(பாரதி 1930 களில் எழுதிய இந்த கருத்துக்கள் இன்றும் ஏற்புடையவை. இதைப் படிக்கும் போது அவருடைய தீர்க்கதரிசனம் வெளிப்படுகிறது).
* ஒருவன் எத்தனை சிறப்புகள் பெற்றிருந்தாலும், விசேஷ குணங்கள்
அடைந்திருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு
குறைந்தவனாகவே இருக்கும்படி இயற்கையமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
* படித்தவன் படிக்க முடியாதவனை குருடனாகக் கருதி இழிவு செய்கிறான். பணம் கொண்ட செல்வந்தனோ பணமில்லாத ஏழையை பிணமாகக் கருதி கேவலப்படுத்துகிறான்.
* மனிதர்கள் எலியொன்று பொறிக்குள்ளே அகப்பட்டுத் தவிப்பதுபோல, ஆசையினால் ஒரு சில நெருக்கடிகளுக்குள் தங்களைத் தாங்களே அகப்பட வைத்துக் கொண்டு தவிக்கிறார்கள்.
* ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பரமாத்மாவின் சக்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிலத்திற்குள் பல சக்திகள் வெளிவராமல் முடங்கியிருப்பதைப்போல, இந்த சக்தி வெளிப்படாமல் மறைந்து கிடக்கிறது. அறியாமை இருக்கும் வரையில் இந்த சக்தி வெளிப்படாமல்தான் இருக்கும்.
* ஒருவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் குறைந்தவனாகவே இருப்பான். இதுவே, இயற்கை நியதி. எனவே, கற்றவர் கல்லாதவரையும், பணக்காரர்கள் ஏழையையும் இழிவாக நடத்துவது தவறானது.
* தனது விருப்பப்படி செயல்படும் ஒருவர், அச்செயலால் ஏற்படும் எந்த நஷ்டங்களையும் இன்பத்துடனேயே ஏற்றுக்கொள்வார். ஏனெனில், அவர்தான் அந்த துன்பத்திற்கு முழு பொறுப்பாளி ஆகிறார். இவ்வாறு செயல்படுவர் முழு சுதந்திரத்துடன் இருக்கிறார். மற்றொருவர், சுற்றத்தாரின் விருப்பப்படி செயல்களை செய்து அதில் இன்பங்களையே பெற்றாலும், அவர் அடிமையாகவே இருக்கிறார். நீங்கள் சுதந்திரம் பெற்றவர்களாகவே இருங்கள்.
* மனித சமூகத்திற்குள் பேதங்கள் மலிந்து விட்டன. இந்த வேறுபாட்டால் போட்டி, பொறாமை, மனப்போராட்டம், கஷ்ட நஷ்டம் என்று கணக்கில்லாமல் பெருகி மனித வாழ்க்கையே நரகமாகி விட்டது.
* ஒவ்வொரு கணப்பொழுதும் சத்தியத்தையே சிந்திந்து, தர்மத்தையே ஆதரித்துப் பரம்பொருளாகிய கடவுளை அறிய முயல்பவன் எவனோ அவனே மனிதன் என்றும் தேவன் என்றும் சொல்வதற்கு உரியவன் ஆவான்.
* மனிதனுக்குள்ளே கடவுளாகிய பரமாத்மாவின் சக்தி தான் எல்லாவற்றையும் நிகழ்த்துகின்றது என்பதை சாமான்ய நிலையில் அறியமுடியாமல் அறிவானது அறியாமை நிலையில் மறைக்கப்பட்டிருக்கிறது.
Comments