குடிநீர் மிக
இன்றியமையாத, அதிக லாபம் தருகின்ற வணிகப் பொருளாக மாறிவிட்டது. குடிநீர்த்
தேவை அதிகரித்துவிட்டது என்பது மட்டுமல்ல, நல்ல குடிநீர் கிடைப்பது அரிதாகி
வருகிறது என்பதுதான் அதைவிடக் கவலையளிப்பதாக இருக்கிறது. இப்படிப்பட்ட
நிலையில், அரசு மேற்கொள்ளும் முடிவுகள், பொதுமக்களைவிடவும் தண்ணீரை
விலைபேசும் வியாபாரிகளுக்கு அதிக நன்மை தருவதாக அமைந்துவிடக்கூடாது.
தற்போது சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ள "1,000 லிட்டர் குடிநீர்
விலை ரூ.40; வணிகப் பயன்பாட்டுக்கு ரூ.60' என்கிற திட்டம் மக்களுக்குப்
பயன்படுவதாக அமையாமல் இடைத்தரகர்களாகச் செயல்படும் வியாபாரிகளுக்குச்
சாதகமாகிவிடுமோ என்கிற அச்சம் மேலிடுகிறது. இந்தத் திட்டம்
புதியதல்ல. ஏற்கெனவே அமலில் உள்ள, "குடிநீர் தேவையெனில் தொலைபேசியில்
கூப்பிடுங்கள்' என்ற திட்டத்தில் 6,000 லிட்டர் தண்ணீர் ரூ.400-க்கு வாடகை
லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாட்டுக்கு இதே
குடிநீரின் விலை ரூ.510. இந்தத் திட்டமும் அமலில் இருக்கும் என்று
சொல்லப்பட்டாலும், வெளியில் தெரியாமல் ஆக்கப்படும் என்பதைச் சொல்லித்
தெரியவேண்டியதில்லை. இரண்டு திட்டங்களும் ஒன்றேபோலத் தோன்றினாலும்
உண்மையில் ஒரே தன்மை கொண்டவை அல்ல. ஒரு நுகர்வோர் தொலைபேசியில்
தொடர்புகொண்டு, தண்ணீரைக் கேட்கும்போது, அதைக் கொடுப்பதா வேண்டாமா என்பதை,
பொது விநியோகத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறதா என்று கணக்கிட்டுத்
தீர்மானிக்கும் அதிகாரம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு இருக்கிறது.
எந்த
முகவரிக்கு (சில நேரங்களில் போலி முகவரி என்றாலும்) குடிநீர் கொண்டு
செல்லப்படுகிறது என்ற விவரம் அறிய முடிகிறது. அது வணிகப் பயன்பாட்டுக்கோ
அல்லது தொழில்கூடத்துக்கோ கொண்டு செல்லப்படும்போது, இடையில் ஆய்வுசெய்து
விநியோகத்தைத் தடுத்து நிறுத்தவும் அதிகாரம் இருக்கிறது. இப்போது
டேங்கர் லாரியைக் கொண்டு வந்து, பணம் செலுத்தினால் போதும் என்கின்ற
திட்டத்தில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு எந்தக் கண்காணிப்போ, தடுக்கும்
- மறுக்கும் அதிகாரமோ இல்லை. ஒரு நிர்வாகம் என்ற நிலையிலிருந்து வெறும்
வியாபாரி என்கின்ற நிலைக்கு வாரியம் மாறிவிடுகிறது. மேலும், இந்த
வியாபாரத்தில் சென்னை குடிநீர் வாரியம் லாபம் அடைகிறதா என்றால் அதுவும்
இல்லை. கொள்ளை லாபம் பார்க்கிறவர்கள் வழக்கம்போல குடிநீர் வியாபாரிகள்தான்.
ரூ.240-க்கு 6,000 லிட்டர் குடிநீரை வாங்கிச் செல்லும் இந்த லாரி
உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்போகும் விலை சுமார் ரூ.1,000-மாக இருக்கும். அதை
யாரால் தடுக்க முடியும்?
சென்னை குடிநீர் வாரியம் அல்லது எந்தவொரு
நகராட்சி, மாநகராட்சியும், டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதன்
அடிப்படை நோக்கம், குடிசைவாழ் மக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டும்
என்பதுதான். குடிசைப் பகுதிகள் அதிகமாக இருந்ததாலும், அதிக நடை செல்ல
வேண்டியிருந்ததாலும், டேங்கர் லாரிகளை வாடகைக்கு அமர்த்தத் தொடங்கினார்கள்.
