செய்வாரா ஆனந்த்?
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற, விஸ்வநாதன் ஆனந்த், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார். அப்போது, ஆனந்த்திற்கு, தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார்.
இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன், கடந்த 1992ம் ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை, முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் உயர்ந்த சாதனை புரியும் வகையில், பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையும் இருமடங்காக்கப்பட்டது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மாதம் நடந்த, உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த, விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல், விஸ்வநாதன் ஆனந்த், தன் மனைவி அருணாவுடன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்த முதல்வர், 2 கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
சந்திப்பு நிகழ்ச்சி முடிந்து, வெளியில் வந்த விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில்,""தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 7 வயது முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை உருவாக்கும். மேலும், ஆசிரியர்களும் செஸ் போட்டியில் பயிற்சி பெற வேண்டும். செஸ் போட்டியானது உயர்ந்த நிலைக்கு செல்ல, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்,'' என்றார்.
நன்றி: தினமலர்
என்னுடைய கருத்து:
மறுபடியும் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்துக்கு வாழ்த்துக்கள். ஆனந்த் ஏற்கனவே இந்த போட்டியிலும், வேறு பல போட்டிகளிலும் வென்றதின் மூலம் பல கோடிகளை சம்பாதித்துவிட்டார். எனவே அவருக்கு இந்த "ஊக்கத் தொகை" சற்று அதிகம்தான். அவரும் இந்தப் பணத்தை தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே, முதலீடு செய்யப்போவதில்லை. இரண்டாவது, ஆனந்தைப் போன்று ஏற்கனவே பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்து விட்டவர்கள், இங்கே, தமிழ்நாட்டில், வசதி இல்லாத, ஆனால் ஆர்வம் மிக்க இளைஞர்களுக்கு ஒரு "செஸ் அகாடமி" ஆரம்பித்து இலவசமாக செஸ் கற்பிக்கலாமே; ஆனந்த் இதைச் செய்தாரென்றால் அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த பெரும் பரிசு நியாயம் என்று சொல்லலாம்; செய்வாரா ஆனந்த்?
Comments