ஜான் பி.இஸோ (John B .Isso) எழுதிய The Five Secrets You Must Discover Before You Die என்ற மிக அருமையான புத்தகத்தை (178 பக்கங்கள் மட்டுமே) இன்று ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
வாழ்வின் குறிக்கோள் என்ன, நாம் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும், அமைதியான, மகிழ்வான வாழ்வு வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச் சுருக்கமாக, மிகத் தெளிவாக (lucid) கூறும் நூல் இது.
கோடீஸ்வரனாக வேண்டும், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும், டெண்டுல்கர் போல் ஆக வேண்டும் என்றெல்லாம் உசுப்பேற்றாமல் யதார்த்தமான விஷயங்களை சொல்லி இருக்கிறார் இந்த புத்தக ஆசிரியர்.
ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களை தேடிப் பிடித்து கிட்டத்தட்ட 200 பேருக்கும் மேல் இன்டர்வியு செய்து அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள்/செய்கிறார்கள் என்று அலசி, அதை 5 ரகசியங்களாக மாற்றி இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஜான்.
பணம் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியுடன் வாழும் நிறையப் பேரை நாம் பார்த்திருப்போம்; பணம், வசதி, சொகுசு வாழ்வு என்று எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லாமல், எதிலுமே ஈடுபாடு இல்லாமல் ஒரு வித விரக்தியுடன் இருக்கும் மனிதர்களையும் பார்க்கிறோம். ஜான் இந்த வேறுபாட்டை காரணம் காண முயன்றிருக்கிறார்.
அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் என்னைப் போன்ற பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த ஊருக்கு போவதானாலும் (உள்நாடு/வெளிநாடு) ட்ரிப் அட்வைசர் (Trip Advisor) என்ற வலைத் தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட ஊரில் எங்கு தங்கலாம், எங்கு சாப்பிடலாம், எந்தெந்த இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று பார்ப்பது உண்டு. இதற்கு முன் பயணம் செய்த பலபேர் வேலை மெனக்கெட்டு தான் பெற்ற இன்பங்களை/நல்ல அனுபவங்களை/துன்பங்களை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்க்கை அனுபவமும் அது போலத்தான் என்கிறார் ஜான். வாழ்க்கையில் நிறைவாக, மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் நாம் ஏன் கருத்து கேட்கக்கூடாது?
இதற்காக ஜான் ஒரு குழுவுடன் நிறைய நாடுகளுக்கு பயணம் செய்து, தான் கற்றுக் கொண்ட விஷயங்களை இதில் விளக்கியுள்ளார். சுருக்கமாக அந்த 5 ரகசியங்கள் என்ன, என்ன என்று பார்ப்போம்:
ரகசியம் # 1 :உனக்கு நீ உண்மையாக இரு
கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, உன் மேல் உனக்கு நம்பிக்கை வேண்டும். உனக்கு நீ உண்மையாக இல்லை என்றால், எவ்வளவு பணம் வந்தாலும் வாழ்வில் நிம்மதி வராது.
ரகசியம் # 2 : எதையும் நினைத்து வருந்தாதே
பின்னாளில் வாழ்க்கையில் ஐயோ, இப்படி செய்துவிட்டோமே என்று நினைத்து வருந்தும் அளவுக்கு எந்தத் தவறையும் நாம் செய்யக்கூடாது. ஒருவேளை, அப்படி ஏதேனும் செய்துவிட்டால் பின்னர் அதை நினைத்து, நினது தூக்கத்தையும், நிம்மதியையும் இழப்பது அர்த்தமற்ற செயல். இதனால் நம் வாழ்வு வீணாகிவிடும்
ரகசியம் # 3 : அன்பாக மாறு
வேறெந்த முயற்சியும் செய்ய வேண்டாம்; வாழ்க்கையில் எல்லோரிடமும் அன்பாக, பகைமை பாராட்டாமல் இருந்தாலே போதும் என்கிறார் ஜான். பிறரிடம் அன்பாக இருப்பது என்பது மிகச் சுலபமான செயலே, முயற்சித்துப் பாருங்கள்.
ரகசியம் # 4 : இன்று வாழ கற்றுக்கொள் (live the moment ):
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தில் "carpe diem" என்றொரு லத்தீன் வார்த்தை வரும்; அதன் அர்த்தம் "இன்று வாழு (enjoy the day)" என்பதாகும். சமீபத்தில் வெளிவந்த 180 படத்தின் கதாநாயகன் கூட இப்படி சொல்வதாக ஒரு காட்சி இருக்கிறது. நேற்று என்பது இறந்த காலம், நாளை என்பது நிச்சயமில்லை. இன்று என்பதே நிச்சயம். இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருந்தாலே பெரிய விஷயம், நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி நினைக்காமல் இன்றைய நாள் மகிழ்சியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். நல்ல சாப்பாடு சாப்பிடாமல், நல்ல உடை உடுத்தாமல், வெளியே எங்குமே செல்லாமல் வாழ்நாள் பூராவும் சேர்த்து வைத்து என்ன பயன் என்று தெரியாமலேயே நிறைய பேர் பணம், பணம் என்று சேர்த்து வைப்பதில் குறியாக இருக்கிறார்கள். இவர்கள் யாருக்குமே வாழ்வு நிறைவாக இருக்காது, இவர்கள் குழந்தைகள் சந்தோஷமாக வளரமாட்டார்கள். பெற்றோரை மதிக்க மாட்டார்கள். இது போன்றோரின் கடைசி காலம் மிகுந்த துன்பமாகவே இருக்கும் என்கிறார் ஜான்.
ரகசியம் #5 : நீ அடைவதைவிட அதிகமாக கொடு:
Bill Gates, Warren Buffet போன்ற உலக மகா கோடீஸ்வரர்கள் இதைத்தான் செய்கிறார்கள். குழந்தையே இல்லாமல் இருக்கும் நிறைய பேர் வாழ்க்கையை வாழத் தெரியாமல், தேவையே இல்லாமல் கஞ்சத்தனமாக இருப்பதை பார்த்திருப்போம். இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்? இறந்த பிறகு இவர்களுடைய சொத்து யாருக்கு பயன்படப் போகிறது?
மகிழ்ச்சியாக வாழ்ந்தால், மகிழ்வுடன் நிம்மதியாக இறக்கலாம்.
இதில் என்ன புதுமை? நமக்கு தெரியாத புதிய விஷயம் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லையே என்று சிலர் நினைக்கலாம்; உண்மைதான். ஆனால், எதையுமே நாமாக புரிந்து கொள்ளாமல், வாழ்க்கை கடினமாக இருக்கிறது, சுவாரசியம் இல்லாமல் இருக்கிறது என்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஊக்கியாக இருக்கும்.
Comments