2004 ம் ஆண்டில் சிங்கபூரிலிருந்து சூப்பர் ஸ்டார் வர்கோ (SuperStar Virgo) மூலம் மலேஷியா (லங்காவி), தாய்லாந்து (புகெட்-Phuket) ஆகிய ஊர்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது நண்பர்கள் எல்லோரும் புலம்பினோம், "இது போன்ற பயண வசதிகள் நம் தமிழ்நாட்டில் எப்போது வருமோ?" என்று.
நடுவில் ஒன்றிரண்டு க்ரூஸ் (சொகுசுக் கப்பல்) நிறுவனங்கள் இந்தியாவில் க்ரூஸ் சேவை ஆரம்பித்துவிட்டு, பின் நம் மத்திய அரசு கொடுத்த குடைச்சல் தாங்காமல் ஓடிவிட்டன.
இப்போது சென்னையில் உள்ள அமெட் (AMET) தன்னிலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெட் க்ரூஸ் என்ற நிறுவனம் முதன்முதலாக சென்னையிலிருந்து க்ரூஸ் சேவை ஆரம்பித்திருக்கிறது. மற்றொரு க்ரூஸ் நிறுவனமான ப்லமிங்கோ லைனர்ஸ் (Flemingo Liners) தூத்துக்குடியிலிருந்து இலங்கையில் உள்ள கொழும்புவுக்கு ஸ்கோஷியா ப்ரின்ஸ் (Scotia Prince) என்ற சொகுசுக் கப்பலை இன்று முதல் இயக்குகிறது.
ஸ்கோஷியா ப்ரின்ஸ்:
1044 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த சொகுசுக் கப்பல் வாரம் மும்முறை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணிக்கும். இந்த க்ரூஸில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன: நீச்சல் குளம், உணவு விடுதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள். கட்டணமும் அதிகமில்லை. தூத்துக்குடியிலிருந்து கிட்டத்தட்ட 24 மணிநேரம் பயணித்து கொழும்பு அடைந்த பின், அதே மாதிரி 24 மணிநேர பயணத்தில் மறுபடியும் தூத்துக்குடி வந்தடையும். ரூ.2500/- முதல் ரூ.15000/- வரை பலவித வகுப்புகள் இருக்கின்றன. விமான நிலையங்களில் இருப்பது போல டியூட்டி ப்ரீ (duty free) ஷாப்பிங் வசதிகளும் உண்டு.
இதில் பயணம் செய்ய விரும்பினால் முன் பதிவு அவசியம்.
அமெட் மெஜஸ்டி க்ரூஸ்:
658 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த சொகுசுக் கப்பல் தற்போது சென்னை ஹை சீஸ் (Chennai High Seas) மற்றும் விசாகப்பட்டினம் (Vizag High Seas) என்று இரு கடல் வழிகளில் பயணிக்கிறது. கூடிய விரைவில் சென்னையிலிருந்து இலங்கை, மாலத் தீவுகள், அந்தமான், தாய்லாந்து (புகெட்-Phuket), லட்சத் தீவுகள் என்று பல்வேறு பயணத் திட்டங்கள் (travel itineraries) இவர்கள் வசம் இருக்கிறது. குறைந்தபட்சக் கட்டணம் ரூ.4500/- இந்த சொகுசுக் கப்பலிலும் ஏராளமான வசதிகள் உள்ளன.
அதிகம் பணமோ அல்லது நேரமோ இல்லை இருந்தாலும் இந்த சொகுசுக் கப்பலில் பயணிக்க வேண்டும் என்றால் நீங்கள் சென்னை ஹை சீஸ் என்ற முறையில் இன்று காலை 11 மணிக்கு கப்பலில் ஏறி நாளைக் காலை 8 மணிக்கு
மறுபடியும் சென்னை வந்துவிடலாம். ஒரு இரவு முழுவதும் பயணம் செய்த அனுபவம் கிடைக்கும்.
இதில் பயணம் செய்ய விரும்பினால் முன் பதிவு அவசியம்.
என்ன நண்பர்களே, குடும்பத்துடன்/நண்பர்களுடன் சொகுசுப் பயணம் செய்யத் தயாரா?
உங்களுக்கு மேற்கூறிய இரண்டு சொகுசுக் கப்பல்கள் பற்றி ஏதாவது பயண விளக்கம் / முன்பதிவு உதவிக்கு 044 -42145808 / 42080946 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
படங்கள் நன்றி : அந்தந்த க்ரூஸ் வலைத் தளங்கள்
Comments