இந்தப் புத்தகக் கண்காட்சியை, வருடம் தவறாமல், கிட்டத்தட்ட 25 வருடங்களாக பார்த்து வருகிறேன். முதலில் கடலூரில் இருந்தபோது ஆரம்பித்த பழக்கம் (1988 என்று நினைக்கிறேன்), பிறகு சேலம் சென்ற போதும் தொடர்ந்தது. 1996-இல் சென்னைக்கு இடம் பெயர்ந்த பின் சுலபமாக செல்ல முடிந்தது. கன்னிமரா ஹோட்டலுக்கு எதிரே உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்குவது என்பது ஒரு சம்பிரதாயமே.
என்னுடைய புத்தகங்களில் ஒரு பகுதி |
வருடம் முழுவது லாண்ட்மார்க், ஹிக்கின்போத்தம்ஸ் போன்ற கடைகளில் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்த நான், தற்போது இரண்டு வருடங்களாக flipkart, amazon என ஆன்லைன் புத்தகக் கடைகளில் வாங்குகிறேன். இவ்வகை ஆன்லைன் கடைகளில் (??) வாங்குவது என்பது மிக வசதியான ஒன்று. பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
- பெட்ரோல் செலவு, அலைச்சல் மிச்சம்
- நடுஇரவு 12 மணிக்குக்கூட ஷாப்பிங் செய்யலாம்
- வருடம் முழுவதும் தள்ளுபடி கிடைக்கிறது (தள்ளுபடியை கழிவு என்று சொல்லுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த வார்த்தையை புத்தகங்களுடன் சம்பந்தப்படுத்த கஷ்டமாக இருக்கிறது).
- தேவையான புத்தகங்களை தேர்வு செய்து, உடனே வாங்க முடியாவிட்டால், wishlist -இல் சேர்த்துவிடலாம். பின் எப்போது வேண்டுமோ அப்போது வாங்கிக் கொள்ளலாம். அந்த புத்தக விவரங்கள் பத்திரமாக wishlist -இல் எவ்வளவு நாளானாலும் இருக்கும்
- வீட்டுக்கு புத்தகங்கள் வந்தபின் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.
சமீபத்தில் கரையான் படையெடுப்பினால் சில நல்ல புத்தகங்களை இழக்க நேர்ந்தது. எனவே, இனிமேல் சற்று கவனமாக இருப்பேன் என நினைக்கிறேன். இந்த வைராக்கியம் அடுத்த புத்தகம் வாங்கும் வரை தாங்கும் என நினைக்கிறேன்.
Comments