கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு கண்கவர் இடங்களில் அதிகம் அறியப்படாத இடம், கவி. பத்தனம்திட்டா மாவட்டத்தில், தேக்கடியிலிருந்து சுமார் 40 கி.மி. தொலைவில் உள்ளது இந்த அழகான இடம்.
நிறையப்பேருக்கு இன்னும் இதைப் பற்றி அதிகம் தெரியாததால் இந்த இடம் இன்னும் அதிகம் மாசுபடாமல் இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கவிக்கு செல்ல வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவு சீட்டு பெற்றே செல்லவேண்டும்.
தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயம் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். கவி இதனுள்ளே இருப்பதால் அதன் தனித்துவமான அழகு குன்றாமல் சிறப்பாக இருக்கிறது. கவிக்கு ஒரு முறை சென்றால் ஸ்விட்சர்லாந்து அல்லது குறைந்த பட்சம் காஷ்மீர் சென்ற அனுபவத்தைப் பெறலாம்.
கவி பசுமை மாறா காடுகள் (evergreen forests ) மத்தியில் உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, மான் ஆகிய பல வனவிலங்குகள் உள்ளன. கவிக்கு செல்லும் பாதை வளைந்து நெளிந்து தேனீர் எஸ்டேட்கள் வழியே செல்லும்போது, வழியில் சின்ன, சின்ன அருவிகள், வாய்க்கால்கள் , ஓடைகள் ஆகியவை குறிக்கிடுகின்றன. அதிக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தால் ஒரு இடம் எவ்வளவு இயற்கை செழிப்புடன் இருக்கும் என்பதற்கு கவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பம்பா தாவரவியல் பூங்கா இங்குள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3400 அடிகள் மேலே உள்ள கவியிலிருந்து சபரிமலை மிக அருகே உள்ளது.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் இங்கு செல்ல ஏற்ற சூழல் உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை பெய்வதால் இரவு நேரத்தில் 10 டிகிரி வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. எனவே குளிர் அதிகமாகவே இருக்கும். நல்ல வேளை இங்கு தங்குவதற்கு இடம் இல்லை. இதை இப்படியே கேரள அரசு வைத்திருந்தால் நல்லது.
புகைப்படங்கள் நன்றி: மை கேரளா ஹோட்டல்ஸ் வலை தளம்
Comments