எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை நேற்று படித்தேன். புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் உஷாராக, " இந்தப் புத்தகம் Sujatha reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக்கருதுகிறேன் என்பதற்கான தொகை நூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்து பட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கரைகளையே நான் முதன்மைப் படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புகளில் ஒரு குறுக்கு வெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு" என்று சொல்லிவிட்டார்.
எஸ்.ரா எழுதிய புத்தகம் என்பதால் எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து, அது இந்தப் புத்தகத்தை படித்தவுடன் காற்றாகிப் போனது என்பதால் மட்டும் நான் அதிருப்தி அடையவில்லை. புத்தகத்தில் எதுவுமே புதிதாக இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். சுஜாதாவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களின் கோர்வையாக இல்லாவிட்டலும், அட்லீஸ்ட், அவருடைய படைப்புகளின் ஒரு விமர்சனமாக இருந்திருக்கலாம். அல்லது, சுஜாதாவின் இன்னின்ன படைப்புகளைப் பற்றி என்னுடைய கருத்து இது என்றாவது சொல்லி இருக்கலாம். அதுவும் இல்லை. சுஜாதாவின் பல்வேறு படைப்புகளை தொகுத்து (அவருடைய பன்முகத் தன்மையை விளக்கும் வண்ணம்) அதிலிருந்து இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என உருவி ஒரு மசாலா புத்தகம் கொடுத்துள்ளார் எஸ்.ரா. இதற்கு எஸ்.ரா போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளர் தேவையா என கேட்பது அதிகபிரசங்கித்தனமாக தோன்றலாம். ஆனால், இந்த தொகுப்பை உயிர்மை வழியே வெளியிட்டதின் மூலம் எஸ்.ரா சுஜாதாவின் படைப்புகளில் தனக்கு பிடித்தவைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.
எனக்குத் தெரிந்து சுஜாதாவின் படைப்புகளில் நான் படிக்காத ஒரு புது விஷயம் ஒன்று இந்தப் புத்தகத்தில் உள்ளது என்றால் அது அவருடைய "மெக்சிகோ தேசத்து சலவைக்காரி" ஜோக் ஒன்றுதான். எனக்குத் தெரிந்து சுஜாதா அதை எந்தப் புத்தகத்திலும் எழுதவில்லை. அவரை நேரில் சந்தித்த என் நண்பர்கள் சிலர் (எனக்கு அந்த கொடுப்பினை கடைசிவரை கிடைக்கவில்லை) அவரை நச்சரித்தபோது சுஜாதா சொன்ன அந்த ஒரிஜினல் ஜோக்கின் நீர்த்து போன வடிவம்தான் எஸ்.ரா குறிப்பிட்டுள்ளது.
எஸ்.ரா அவர்கள் மன்னிக்க வேண்டும். அவருடைய புத்தகம் ஒரு தீவிர சுஜாதா வாசகனான எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
Comments