் கொண்டிருக்கிறார்கள்??
இங்கே ஒரு இயக்குனர் “ஆனந்த் காந்தி” இன்றைய தலைமுறையினருக்கு கலைப் படங்கள் எனப்படும் நல்ல படங்களின் முன்னோடி என உரைத்தால் அது மிகையல்ல. பொதுவாக கலைப்படம் என்றால் போரடிக்கும், உட்கார முடியாது என்ற எண்ணம் பலரிடம் உண்டு. முதல் படத்திலேயே இத்தனை நேர்த்தியா...! மெய்சிலிர்க்க வைக்கிறார் ஆனந்த் காந்தி.
சினிமாவை ஒரு பள்ளிக் கூடமாக நினைத்து அதில் பட்டதாரியாக நினைக்கும் அனைத்து மாணவர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். வெறும் பொழுது போக்கிற்காக, ரிலாக்ஸ் செய்வதற்காக, சினிமாவிற்கு செல்ல நினைப்பவர்கள் விலகிக் கொள்வது நல்லது.
ஒரு மிக நல்ல திரைப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
Comments