சென்னை : "புதிதாக எழுத துவங்கிய பெரும்பாலான இளம்
எழுத்தாளர்களுக்கு, எழுத்தாளர், சுஜாதா முன்னோடியாக விளங்கினார். அவர்களை
ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார்,'' என, "உயிர்மை'
இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரன் கூறினார்.
உயிர்மை பதிப்பகமும்,
சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், "சுஜாதா விருதுகள்' வழங்கும்
விழா, அண்ணா சாலையில் உள்ள, "புக் பாயின்ட்' அரங்கத்தில் நடந்தது.
"உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
சுஜாதா விருதுகள் 2013 நிகழ்ச்சி |
பாரதி கிருஷ்ணகுமார், பாரதிமணி, கலாப்ரியா, அழகிய பெரியவன்,
அ.முத்துகிருஷ்ணன், ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், அஜயன்
பாலா எழுதிய, "அஜயன்பாலா சிறுகதைகள்' புத்தகத்துக்கு, சிறுகதை விருது;
தமிழ்மகன் எழுதிய, "வனசாட்சி'க்கு, நாவல் விருது; மனோ.மோகன் எழுதிய,
"பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி'க்கு, கவிதை விருது; பிரபாகரன் எழுதிய,
"குமரி கண்டமா சுமேரியமா'வுக்கும், ராஜு முருகன் எழுதிய, "வட்டியும்
முதலும்'க்கும், உரைநடை விருது; ஞானசேகரன் எழுதிய, "ஞானம்'
புத்தகத்துக்கும், பாண்டியனின், "கருக்கல்' நாவலுக்கும், சிற்றிழ் விருது;
மணிகண்டனின், http://www.nisaptham.com இணையதளத்துக்கு,
இணைய விருதும் வழங்கப்பட்டன. விருதுகளை, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின்
மனைவி, சுஜாதா ரங்கராஜனும், "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரனும்
வழங்கினர். விருதாளர்களுக்கு, 10 ஆயிரம் , பொற்கிழியும், கேடயமும்
வழங்கப்பட்டன. எழுத்தாளர்கள் பேசியதாவது:
"உயிர்மை' மனுஷ்யபுத்திரன்: புதிதாக எழுத துவங்கிய
பெரும்பாலான இளம் எழுத்தாளர்களுக்கு, சுஜாதா முன்னோடியாக விளங்கினார்.
அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார். அவரால்
பாராட்டப்பட்டு, வெளிச்சத்திற்கு வந்த பெரும்பாலான இளைஞர்களில், நானும்
ஒருவன். அதனால், அவர் பெயரில் வழங்கப்படும் விருது முக்கியமானது. தமிழின்
அனைத்து தளங்களிலும் இயங்கிய ஒரே எழுத்தாளர், சுஜாதா.
ஆய்வாளர், பிரபாகரன்: அறிவியலின் அடிப்படையில், பார்த்தால், தமிழர்கள்,
தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல; குமரிக் கண்டம் அவர்களின் பூர்வீக மண்
அல்ல; பல்வேறு தரவுகளின் படி, ஆய்வு செய்தால், தமிழர்களின் தாயகம், ஈராக்.
கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டில், இது குறித்து கட்டுரை வாசித்த போது,
அனைவரும், என்னை "தமிழின துரோகி' என்றனர். அவர்களுக்கு, பதில் அளிக்கவே,
இந்நூலை எழுதினேன். தற்போது, இப்புத்தகம் விருது பெற்றிருப்பதன் மூலம்,
இப்பிரச்னை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
விமர்சகர், பாரதி கிருஷ்ணகுமார்: தமிழ் எழுத்தாளர்களில், சங்ககால
இலக்கியம் தெரிந்தவர்களுக்கு, நவீன இலக்கியம் தெரிவதில்லை; நவீன இலக்கியம்
தெரிந்தவர்களுக்கு, சங்ககால இலக்கியம் தெரிவதில்லை. ஆனால், இரண்டு
இலக்கியத் தரப்புக்கும் பாலமாக, சுஜாதா செயல்பட்டார். இரண்டு தரப்பையும்
தெரிந்திருந்ததால், இரண்டு தரப்பினரும் சுஜாதாவை விமர்சித்து வந்தனர்.
இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான இலக்கியத்தை சுஜாதா படைத்தார்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
நன்றி: தினமலர் இணைய தளம்
Comments