Skip to main content

சுவாரசியமான பதிவு - சுஜாதா என்ற சிநேகிதர் - ரா.கி.ரங்கராஜன்


நன்றி: பால்ஹனுமான் வலைப்பதிவு 

சுஜாதாவின் பொழுதுபோக்கு வேலிகளை உடைப்பது. கதைக்கு எடுத்துக் கொள்கிற விஷயத்திலேயும், கதையை எழுதுகிற நடையிலேயும், கதைக்குக் கொடுக்கிற அமைப்பிலேயும் பழைய வேலிகளை உற்சாகமாக உடைத்துக் கொண்டு தனிக்காட்டு ராஜாவாய்த் துள்ளுகிறார் அவர். என்ன புதுமைகளைப் புகுத்தினாலும் தமிழினால் தாங்க முடியும் என்பதை உணர்ந்திருப்பதால் பேனாவை வைத்துக் கொண்டு சுதந்திரமாய்ச் சிலம்பு விளையாடுகிறார். ஓரோர் சமயம் அவருடைய கையெழுத்துப் பிரதியைப் பார்க்க நேர்கையில், “டெலிபோனை வைத்து விட்டு, ‘வஸந்த், பதினைஞ்சு நிமிஷத்திலே தயாராகணும்’!” என்று வாக்கியம் மொட்டையாக நின்று விடுவதைக் கண்டு நான் திடுக்கிட்டதுண்டு.  அந்த இலக்கண விநோதத்தை அனுமதிக்கக் கூடாதென்று முடிவு செய்து, உடனே பேனாவை எடுத்து, ‘என்றான்‘ என்று முடிப்பேன். முடித்துவிட்டு வாசித்துப் பார்த்தால், அவர் மொட்டையாக விட்டிருந்தபோது இருந்த அழுத்தம் இந்தப் பூர்த்தியான வாக்கியத்தில் இல்லை போலிருக்கும். முணுமுணுத்தபடியே அந்த ‘என்றானை‘ அடித்துவிடுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு மனிதன் வாழ்க்கையில் எத்தனை முனைகளைத் தொடுகிறானோ அத்தனைக்கத்தனை வெற்றிகரமாய் விளங்குகிறான் என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு சுஜாதா. சங்கப் பாடலை ரசிக்கிற மாதிரியே ஞானக்கூத்தனைச் சுவைக்கிறார் அவர். கம்ப்யூட்டரின் மர்மங்களை விளக்குகிற அதே ஆர்வத்துடன் மதங்களின் தத்துவங்களை எடுத்துச் சொல்கிறார். பிரியமான அப்பாவைப் பிரிந்த சோகமாகட்டும், பரூரில் மின்னணுக் கருவி மூலம் நடந்த தேர்தலின் கோலாகலமாகட்டும், சமமான சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறார். இளையராஜாவின் இசையில் லயித்தபடியே, திரைப்பட விழாக்களை விமர்சனம் செய்தபடியே, ‘மியான்டாட் போயிட்டானா! அப்பாடி!‘ என்கிறார். இவ்வளவுக்கும் சிகரமாய், பிரமாதமான நகைச்சுவை உணர்வு வேறே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படிப்பட்ட ஒரு சகலகலா வல்லவன் ஒரு சரித்திர நாவல் எழுதாமல் இருந்திருந்தால், அது தமிழுக்குச் செய்த துரோகமாக இருந்திருக்கும். சுஜாதா அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை. இதோ:
 
சிப்பாய்க் கலகம் என்று தப்பாய் வர்ணிக்கப்பட்ட முதலாவது இந்திய சுதந்திரப் போரைப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்து, அந்த யுத்தத்தில் தமிழனுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு இல்லாமல் போய் விட்டதே என்ற குறையைத் தீர்க்கும் வகையில், ‘கருப்பு சிவப்பு வெளுப்பு‘, மன்னிக்கவும், ‘ரத்தம் ஒரே நிறம்.
 
