லியம் நீஸன்ஒரு தேர்ந்த ஹாலிவுட் நடிகர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List) , ராப் ராய் (Rob Roy), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) போன்ற அருமையான படங்களில் நடித்துள்ளவர். சமீபத்தில் வெளிவந்த டேக்கன் (Taken) படம் ஒரு மிக விறுவிறுப்பான படம். இளம் பெண்களை கடத்தி, விபச்சாரத்திற்கும், கையாகாலாத கிழவர்களின் காம லீலைகளுக்கும் இரையாக்கும் ஒரு கும்பலை தேடிச்சென்று வேட்டையாடி அழிக்கும் இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓகே, அன்நோன் (Unknown ) படம் எப்படி என்று பார்ப்போம்: நாயகன் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ் (லியம் நீஸன்) தனது மனைவி எலிசபெத்துடன் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு ஒரு பயோ-டெக்னாலஜி மாநாட்டிற்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கப்போகும் ஹோட்டலுக்கு வரும்போது, தன்னுடைய கைப்பெட்டி (brief case) தொலைந்து போய்விட்டது என்று உணர்ந்து, அதில் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் முக்கியமான விஷயங்கள் இருப்பதால், மனைவியை ஹோட்டலில் விட்டுவிட்டு இன்னொரு டாக்சியில் மறுபடியும் விமான நிலையத்திற்கு செல்கிறார். போகும் வழியில் ஏற்படும் ஒரு விபத்தில் அவர் பயணிக்கும் கார் தண்ணீரில் மூழ்கிவிட, மார்ட்டின் தனது சுயநினைவை இழக்கிறார்.
நான்கு நாட்கள் கழித்து கண் விழித்து (கண்களை விழித்து என்றுதானே இருக்க வேண்டும்? ஏன், எல்லோருமே கண் விழித்து என்று ஒருமையில் சொல்லுகிறோம்? குடும்ப ஆட்சி நடத்தும் தமிழ் தாத்தாவிடம்தான் கேட்க வேண்டும்) பார்க்கும்போது அவருக்கு மெதுவாக தன்னைப் பற்றிய ஞாபகங்கள், துண்டு துண்டாக, வருகின்றன. தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு விரைகிறார், டாக்டர் மார்ட்டின். அங்கு அவர் மனைவி உட்பட அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவருக்கு தன்னை நிரூபிக்க எந்த விதமான ஆவணங்களும் இல்லாததால், அவரை ஹோட்டல் நிர்வாகம் வெளியேற்ற முற்படுபோது, டாக்டர் மார்ட்டின் என்று சொல்லிக் கொண்டு வேறு ஒரு ஆள் அங்கு இருப்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார் நாயகன்.
தான் யார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் மறுபடியும் தான் இருந்த மருத்துவமனைக்கே செல்கிறார் மார்ட்டின். அங்கு இருக்கும் ஒரு நர்ஸ், இவரைப் பார்த்து பரிதாப்பட்டு தன்னுடைய நண்பர் ஒருவரின் விலாசத்தைக் கொடுத்து அவரைச் சென்று பார்க்குமாறு சொல்கிறார். இடையில், கார் விபத்து நேரிட்டபோது அந்த காரை ஓட்டிய பெண் டிரைவரையும் சந்திக்கிறார் மார்ட்டின். என்ன ஆனாலும் தான் யார் என்பதைக் கண்டுபிக்கவேண்டும் என்று போராட ஆரம்பிக்கிறார் டாக்டர் மார்ட்டின். அவருடைய போராட்டங்களின் முடிவில் ஏகப்பட்ட திருப்பங்களுடன் முடிகிறது படம்.
திரைக்கதை நன்றாக இருக்கிறது, காட்சிகள் வேகமாக நகர்கின்றன, ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ள வைக்கும் அளவு துல்லியமாக இருக்கிறது, லியம் நீஸன் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னாலும், மாட் டாமன் (Matt Damon) நடித்த Bourne Identity , ஹாரிஸன் போர்ட் (Harrison Ford) நடித்த பிரான்டிக் (Frantic) போன்ற படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
நாயகனுக்கு உதவி செய்ய வந்து, பின் சயினைட் சாப்பிட்டு மடியும் சின்ன கதாபாத்திரத்தில், ஜெர்மன் மொழியில் வந்து மிகப் புகழ் பெற்ற Downfall என்ற படத்தில் ஹிட்லராக பிரமாதமாக நடித்த நடிகர் வருகிறார். பெண் டிரைவராக வரும் சிறிய வேடத்திற்கு டையேன் க்ருகர் (Diane Kruger) போன்ற தேர்ந்த நடிகை எதற்கு என்று புரியவில்லை. பல வருடங்களுக்கு முன் டிராகுலா வேடங்களில் வந்து பிரமாதப்படுத்திய பிரான்க் லாங்கெல்லா (Frank Langella) ஒரு சிறிய வில்லன் வேடத்தில் வருகிறார். பாவம், தலை வேறு சொட்டையாகிவிட்டது.
Comments