கோவிலுக்கு சென்றால் விபூதி, குங்குமம், சந்தனம் பிரசாதமாக வாங்குவோம்.
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில், பழமையான நம்பூதிரி குடும்பத்து கோவிலில்,
மருந்தையே பிரசாதமாக தருகின்றனர். "குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக
அமைகிறது, ஞாபக சக்தி கூடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மன அமைதி
ஏற்படுகிறது' என்ற நம்பிக்கையோடு, இங்கு அம்மனை கும்பிட்டு, மருந்து
பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் ஏராளம்.
எர்ணாகுளம் மாவட்டம்,
கூத்தாட்டுக்குளத்தில் உள்ளது நெல்லிக்காட்டு பகவதி கோவில். எர்ணாகுளத்தில்
இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ள, கோட்டயத்தில் இருந்து அங்கமாலி
செல்லும் பாதையில், 37வது கி.மீ.,தொலைவில் இக்கோவில் உள்ளது. கல்விக்கு
சரஸ்வதி போன்று, (திரு மந்தம்குன்னு)"மருத்துவத்திற்கான தெய்வம்' என வணங்கப்படும்
தன்வந்திரிமூர்த்திக்கும், பகவதி அம்மனுக்கும் தனித்தனி கோவில்கள் இங்கு
உள்ளன.
ஆடி மாதத்தில், இக்கோவிலில் வலம் வந்து, நேர்ச்சைகள் நடத்தி,
மனமுருக பிரார்த்தனை செய்து அம்மனை வழிபட்டால், முன்ஜென்ம பாவம் போய், நம்
நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
"இறைவன் தரும் நோய்கள், இறைவன் அருளால் தான் நீங்கும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனை நடத்தி, அம்மன் முன்னிலையில், பல்வேறு ஆயுர்வேத, பாரம்பரிய மருந்து பொருட்கள் எல்லாம் கலந்து இந்த, "அபூர்வ மருந்து' தயார் செய்யப் படுகிறது. இதை, 41 நாட்கள் அம்மன் கருவறையில் வைத்து, பூஜை செய்வர். ஆடி மாதம் முதல் தேதியிலிருந்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்குகின்றனர்.
இந்தாண்டு ஆக., 16ம் தேதி வரை, காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை
5.00 மணி முதல் இரவு 7.30 வரை நடை திறந்திருக்கும் போது பிரசாதம்
வழங்கப்படுகிறது.
கோவில் நிர்வாகி என்.பி.நாராயணன் நம்பூதிரி கூறுகையில்,""இந்த ஒரு மாதம் மட்டுமே, ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருவர் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆக.,11 ம் தேதி நடக்கும், "மருந்து பொங்கல்' நிகழ்ச்சி இங்கு விசேஷமானது. அன்று பொங்கலிட வரும் பக்தர்களுக்கு, பொங்கலுக்கான மருந்தை நாங்கள் தருவோம். அரிசி, சர்க்கரை அவர்கள் எடுத்து வர வேண்டும். கோவிலில் இருந்து தரும் மருந்து பிரசாதத்தை, அம்மன் முன் சாப்பிட வேண்டும்.
வர இயலாத நோயாளிகளின் உறவினர்கள் குறைந்த கட்டணம்
செலுத்தி, மருந்து பிரசாதத்தை வாங்கிச் செல்லலாம். கோவிலில் உள்ள
பாரம்பரிய, அரிய சுவடிகளில் கூறப்பட்டுள்ளவாறு பொருட்கள் சேர்த்து மருந்து
தயாரிக்கப்படுகிறது,'' என்றார்.
அம்மன் அருள் மழை பொழியும் இந்த கோவில் பற்றி, மேலும் தெரிந்து கொள்ள, 09447 875067ல், தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர் இணைய தளம்.
Comments