நுட்பமான அறிவு கொண்ட எழுத்தாளராக இருந்தாலும் கொம்புத்தனத்துக்குப் போய்விடாமல் எச்சரிக்கையாக இருப்பவர் சுஜாதா. வித்தியாசமாக எழுத வேண்டுமென்பதற்காகக் கசப்பாகவோ அருவருப்பாகவோ எந்தக் கதையையும் அவர் முடித்தது கிடையாது. மனிதாபிமானக் கண்ணோட்டம் அவருடைய வலு. மனிதனின் குணாதிசயம் இப்படி என்று காட்டுவாரே தவிர எவரையும் கீழ்மைப் படுத்துவதில்லை.   எந்தப் பொல்லாத கூட்டத்துக்குள்ளும் ஒரு நல்லவன் இருப்பான் என்று நம்புகிறவர். வாழ்க்கையின் நல்ல பகுதியையும் பார்க்கிறவர். இந்த நாவலில், அவர் விரும்பியிருந்தால் அத்தனை பிரிட்டிஷ்காரர்களும் அக்கிரமக்காரக் கொடியவர்கள் என்று சித்தரித்திருக்க முடியும். அல்லது நல்லவர்களைப் பற்றிச் சொல்லாமலே இருந்திருக்கலாம். ஆனால் மனசாட்சியுள்ள ஆஷ்லியைப் படைத்து, ‘நீ கறுப்பர்கள் என்று சொல்கிறாயே, அதில் இருக்கும் வெறுப்பும், ஆணவமும் தான் இன்று கலகம் துவங்கியிருப்பதற்குக் காரணம்‘ என்று அவனைப் பேச வைத்திருக்கிறார். ‘இந்தியர்களைப் பொறுத்த வரை இரக்கம், அனுதாபம் என்பதே நமக்கில்லை,‘ என்று தன் இனத்தையே சாடுகிறான் அந்த ஆங்கிலேயக் காப்டன். எதிரியான முத்துக்குமரனை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தப்பிக்க வைக்கிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதேபோல், துன்பத்துக்கு மேல் துன்பமாகத் தாங்கிக் கொண்டு, ‘ஆலப்பாக்கம்…யோவ் ஆலப்பாக்கம்..‘ என்று பித்துப் பிடித்தவளாக முத்துக்குமரனைப் பின்தொடரும் பூஞ்சோலை, எல்லாம் இழந்தாகி விட்டது என்ற கையறு நிலையை அடையும்போது, யுத்த பயங்கரத்தின் நடுவே சிரித்துக் கொண்டிருக்கும்  அந்த அனாதைக் குழந்தையை வளர்க்கத் தீர்மானித்து அதன் கன்னத்தைக் கண்ணீரால் தேய்த்துக் கொண்டு புறப்படுவதும் சுஜாதாவின் ஆப்டிமிஸ்ட் கண்ணோட்டத்தின் இன்னொரு வடிவம்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இருந்தாலும்கூட, தான் எழுதுவது ஒரு சரித்திர நாவல் என்று சுஜாதா நடுநடுவே தன்னைக் கிள்ளி விட்டுக் கொண்டிருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.  சமூக நாவலாயிருந்தால் சில இடங்களை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டுவிட்டு அலட்சியமாக மேலே போய்க்கொண்டிருப்பது அவர் வழக்கம். இங்கே அப்படிச் செய்யவில்லை. விளக்க வேண்டிய இடங்களில் நின்று விளக்கிவிட்டுத்தான் அடுத்த வரிக்குப் போகிறார். இன்னொன்று: சரித்திர நாவலுக்குக் ‘கலர்‘ சேர்க்க வேண்டுமென்றால் நிச்சயம் ஒரு சாமியார் இருக்க வேண்டும் என்பது கல்கி காலத்திலிருந்து நிலவி வரும் சம்பிரதாயம். அதற்கு விரோதமில்லாமல் சுஜாதாவும் ஒரு பைராகியைச் சிருஷ்டித்திருக்கிறார். இருந்தாலும் இவன் வித்தியாசமான பைராகி. வைத்தியம் முதல் வாள் வீச்சு வரை எல்லா வித்தைகளையும் அறிந்த இந்தப் பைராகி சமயத்தில் பச்சையாக ஜோக்கும் அடிக்கத் தெரிந்தவன். கலகலப்பில் வசந்தின் சரித்திரப் பாதிப்பு.
 
இப்படி, தன் தனித்தன்மையையும் விட்டு விடாமல், அதே சமயம் சரித்திரக் கதை எழுதும்போது செய்ய வேண்டிய தியாகங்களையும் செய்து, இறங்கி விட்டால் இரண்டிலொன்று பார்த்து விடுவது என்ற விஞ்ஞானியின் தீவிரத்துடனும், அக்கறையுடனும், கூடைகளாக விவரங்களைத் திரட்டிக் காப்ஸ்யூல்களாக வாசகருக்கு வழங்கியிருப்பதால், சுஜாதாவின் வெற்றிகரமான நாவல்களில் ஒன்றாக ‘ரத்தம் ஒரே நிறம்‘ விளங்குவதில் ஆச்சரியமில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்றைய எழுத்தாளர்கள் கல்கி கோத்திரம். இன்றைய எழுத்தாளர்கள் சுஜாதா கோத்திரம். என் அன்புக்குரிய சிநேகிதரான இந்த ரிஷியை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் பொறாமையாகவும் இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது.
 
சென்னை – 23                    ரா.கி.ரங்கராஜன்
14-1-83
 
 
 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...