Skip to main content

லஞ்சம் - சுஜாதா




 லஞ்சம் என்பதற்கு தூய தமிழ்ச் சொல்லாக ‘கையூட்டு‘ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரை இந்தச் சொல் 1910-ல் கோபிநாத் ராவின் ‘சோழ வம்ச சரித்திரச் சுருக்கம்‘ என்ற புத்தகத்தில் முதலில் வந்துள்ளது. லஞ்சம், சோழர் காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை நீலகண்ட சாஸ்திரியின் ‘The Cholas‘ல் காணமுடிகிறது. சோழர்காலத்தில் அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து நூறு பிரம்படி கொடுத்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சில சமயங்களில் தலையையும் கொய்திருக்கிறார்கள்… அல்லது யானையால் மிதித்திருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோயிலுக்கு ஒரு வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதும் என்று கொலைக்குற்றங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக் கின்றன. இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் ‘இவர்கள்‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப் போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போல திரும்பி வந்து, போஸ்டர் ஒட்டி விழாக் கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் ஆராய்ந்தால் லஞ்சம் சங்க காலத்திலிருந்து இருக்கிறதை யூகிக்கலாம்.

நவீன இந்தியாவில் லஞ்சம் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்தது. திவான் பஹதூர், ராவ் பஹதூர், ராவ் சாஹிப் பட்டங் கள் எல்லாம் கொடுப்பதில் பின்னணி இருந்தது. ஆங்கிலேயர்கள் நம்மைத் திறமையாக ஆள்வதற்கு, அடக்குவதற்கு லஞ்சம் பயன்பட்டது என்றும் சொல்லலாம். சிரஸ்தார், தாசில்தார் போன்றவர்களின் லஞ்சங்களை வெள்ளைக்காரன் பெரிதாக மதிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் ‘சம்பளம் எவ்வளவு.. கிம்பளம் எவ்வளவு‘ என்பதுதான் அப்பவே பொது வழக்காக இருந்தது.

லஞ்சம் – தெலுங்கு வார்த்தை. லஞ்சலம் என்றால் விலைமகள். அதற்கும் இதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்று யாராவது ஆராயலாம். தற்போது இருக்கிறது.

லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அதிகாரிகள் கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால் பண்டமாற்று. ‘வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்‘ என்று குமரேச சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்… எல்லாம் நாட்டின், இணைப் பொருளாதாரத்தின் அங்கங்கள்.

மேற்கண்ட வரையறையில் உள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடு – லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை, மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். மேலும் கடமையைச் செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அதிகாரிகளை நாம் அதட்டலாம். வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள்.

முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை. ஒரு என்ஓசி கொடுக்கவோ, ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்கவோ, ஒரு பாஸ்போர்ட் எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை. இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்றொரு நாள் வரவேண்டும். அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதனால் இது நியாயமானதாகப் படலாம்.

இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக் குறைக்க மற்றொருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள். உமக்கு முன்னே வந்து காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத கிச்சாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச் சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு ‘ஸாஷே‘ (sachet)அளவு பாவம்தான். ரயில்வே புக்கிங் ஆபீஸில் நாற்பது பேர் க்யூவில் நின்றுகொண் டிருப்பார்கள். உள்ளே சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கௌண்ட்டர் அருகில் வந்து முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்தபின் கிளார்க்கை விசாரித்து பான்பராக் பரிமாறிக்கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார். இதை மற்ற பேர் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பி.பி-காரர் மட்டும் லேசாக எதிர்ப்பார். க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் – இந்திய தேசிய குணம். சில வேளைகளில் மற்றவர் எதிர்ப்பார்கள். பல வேளைகளில், ‘நமக்கேன் வம்பு‘ என்று விட்டுவிடுவார்கள். Apathy சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.

இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய பணம் ஒரு சர்க்கார் அதிகாரிக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல், அதிகாரி ஒரு க்வார்ட்டர் அடிப்பதற்கோ, அவர் மகன் காப்பிட்டேஷனுக்கோ, மனைவி நகைக்கோ உதவுகிறது.

இவ்விரண்டு வகையில்தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது. கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள் – பர்த் சர்ட்டிபிகேட், டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அதிகாரிகளின் கையெழுத்து தேவைப்படும் எந்தச் செயலும்.
கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள் – தரக்குறைவான பாலத்துக்கு இன்ஸ் பெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட் பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, சர்க்கார் நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.

முதல் வகையான ‘பெட்டி கரப்ஷன்‘ (petty corruption) என்பதை ஒழிக்க மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி அரசுக் கட்டுப் பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரம் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம் பேறாது என்று ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.

மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் – ரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம் கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது.

அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அதிகாரிகளும், அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். ‘ட்ரான்ஸ் பெரண்ட் கவர்ன்மெண்ட் (transparent government) என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப ஃபாரங்களும் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

இரண்டாவது லஞ்சம்தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய முடியாது. ‘தெஹல்கா(Tehelka) போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி பயன்படும். இதில் அதிகாரிகள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள். சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள்தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின் சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அதிகாரி – ஒரு இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள் கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது நடக்கவில்லை என்றால், தவறாமல் கோர்ட்டுக்குப் போக வேண்டும். டாஸ்டாயவ்ஸ்கியின் கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக – 91 வயதில்!

அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் சுத்தமாக இருந்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம் தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நல்லது. பணத் தேவை இருக்காது.

இதைவிட்டால் ஆரம்பத்தில் சொன்னவாறு சோழ ராஜா காலத்து தண்டனை முறைதான் பயனளிக்கும். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு யானை வாங்க வேண்டும்!
*********************************************************************************
அந்நியனில் லஞ்சம் பற்றி சுஜாதா: 
"அஞ்சு பைசா லஞ்சம் வாங்குறது தப்பா?"
"அஞ்சு லட்சம் பேரு, அஞ்சு லட்சம் தடவை அஞ்சு பைசா லஞ்சம் வாங்கினா...??"
"தப்பு மாதிரிதான் தெரியுது,"
"அதுதாண்டா நடக்குது இங்க."
                                                             ==============
"ஏங்க, ஒலகத்துல என்னவோ யாருமே லஞ்சம் வாங்காத மாதிரி சொல்றீங்களே, இந்தியாவுல மட்டும்தான் லஞ்சம் வாங்குறாங்களா என்ன?"
"லஞ்சம் ஒலகம் பூரா இருக்குடா, என்ன, மத்த நாடுகள்ல கடமையை மீறதற்குதாண்டா  லஞ்சம், இங்க, கடமையைச் செய்யவே லஞ்சம் வாங்குறீங்க."
**********************************************************************************

 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...