இது பெரும் ஊழலுக்கு வழிவகுத்தது. பொய்க்கணக்குகள் அதிகரித்தன. லாரிகளின்
நடை எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டு, வாடகைப் பணத்தில் கையாடல் நடைபெறத்
தொடங்கியது. கண்காணிப்பு இல்லாததால், மக்களுக்கான குடிநீர். பல நேரங்களில்
குடிசைப் பகுதியில் வழங்கப்படாமல், ஓட்டல்களுக்கு வழங்கப்படுவதும்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முறைகேட்டில் வாரிய ஊழியர்களுக்கும்,
மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லித் தெரிய
வேண்டியதில்லை. பல மாநகராட்சிகளில், மேல்நிலைத் தொட்டியில்
நீர்ஏற்றப்பட்ட அளவு, பொது விநியோகத்துக்குத் தேவையான அளவைக் காட்டிலும்
மிக அதிகமாக இருப்பதும், கூடுதலான குடிநீர் அளவு விற்பனை செய்யப்பட்டிருக்க
வேண்டும் என்று தீர்மானிக்கும் பட்சத்தில், விற்பனையான குடிநீர் வருவாய்
குறைவாகவும், இதைவிட சில நூறு மடங்கு அதிகமானதாக நீரேற்று மின்கட்டணச்
செலவு இருப்பதும் உள்ளாட்சித் தணிக்கைகளில் தெரியவந்துள்ளன.
இத்தகைய
சூழ்நிலையில், ரூ.40-க்கு 1,000 லிட்டர் தண்ணீரை எந்தக் கட்டுப்பாடும்
இல்லாமல் விநியோகம் செய்தால், யாருக்கு இழப்பு? நீரேற்று நிலைய
மின்கட்டணத்துக்குக்கூட இந்தப் பணம் போதாதே! மக்களுக்குக் குடிநீர்
விநியோகம் செய்வதுதான் சென்னை குடிநீர் வாரியத்தின் முதல் கடமை. இந்தக்
கடமையைச் செய்ய, நீர் ஆதாரங்களைக் காப்பதும், போதுமான அளவு குடிநீரைச்
சுத்திகரித்து விநியோகிப்பதும் மிகமிக முக்கியம். குடிநீரைக்
குறைந்தவிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் நிரப்பி
விற்றுக்கொண்டிருந்தால், அதன் விளைவாக மக்களுக்கான குடிநீர்
விநியோகத்தில்தான் தட்டுப்பாடு ஏற்படும். திருமணம் போன்ற
பொதுநிகழ்வுகளுக்காகக் குடிநீரை விற்பதில் தவறு இல்லை.
இத்தகைய
நிகழ்வுகளுக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு, அந்த நிகழ்வை
உறுதிசெய்துகொண்டு, குடிநீரை விலைக்கு வழங்குவது மட்டுமே நியாயமாக இருக்க
முடியும். ஓட்டல்கள் போன்ற வணிகத் தேவைக்காக குடிநீர் விற்பனை
செய்யும்போதும், அத்தகைய வணிக நிறுவனங்கள் தங்களை குடிநீர் வாரியத்தில்
பதிவு செய்துகொள்வது, ஒரு மாதத் தேவைக்கான குடிநீர் கட்டணத்தை முன்பணமாகப்
பெறுவது, மின்கட்டண உயர்வுக்கேற்ப விலை நிர்ணயிப்பது ஆகியவை கருத்தில்
கொள்ளப்படவேண்டும்.
யார் வேண்டுமானாலும், டேங்கர் லாரியைக் கொண்டு
வந்து மலிவு விலையில் குடிநீர் வாங்கிச் செல்லலாம் என்றால், சென்னை
குடிநீர் வாரியம் லிட்டர் 4 காசுக்கு விற்கும் குடிநீரை, எந்த உழைப்பும்
இல்லாமல் ரூ.4-க்கு விற்று சம்பாதிக்கும் கூட்டத்தை அரசாங்கமே
உருவாக்குகிறது என்று பொருள். தவித்த வாய்க்குத் தண்ணீர் தரவேண்டுமே
தவிர, தனியார் வியாபாரிகள் கொள்ளை லாபமடைய குடிநீர் வாரியம் கருவியாகச்
செயல்படுவது ஏற்புடையதல்ல.
நன்றி: தினமணி தலையங்கம் (தினமணி இணைய தளம்)
Comments