இந்தியன் பிரீமியர் லீக்' (ஐ.பி.எல்.) கிரிக்கெட்
போட்டியில் "ஸ்பாட் பிக்ஸிங்' செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் தில்லி
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், ஐ.பி.எல். விளையாட்டுப்
போட்டிகள் தடை செய்யப்பட வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது என்பதைத்தான்
மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணம், கிரிக்கெட் ஒரு மிகப்பெரும்
வர்த்தகமாக மாற்றப்பட்டிருப்பதுதான் என்பதையும், அளவுக்கு அதிகமான லாபம்
கொழிக்கும் வியாபாரத்தில் முறைகேடுகளும் அதிகமாக மண்டிக்கிடக்கும்
என்பதையும் புரிந்துகொண்டால், கிரிக்கெட் ரசிகர்களே இந்த ஐ.பி.எல்.
விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவார்கள்.
"டுவிட்டர்', "பேஸ்-புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச்
சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் பலரும் கேட்கும்
கேள்விகள் நியாயமானவை.
ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள்
பேசி முடித்து "மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா?
என்று நாம் கேட்கவில்லை, டுவிட்டரில் கேட்கிறார் ஒருவர்.
குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் மூவரையும் சஸ்பெண்ட் செய்த
பி.சி.சி.ஐ.யின் செயல் மிகவும் அவசரமான முடிவு என்று நாம் சொல்லவில்லை,
பேஸ்புக்கில் பதிவு செய்கிறார் மற்றொருவர்.
விளையாட்டின் நடுவே, இன்றியமையாத வேளையில், வேண்டுமென்றே தவறு செய்தல்
அல்லது சரியாக விளையாடாமல் இருப்பதற்காக (ஸ்பாட் பிக்ஸிங்) முன்பணம்
வாங்கியதாக ஸ்ரீசாந்த் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்
தில்லி போலீஸாரால் கைது செய்யப்படுவாரேயானால், ரிசர்வ் வங்கியின்
அனுமதியின்றி பல கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை ஏற்றுக்கொண்ட இந்திய
கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) நிர்வாகிகள், ஐ.பி.எல். அணியின்
உரிமையாளர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என்று நாம் கேட்கவில்லை, விவரம்
தெரிந்த அனைவருமே கேட்கிறார்கள்.
ஐ.பி.எல். அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்
லெவன் பஞ்சாப், மும்பை இன்டியன்ஸ் ஆகியன மோரிஷஸ், பகாமா, பிரிட்டிஷ்
வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகள் வழியாக அன்னிய முதலீட்டைக்
கொண்டுவந்திருப்பது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையின் அடிப்படையில்
இந்தக் குற்றத்துக்காக பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். நிர்வாகிகள் அனைவரும்
நாடாளுமன்றக் குழுவால் விசாரிக்கப்பட்டனர்.
ஐ.பி.எல். நடத்திய போட்டிகளின் லாபத்தில் ரூ.160 கோடி வருமான வரி
ஏய்ப்பு செய்திருக்கிறது. இதற்காக வருமான வரித் துறை 96 நோட்டீஸ்
அனுப்பியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்
2011-இல் ஒரு கேள்விக்குப் பதில் அளித்தபோது குறிப்பிட்டார். அன்னிய
செலாவணிச் சட்டத்தை மீறி ரூ.1,077 கோடி பணம் ஐ.பி.எல். அணிகளுக்கு
வந்துள்ளது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும்
நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆனால் யார் மீதும் எந்த ஒரு
குற்றத்துக்காகவும் இன்றுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்காதீர்கள். காங்கிரஸ் கட்சியின்
அமைச்சர்கள் சசி தரூர், ராஜீவ் சுக்லா, பாஜகவின் அருண் ஜேட்லி, ரவிசங்கர்
பிரசாத், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத
காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக குடும்பத்தைச் சேர்ந்த "சன்' குழுமத்
தலைவர் கலாநிதி மாறன் என்று இதில் தொடர்புடையவர்கள் எல்லோரும் அரசியல்
பெரும்புள்ளிகள் எனும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
ஒவ்வொரு ஐ.பி.எல். விளையாட்டின்போதும் ஒளிபரப்பு, பார்வையாளர் டிக்கெட்
விற்பனை மூலம் கிடைக்கும் தொகைக்கு ஏற்ப வரியை முன்கூட்டியே செலுத்த
வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
இந்திய விளையாட்டுக்கும், இந்திய கலாசாரத்துக்கும் பொருந்தாத வகையில்
விளையாட்டு அரங்கில் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியூட்ட "சியர் கேர்ள்ஸ்'
(கிளுகிளுப்புக் காரிகையர்) நடனம் குறித்து எழுந்த விமர்சனங்களைக்கூட
பி.சி.சி.ஐ. கண்டு கொள்ளவில்லை. அரசு இந்த விரசத்தைத் தடுத்திருக்க
வேண்டாமா?
ரசிகர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கத்தான் இந்த விளையாட்டு என்றால்,
"ஸ்பாட் பிக்ஸிங்கை'விட மிக மோசமான சூதாட்டம் இவர்களது விளையாட்டல்லவா?
அதைத் தடை செய்திருக்க வேண்டாமா அரசு?
இந்த விவகாரத்தில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும், தொலைபேசி
உரையாடல்கள் இந்த "ஸ்பாட் பிக்ஸிங்' பேரத்தை, முன்பணத்தை உறுதி
செய்திருப்பதாகவும் தில்லி போலீசார் கூறுகின்றனர். இந்த கிரிக்கெட் "ஸ்பாட்
பிக்ஸிங்' விவகாரத்தில் தலைமறைவுக் குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் தொடர்பு
இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டத்தின்போதும் ரூ.400 கோடி அளவுக்குப் பந்தயம்
கட்டுதல் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. பந்தயம் கட்டுவதற்கே இந்த
அளவுக்குப் பணம் புழங்கும் என்றால் நிச்சயமாக இந்த விளையாட்டில், "புக்கிங்
ஏஜண்டுகள்' நட்டம் அடையாமல் இருக்க, "ஸ்பாட் பிக்ஸிங்', "மேட்ச் பிக்ஸிங்'
ஆகியவற்றை நடத்தவே செய்வார்கள்.
தாவூத் இப்ராகிம் ஆட்கள் இதில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று
கூறப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தன்னளவில் விருப்பம் இல்லாத
நிலையிலும், மிரட்டப்பட்டு, அதனால் இத்தகைய "ஸ்பாட் பிக்ஸிங்' செய்ய
ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம்
அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியாதா என்ன?
போதும் இந்த சூதாட்ட விபரீதம்; ஐ.பி.எல். உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்!
- Get link
- X
- Other Apps
Comments