Skip to main content
ப்ரியா பற்றி சுஜாதா கூறுகிறார்…..

1975 –ல் நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா ? என்று எஸ்.ஏ.பியைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார்.  அந்தக் கதை ‘ப்ரியா’.

ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள்.  அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர்  கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார்.

‘குமுதம்’ வார இதழில் வெளியான ஒரு பரபரப்பான தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையின் பாதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். சற்று அவசரமாக கொன்றுவிட்டேனோ என்று தோன்றியது.   குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ. பி. போன் செய்து அவளுக்கு எப்படியாவது மறுஜன்மம் கொடுத்துவிடுங்கள் என்றும், குமுதம் ஆசிரியர் குழுவுடன் ஆலோசித்து அதற்கு ஒரு வழியும் சொன்னார்.

ப்ரியா புத்தகமாக வந்தபோது முதல் பதிப்பில்,  ‘இந்தக் கதையை ஒரு முக்கியமான கட்டத்தில் திசை திருப்பிய ஆசிரியர் எஸ்.ஏ. பி.  அவர்களுக்கு’ என்று சமர்ப்பணம் செய்தேன்.

‘ப்ரியா’ சினிமாவானது வேறு கூத்து.

Nothing succeeds like success என்பார்கள். ஒரு காலத்தில் மகரிஷி, ஜெயகாந்தன், அனுராதாரமணன், சிவசங்கரி, உமாசந்திரன் போன்றவர்களின் பத்திரிகைக் கதைகள் சினிமாவில் வெற்றி கண்டன.  புவனா ஒரு கேள்விக்குறி, சில நேரங்களில் சில மனிதர்கள், சிறை, 47 நாட்கள், முள்ளும் மலரும் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.  இப்போது இந்த வழக்கம் அறவே ஒழிந்துபோய், கதை என்கிற வஸ்து படம் பிடிக்கும்போது தான் தேவைப்பட்டால் பண்ணப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த “ப்ரியா” படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-

பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.  லண்டன், சிங்கப்பூராக மாற்றப்பட்டு வெற்றிப்படமாக ஓடியது.

இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

அதன் துவக்க விழாவில், முதல் காட்சி…  சென்டிமெண்டாக ஒரு பூகோள உருண்டையைச் சுழற்றி  ‘உலகத்தை ஜெயிச்சுக் காட்டறேன் பாரு’  என்று திரையில் வராத வசனத்தைத் தனியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

ப்ரியா” படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.

ரஜினிகாந்துக்கு தற்காலிக “நெர்வ்ஸ் பிரேக் டவுன்” (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா’ ஷூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்” வந்து விடும்.

இவ்வாறு சுஜாதா கூறினார்.



Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...