கோடை விடுமுறைக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்த கோடை விடுமுறையை எவ்வாறு செலவழிக்கப் போகிறோம் என்று திட்டமிடும் நேரம் இது. எனவே, தமிழகத்தில் உள்ள நல்ல சுற்றுலாத் தலங்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.
சுரபுன்னைக் காடுகள் இடையே நீண்ட நெடிய நீர்வழிப் பாதைகள்; அதில் படகுச் சவாரி; கண்ணைக் கவரும் தென்னை மரச் சோலைகள், பஞ்சு பஞ்சாய் வானில் மிதக்கும் மேகங்கள்... கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவாரத்தின் எழில் தோற்றம்தான் இவை.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் என்னும் சுற்றுலா தலம் உள்ளது. கடலோரத்துக்கு அருகே அமைந்த வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழும் வகையில் இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இந்தியாவில் இரு இடங்களில்தான் தில்லைவனக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ஒன்று கொல்கத்தாவை ஒட்டிய கடலோர சதுப்பு நிலப் பகுதியில் இந்த மாங்குரோவ் காடுகள் அதிகப் பரப்பில் உள்ளன. அதற்குப்பிறகு தமிழகத்தில் பிச்சாவரத்தில்தான் தில்லைவனக் காடுகள் உள்ளன.
இங்கு சதுப்பு நிலம் - கடலோடு இணைந்த நூற்றுக்கணக்கான மைல் தூரம் கொண்ட ஆழமற்ற நீர்க் கால்வாய்கள் படகுப் பயணத்துக்குப் பாதை வகுத்துத் தருகின்றன.
பிச்சாவரம் உப்பங்கழிப் பகுதியில் சுமார் 1100 நீர்வழிப் பாதைகள் உள்ளன. அவற்றின் ஓரம் பச்சைப்பசேலென்று காணப்படும் சுரபுன்னைக் காடுகள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை.
செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பார்க்கும்போது பிச்சாவரம் தில்லைவனக் காடுகள் சுமார் 1100 ஹெக்டேரில் பச்சை மலை போல் பரந்து விரிந்து கிடப்பதாகத் தெரிவிக்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழகக் கடல்வாழ் உயிரின ஆய்வு மையப் பேராசிரியர் கதிரேசன்.
பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.
2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.
இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மைய சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரபுன்னை மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் காட்சி மிக அற்புதமானது. இந்த அற்புதக் காடுகளின் தன்மையும் அழகும் கெடாவண்ணம் பிச்சாவரம் படகுத் துறைப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பல வசதிகளையும் போதிய பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மையங்கள் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும்.
சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.
பிச்சாவரம் புன்னை வனக் காட்டின் மையப் பகுதியில் சுற்றுலாத் துறை விடுதிகள் உள்ளன. இங்கு தங்குவது அத்தனை பாதுகாப்பானது அல்ல என்பதோடு, இங்கு உணவு வசதியும் இல்லை. வனப் பகுதியின் நுழைவுப் பகுதியில் உள்ள படகுத் துறையில் சிற்றுண்டிகள் கிடைக்கின்றன. பிச்சாவரம் வனப் பகுதி கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளைக்கு நகர்ப் பேருந்து வசதி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் தொலைபேசி எண்: 04144-24923 சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739 கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-24227.
சற்று வசதியாக தங்க: சாரதாராம் ஈகோ ரிஸார்ட் (Saradharam Eco Resort ) உள்ளது.
Arignar Anna Tourism Complex, Pichavaram, Tamilnadu - 608102
Phone: 0091-4144-249399, 9442591466நன்றி: தினமணி இணைய தளம்
Comments