அமெரிக்காவை சேர்ந்தவர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்,(வயது 40). மிக நீண்ட தூர சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றார். பிரான்சில் ஆண்டுதோறும் நடக்கும் "டூர் டி பிரான்ஸ் போட்டியில் திறமை நிரூபித்தார். 21 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் சுமார் 3, 500 கி.மீ., தூரத்தை கடக்க வேண்டியிருக்கும். இதில், அசத்திய ஆம்ஸ்டிராங் 1996 முதல் 2005 வரை தொடர்ந்து 7 முறை பட்டம் வென்று சாதனை படைத்தார்.
சைக்கிள் பந்தய சாம்பியன் லான்ஸ் ஆம்ஸ்டிராங், தன்
மீதான ஊக்க மருந்து பிரச்னையை எதிர்த்து போராடப் போவதில்லை என நேற்று அறிவித்தார். இதையடுத்து இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. "டூர் டி
பிரான்ஸ் தொடரில் வென்ற 7 பட்டங்கள் உட்பட இவரது சாதனைகள் அனைத்தும்
பறிக்கப்பட்டன.
1996ல்
"டெஸ்டிக்குலர் கேன்சரால் பாதிக்கப்பட்டார். இது மூளை, நுரையீரலில்
பரவியது. பின் "டெஸ்டிக்குலர் பகுதியில் " அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தொடர்ந்து "கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு, "கேன்சரில் இருந்து மீண்டார்.
இவரை முன்னுதாரணமாக கொண்டு தான் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ், கேன்சர்
பாதிப்பில் இருந்து மீண்டார்.
கடந்த 2011ல் ஓய்வு பெற்ற
ஆம்ஸ்டிராங், கேன்சர் அறக்கட்டளை மூலம் கோடிக்கணக்கில் நிதி திரட்டி,
வசதியற்ற நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.
கேன்சரில்
இருந்து மீண்ட இவரால், ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து மட்டும் மீள
முடியவில்லை. 1999ல் இவரது சிறுநீர் மாதிரியில் "கார்டிகோஸ்டீராய்டு" என்ற
தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் 2008
முதல் 2009 வரை 24 முறை இவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஊக்க
மருந்து பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்தது. இருப்பினும், அமெரிக்க ஊக்க
மருந்து தடுப்பு மையம்(யு.எஸ்.ஏ.டி.ஏ.,) இவருக்கு எதிரான நடவடிக்கையை
தொடர்ந்தது. இதனை எதிர்த்து அமெரிக்க பெடரல் கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த
மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து யு.எஸ்.ஏ.டி.ஏ., தனது நடவடிக்கையை
தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் நேற்று திடீரென தனக்கு எதிரான
ஊக்க மருந்து சர்ச்சையில், போராட்டத்தை தொடரப் போவதில்லை என தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனக்கு வேண்டுமென்றே
தொல்லை கொடுக்கின்றனர். இனிமேல் இப்பிரச்னை பற்றி எந்த சூழ்நிலையிலும்
எதுவும் பேசப் போவதில்லை. "டூர் டி பிரான்ஸ் தொடரில் நான் தான் 7 முறை
வென்றேன் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, எனது பெருமையை யாரும் பறிக்க
முடியாது. கேன்சர் சேவை பணிக்கு என்னை முழுமையாக அர்ப்பணிக்கப்
போகிறேன்.
ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் ஒரு கட்டத்தில் "போராடியது
போதும் என்று சொல்ல நேரிடும். எனக்கு இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது.
இந்த முட்டாள்தனமான ஊக்க மருந்து பிரச்னை காரணமாக எனது பணியிலும்,
குடும்பத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு
தான் போட்டிகளில் பங்கேற்றேன். ஆனால், சிலர் தனிப்பட்ட லாபத்துக்காக என்
மீது தவறாக குற்றம்சுமத்துகின்றனர். இதில் நியாயமில்லை". ஒவ்வொரு போட்டியிலும் நான் பல்வேறு போதை/ஊக்க மருந்து சோதனைகளுக்கு பின்னரே பங்கு பெற்றேன். ஏழு முறையும் சாம்பியன் பட்டங்களை வென்றது நான்தான் என்பது இந்த உலகுக்கு தெரியும். எனக்கு அதுவே போதும்".
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தனக்கு
எதிரான ஊக்க மருந்து பிரச்னையில் போராட மறுப்பதால், ஆம்ஸ்டிராங் குற்றத்தை
ஒப்புக்கொண்டதற்கு சமமாக கருதப்பட்டது. இதையடுத்து அமெரிக்க ஊக்க மருந்து
தடுப்பு மையம் இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இவரது 7 "டூர் டி பிரான்ஸ்
உட்பட அனைத்து பட்டங்களும், போட்டிகளின் போது அவர் வென்ற பரிசுத் தொகையும் மொத்தமாக பறிக்கப்பட்டன.
வாழ்வில் பல தடைகளை வென்று போராட வேண்டும் என்று வலியுறுத்திய இவருடைய "Its Not About the Bike" என்ற அருமையான புத்தகம் ஒரு மிகச் சிறந்த வழிகாட்டி.
Comments