Skip to main content

விஸ்வரூபம்....விமர்சனம்




விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை!

அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல்.

நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும், வில்லங்க பூஜாவும் வில்லன்கள் கையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

கமல் திடீரென வீராவேசமாக, வழக்கமான ஹீரோ போல , வில்லன்களை அடித்து நொறுக்க, தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்க, ஆக்‌ஷன் படமாக வேறு தளத்தில், ஆப்கன் தலிபான் பின்னணியில் விரிகிறது.

ப்ளாஷ்பேக்கில் அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார் கமல். ஆனால் உண்மையில் அவர் ரா அதிகாரி. அமெரிக்க எப்பிஐக்கு உதவுகிறார். அமெரிக்காவை பழிவாங்க நியூயார்க் நகரையே அழிக்க புறாக்களைப் பயன்படுத்தி அணுகுண்டு வைக்கும் தலிபான்கள் திட்டத்தை FBI-ஐயுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை!

கமல் நன்றாக நடித்திருக்கிறார்... பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஸ்வீட் இனிப்பாக இருக்கிறது என்று சொல்வது அபத்தத்துக்கு இணை!. மனுஷன் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். முகத்தில் தெரியும் வயதின் ரேகைகள்தான் கவலை தருகிறது. ஆனால் அதற்கேற்ப கதையை அமைத்துக் கொண்டதுதான் கமல் ஸ்பெஷல்!.

பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் தெரிந்த பிற முகங்கள் சேகர் கபூர், நாசர் மட்டும்தான்.

இது வரையிலும் தமிழ்த் திரையில் காட்டப்படாத நியூயார்க் நகரின் ஏனைய இடங்கள் எல்லாம் படமாக்கியுள்ளார்கள். பார்க்காதவர்கள், அட நியூயார்க் இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப்பட்டுப் போவார்கள்.

ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல்.

சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான் லாய்.

ஓளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் கொஞ்சம் தூங்கி விட்டார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம்.

அந்த புறாக்காட்சிகள், ஒரு மெக்சிகன் படத்திலிருந்து தழுவல் போலிருக்கே கமல் சார்!

முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று என்று காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் தமிழகத்தை பற்றி எங்கே வருகிறது என்று தேட வேண்டியுள்ளது. ஒரே ஒரு காட்சியில் வில்லன் (தலிபான் தலைவர் முல்லா ஒமர்) தமிழ்நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார். அத்தோடு மதுரை, கோவை, அகமதாபாத் என்று பஸ்ஸுக்கு ஆள் கூப்பிடுவது போல் வரிசையாக சில ஊர் பெயர்களை சொல்கிறார்.

மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழுக்கு தெரிந்த ஒரே முகம் நாசர் மட்டும்தான்.

பின்லேடன் பற்றி ஒபாமா சொல்லும் போது, பிண்ணனியில் கமல், ஆண்ட்ரியாவின் உரையாடல் இயல்பாக இருக்கிறது.

ரூ. 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதை தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் அல்லவா இது!. நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும்.

விஸ்வரூபம் 2 இந்தியாவில் தொடரும் என்று முடித்திருந்தாலும், அது அமெரிக்காவில் தொடரட்டும் என்றுதான் அட்வான்ஸ் கொடுத்திருப்பார் போலிருக்கிறது ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன்.

சராசரி ஹாலிவுட் படங்களை விட நன்றாகவே படமாக்கியுள்ளார் கமல். நடுவில் கொஞ்சம் கத்தரியை போட்டிருக்கலாம்.

Any how... கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!

நன்றி: THATSTAMIL.COM 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...