இத்தனை நாளும் செல்வராகவன் இயக்கி கமல் நடிப்பதாக இருந்த விஸ்வரூபம் படம், திடீரென கமலே இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் அனைத்துமே கமல் செய்யப்போவதாக ஒரு செய்தி.
இசை மட்டும் போனால் போகிறது என்று ஷங்கர் மகாதேவன்-ஈஷான்-லாய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த மூவர் இசை அமைத்த படம் ஆளவந்தான். அதில் எந்தப் பாடலுமே ஹிட் ஆகவில்லை என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்தது. முதலில் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பார் என செய்தி வந்தது. பிறகு கமலின் தலையீட்டால் இந்த மாற்றம்.
இது வரை இல்லாத அளவு இந்தப் படத்திற்கு ரூ.150 கோடி பட்ஜெட் என தகவல். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 7 தேதி (கமலின் பிறந்த நாள்) வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைய கமலின் தீவிர ரசிகன் என்ற முறையில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதே தீவிர ரசிகன் என்ற முறையில் சில சந்தேகங்கள்:
- செல்வராகவன் இயக்காவிட்டால் வேறு யாரும் இயக்கக்கூடாதா? ஏன் கமலே இயக்க வேண்டும்?
- நடிப்பில் கமலை வெல்ல வேறு யாருமில்லை என்பது உலகறிந்த விஷயம். ஆனால், ஏன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று டி.ஆர் பாணியில் இவர் போக வேண்டும்?
- பாடல் எழுதும் விஜய் போன்றவர்கள் நடிக்கும்போது கமல் பாடல் எழுதக்கூடாதா எனக் கேட்கலாம், ஆனால் இது கமலுக்கு தேவையா?
- விறுவிறுப்பான திரைக்கதை, வசனம் எழுத எவ்வளவோ பேர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். கமலுக்கு எல்லாமே தெரியும், அவர் ஒரு சகலகலாவல்லவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும், அப்படி இருக்கும் போது இதை மறுபடி, மறுபடி கமல் நிரூபிக்க வேண்டுமா என்ன?
ஹ்ம்ம்....காலம் பதில் சொல்லும்.
Comments