ஹாலிவுட் ஆக் ஷன் படங்கள் பொதுவாக கரம் மசாலா கலந்த சுத்தமான அடிதடி படங்களாகவே இருக்கும். எப்போதாவது ஒருமுறைதான் ஹானா போன்ற அழகான ஆக் ஷன் படங்கள் வெளிவரும்.
பனிபடர்ந்த காட்டின் நடுவே மானை வேட்டை ஆட ஹானா (Saorise Ronan) பொறுமையாக வில் மற்றும் அம்புடன் காத்திருக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். கிட்டத்தட்ட ஒரு மாடு சைசில் வரும் அந்த மானை அம்பு எய்தி கொள்கிறாள் ஹானா (. அம்புடன் சிறிது தூரம் ஓடிவிட்டு கீழே விழும் அந்த மானை நெருங்கி, "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அதைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா. யாருமே இல்லாத அந்த பனிபிரதேசத்தில் (வடக்கு பின்லாந்த்) தன்னுடைய தந்தையால் (Eric Bana) ஒரு முக்கிய குறிக்கோளுடன் வளர்க்கப்படுகிறாள். தந்தை அமெரிக்க உளவு நிறுவனமான CIA யில் பணிபுரியும்போது சில துரோகிகளால் பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு பின் தப்பிவிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹானாவின் தாய் கொல்லப்டுகிறாள்.
ஹானாவின் தந்தை ஹானாவுடன் ஆளரவமில்லாத பனிபிரதேசத்தில் வாழ்கிறார். ஹானா தன்னை எல்லாவிதத்திலும் தயார் செய்துகொண்டவுடன், தன்னை ஏடாகூடமாக சிக்கவைத்த அந்த CIA ஏஜெண்டுக்கு செய்தி அனுப்பச் சொல்கிறார் அவள் தந்தை. CIA கைக்கூலிகள் அந்த இடத்தை முற்றுகை இடும்முன் ஹானாவை அங்கு தனியாக விட்டுவிட்டு அவள் தந்தை தப்பிக்க, தந்தை-மகள் இருவரும் ஏற்கனவே போட்ட திட்டப்படி, ஹானா விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். வெள்ளை வெளேரென, குச்சி,குச்சியான கைகால்களுடன் இருக்கும் ஹானாவை ரொம்ப சாதரணமாக நினைத்தாலும், அவளைத் தப்புவிக்க அவள் தந்தை முயற்சிக்கலாம் என்று ஒரு பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கிறாள் ஹானாவின் வாழ்வை சீர்குலைத்த மரிஸா (Cate Blanchett). அந்த சிறையில் இருந்து ஹானா தப்பிக்கும் தடதடக்கும் அந்த 20 நிமிடங்கள் நம்மை ஆச்சரியப் படவைக்கும் ஹை-லைட்.
ஆள், படை, அம்பு என சகலவிதமான பாதுகாப்புடன் இருக்கும் மரிஸாவை ஹானா கடைசியில் கொல்லும் போது, படத்தின் ஆரம்பத்தில் நமக்கு ஏற்படும் படபடப்பு அடங்குகிறது. அம்பால் காட்டு விலங்கைக் கொல்வது போல, மரிஸா மேல் அம்பு எய்துவிட்டு, கீழே கிடைக்கும் அவள் அருகே வந்து, " "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அவளைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா.
அட்டகாமான ஒளிப்பதிவு, அதிர வைக்கும் பின்னணி இசை (Chemical Brothers), பரபரப்பை குறைவில்லாமல் கொண்டு செல்லும் எடிட்டிங், மெய்மறக்க வைக்கும் லொகேஷன்கள், புதிய முகமாக இருந்தாலும் ஹானாவாக அலட்டாமல் நடிக்கும் சாரிஸ் ரோனன். ஹானா ஒரு வித்தியாசமான த்ரில்லர்தான்.
Comments