இந்தியாவிலுள்ள வேலையற்ற இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் ஏமாற்று கும்பல்கள் நிறைய செயல்பட்டு வருகின்றன.
இந்த
அப்பாவி இளைஞர்களின் பலவீனங்களை பயன்படுத்தி, இவர்களை சுரண்டுவதற்காகவே
காத்துக் கொண்டிருக்கிறது, ஒரு வெளிநாட்டுக் கூட்டம். இவர்களில்
பெரும்பாலானோர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கருப்பின இளைஞர்கள். படிப்பதற்காகவும், வியாபார
விஷயமாகவும், இந்தியாவுக்கு வருகை தரும் இவர்களின் ஒரே முதலீடு, இணையதள
வசதியுள்ள ஒரு கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் பாங்க் கணக்கு எண் இவை
மூன்றும் தான். உட்கார்ந்த இடத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பாதித்து
விடலாம்; சம்பாதித்த பணத்தை, அடுத்த நொடியே, தங்களது சொந்த நாட்டிற்கு
மாற்றியும் விடலாம்.
இந்த இணையதள மோசடி பேர்வழிகளை பற்றி, ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வந்தாலும் கூட, நம் இளைஞர்கள், தாங்கள் ஏமாறுவது குறித்து விழிப்புணர்வு அடைந்ததாக தெரியவில்லை. ஆன்-லைன் பண பரிவர்த்தனைகள், எந்த அளவுக்கு இந்தியாவை உயரத்துக்கு இட்டுச் செல்கிறதோ, அதே வேகத்தில், குப்புறத்தள்ளி, குழியையும் பறிக்கிறது.
"ஆசையே துன்பங்களுக் கெல்லாம் காரணம்...' என்றார் புத்தர். ஆனால், நம் இந்திய இளைஞர்களுக்கு இருப்பதோ பேராசை. முதலீடு இல்லாமல் வருமானம் வர வேண்டும்; உழைக்காமல் செல்வந்தர் ஆக வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஏமாற்றுபவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
"லட்சக்கணக்கான போன் நம்பரிலிருந்து, ரேண்டம் ஆக செலக்ட் செய்ததில், உங்களது மொபைல் நம்பர், மைக்ரோ சாப்ட் அவார்டுக்கு தேர்வாகி உள்ளது. உங்களுக்கு ஐந்து லட்சம் பவுண்ட் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக உங்களது முகவரி மற்றும் பாங்க் கணக்கு எண் ஆகியவற்றை எங்களுக்கு தெரியப்படுத்தவும். இந்த பரிசு தொகையை உங்களுக்கு அனுப்புவதற்குரிய செலவாக, 10,000 ரூபாயை, நாங்கள் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்தவும். பணம் கிடைத்ததும் < பரிசுத்தொகை, உங்களது வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்...' என தெரிவிக்கும் ஒரு மின்னஞ்சல்.
இதை படித்ததும், பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டதாக கற்பனை செய்து, ரகசியமாக அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தி விடுகின்றனர். காத்திருந்து, காத்திருந்து பரிசு பணம் வரவில்லையே என, அந்த ஏமாற்று பேர்வழிகள் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், இன்னும், 25,000 ரூபாய் அனுப்பு என்பான். இப்படியாக முடிந்த வரை கறந்து, பின், அடுத்த ஏமாளியை தேடி ஓடுவான்.
மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு தான் இதுபோல் ஆபத்து என்றால், இவர்களது அடுத்த இலக்கு, மின்னஞ்சல் முகவரியுடன் இணையத்தளத்தை பயன்படுத்துவது. ஏமாறுகிறவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்.
சமீபத்தில், நண்பர் ஒருவருக்கு வந்த மின்னஞ்சலை பாருங்கள்... ஹூண்டாய் கம்பெனியில், ஒரிஜினல் லோகோ மற்றும் முழு முகவரியுடன், கம்பெனியில் முதன்மை செயல் அலுவலர் பெயரில், ஹூண்டாய் கம்பெனியின் பல்வேறு பிரிவுகளில், காலியாகவுள்ள இடங்களுக்கு, நேரடி தேர்வு நடைபெறுவதாகவும், அதற்கு உங்களது விண்ணப்பம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சம்பளம், 80,000 ரூபாய் முதல், மூன்று லட்சம் வரை. இன்டர்வியூ, ஹூண்டாய் கம்பெனியின், டில்லி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், திருப்பி தரப்படும் டெபாசிட் தொகையாக, 11,500 ரூபாயை நாங்கள் குறிப்பிடும் ஸ்டேட் பேங்க் அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் செலுத்தவும். உங்களது பணம் வந்து சேர்ந்ததும், நுழைவுத் தேர்வுக்காக டில்லி வரும்போது, தாங்கள் தங்குவதற்குரிய லாட்ஜ் விவரம் மற்றும் விமான டிக்கெட்டுகள் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு வேளை, இந்த வேலை உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், தங்களது டெபாசிட் தொகை, 11,500 ரூபாயில், 200 ரூபாய் பிடித்தம் போக, மீதி தொகை உங்களுக்கு திருப்பி தரப்படும் என நீள்கிறது இந்த மின்னஞ்சல்.
இதைத் பார்த்ததும், நம் இளைஞனுக்கு விமானத்தில் பறப்பது போலவும், லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைப்பது போலவும் கனவு விரிகிறது. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? நாம் இந்த வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினோமா? வேலைக்கே விண்ணப்பிக்காமல், எப்படி இன்டர் வியூவுக்கு அழைப்பர். சரி, பல இடங்களில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித் திருக்கிறோம். அதிலிருந்து இவர்கள் தெரிவு செய்திருப்பர் என, போலியாக கற்பனை செய்து, சமாதானமாக பணத்தை அனுப்பி விடுவர். இந்த பலவீனம் தான், ஏமாற்றுபவர்களுக்கு பெரிய பலம்.
இப்படி ஏமாறு பவர்களில் பலர், வெட்கப்பட்டு வெளியில் சொல்வது கிடையாது. ஒரு சிலர் தான் போலீசில் புகார் செய்கின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இப்படி பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படி துணிந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருப்பின இளைஞர்களை, உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, இவர்களையும், இவர்களது வங்கி கணக்கையும் கண்காணித்து, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நைஜீரியா மட்டுமல்லாது சீனாவிலும் இந்த மாதிரி ஏமாற்றும் கும்பல்கள் நிறைய உண்டு. உழைத்து ஒழுங்கான வழியில் முன்னேற வேண்டும் என நம் இளைஞர்கள் நினைக்கவேண்டும் அதற்காக உழைக்க வேண்டும். குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து வெற்றி பெறவேண்டுமென நினைத்தால் தயவுசெய்து அரசியலில் நுழையுங்கள்.
தகவல் நன்றி: தினமலர் இணைய தளம்
Comments