என் பிராப்பர்டி டெவலெப்மென்ட் பிஸினஸின் ஆரம்ப காலம். அப்போதுதான் உச்ச
நீதிமன்ற நீதிபதி ஒருவருடைய பிராப்பர்டியை டெவலெப் பண்ணிக்கொண்டிருந்தேன்.
பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு ஒரு அபார்ட்மென்டை விற்பதற்காக அவரையும் திருமதி சுஜாதா அவர்களையும் சந்திக்க நேர்ந்தது.
கம்பெனியில் இன்னார் என்று முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
அபார்ட்மென்ட் பற்றி, அதன் விலை மற்ற டீடெல்ய்ஸ் எல்லாவற்றையும் சொன்னேன்!
திருமதி சுஜாதா அவர்கள் காட்டிய கொஞ்ச நஞ்ச விருப்பத்தைக்கூட, சுஜாதா அவர்கள் தன் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.
சற்று நேரத்திற்குப் பிறகு, சுஜாதா பக்கம் திரும்பி, "சார், நான்
உங்களுடைய பரம விசிறி. உங்க கதையெல்லாம் செண்பகப்பூ, கணேஷ்-வஸந்த் போன்ற
நாவல்களை ரொம்ப விரும்பிப் படிச்சிருக்கேன்'' என்றேன். "அப்படியா?
வெரிகுட்! வெரிகுட்! ஆங், அப்புறம் சொல்லுங்க. நான் என்ன பண்ணணும்?''
என்றார்.
ஆனால் நான், "சார், உங்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரியுமா?'' என்று கேட்டேன்.
"ஆர் வியா என்னப்பா இப்படிக் கேட்டுட்டே? அவர் பெரிய எழுத்தாளர். கிவாஜ,
அகிலன், சாண்டில்யன், சாவி க்ரூப்-அந்த செட். அவர்களோட காண்ட்டம்பிரரி
ரைட்டர். அவரோட 'ஆதித்தன் காதல்', 'அணையாவிளக்கு', 'திரைக்குப்பின்' போன்ற
பெரிய நாவல்கள் எல்லாவற்றையும் ஃபுல்லா படிச்சிருக்கேன். எதார்த்தமான
எழுத்துக்கள். உயிரோட்டம், நல்ல எழுத்து நடை, பாணி. ரொம்ப விரும்பிப்
படிச்சிருக்கேன். இப்போ எல்லாம் யாரப்பா அந்த மாதிரி எழுதுறாங்க? நல்ல
தரமான எழுத்தாளர். அவருடைய எழுத்துலே ஓர் அழுத்தம் இருக்கும். ஸ்டோரி
வேல்யு இருக்கும்....ஆமா, அவரைப்பற்றி இப்போ எதுக்கு நீங்க கேட்கிறீங்க?''
"நான் அவரோட செகண்ட் சன்...''
"ஹோ! அப்படியா? வெரிகுட்! வெரிகுட்! ரொம்ப சந்தோஷம்! இப்படி வாங்க...''
அப்படீன்னு அவர் கதை எழுதற ரூமுக்கு அழைத்துக்கொண்டு போய் அவருடைய
நாற்காலியில் உட்கார வெச்சார்.
"என்ன சார் இது? உங்களோட சேர்லே என்னை உட்கார வெச்சிட்டீங்க!''
"இந்தச் சேர்லே என்னைத் தவிர்த்து வேற யாருமே உட்காரக் கூடாது. நான்
யாரையுமே இதுவரை அனுமதிக்கலே. ஆனா நீங்க ஆர்வியோட ஸன்னுன்னு
சொல்லிட்டீங்க...இதுதான் நான் அவருக்குக் கொடுக்கிற மரியாதை-மதிப்பு.
இந்தாங்க என் செக்புக். நீங்க என்னோட பேனாவை எடுத்து உங்க கையாலே, என்னோட
செக் புக்குல அட்வான்ஸ் அமெüண்டை எழுதுங்க!'' என்றார்.
பிறகு, "சுஜா, இவர் யார் தெரியுமா? இவருடைய அப்பாதான் ஆர்வி. இல்லேல்லே, ஆர்வியோட ஸன்தான் இவர்'' என்றார்.
"ஆர்வி பழம்பெரும் எழுத்தாளர். நிறைய நாவல்கள், குணச்சித்திரங்கள், சிறுகதைகள், சில்ரன்ஸþக்கெல்லாம் எழுதியிருக்கார்...!''
"ஆமா சுஜா. ஆர்விக்காக நாம் இவர்கிட்டேயிருந்து இந்த அபார்ட்மென்டை வாங்கணும்!''
எனக்கு எவ்வளவு பெருமை!
வெ.கிருஷ்ணப்பிரஸாத் எழுதிய "சாதனையாளர் ஆர்வி" நூலிலிருந்து
Comments