ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் வித்தியாசமாக தொடர்ந்து சிந்திக்கிறார் என்பதற்கு சமீபத்திய சாட்சி "கோ" திரைப்படம். கோ என்றால் மன்னன் அல்லது தலைவன் என்று பொருள் (எந்த மொழியிலா? அடப்பாவிகளா, தமிழ் மொழிலதான்).
இந்தப் படத்தில் முதலில் சிம்பன்ஸி.மன்னிக்கவும், சிம்பு எனும் எஸ்.டிஆர். நடிப்பதாக இருந்ததாம், நல்ல வேளை, நடிக்கவில்லை. நடித்திருந்தால் இந்த வெற்றிப் படம் பப்படம் ஆகியிருக்கும்.
முதலில் கோ படத்தின் கதாநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது என் கடமை. இதோ அந்த நாயகன்.
கோ படத்தின் உண்மையான நாயகன் - படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் |
இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் என்பதால் ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவுள்ள படத்துக்கு இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் மூலம் சிறப்பு சேர்த்துள்ளார்.
படத்தின் ஆரம்ப காட்சி முதல் கடைசி வரை ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது. ஆரம்ப வங்கிக் கொள்ளையில் ஆரம்பித்து, சந்து, பொந்து, சேரி எனத் தொடர்ந்து, நார்வே, சீனா என பயணித்து ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்கிறது.
கோ படத்தின் கதை மிகவும் டாப்பிகல் (topical) என்று சொல்லவேண்டும். பொருத்தமான நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
ரஸ்ஸல் க்ரோ (Russel Crowe) நடித்து 2009 இல் வெளிவந்த The State of Play என்ற படத்தின் மையக்கருவை உருவி அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் சாயம், மற்றும் தமிழ் சினிமாவின் மசாலா கலந்து பொழுதுபோக்கான படமாக கொடுத்திருக்கும் கே.வி.ஆனந்தை பாராட்டவேண்டும்.
திரும்பத் திரும்ப ஊழல், ஊழல் என்ற உளுத்துப் போன அரசியல் பின்னணியை விட்டு சற்று வெளியே வந்து படித்தவர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முறையில் கதை அமைத்த எழுத்தாளர்கள் சுபா மற்றும் இயக்குனரை பாராட்டவேண்டும்.
திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலே படம் பாதி வெற்றி என்ற பார்முலாவை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். இசை சுமார் ரகம்தான். ஒரே ஒரு பாடல் (என்னமோ, ஏதோ) தவிர வேறு எந்தப் பாடலும் இனிமையாக இல்லை. பின்னணி இசையும் ரொம்ப சாதரணமாகவே இருக்கிறது.
நடிப்பைப் பொறுத்தவரை அஜ்மல்,பியா இருவரும் நன்றாக செய்துள்ளனர். ஜீவா அதிகம் அலட்டிகொள்ளாமல் வருவதே நன்றாக இருக்கிறது. பழைய நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நெடுநெடுவென்று இருக்கிறார். பொருத்தமான உடைகளை அணிந்து வருகிறார் என்பதைத் தவிர சொல்ல வேறு எதுவும் இல்லை. அடிக்கடி இடது புருவத்தை அரையடி மேலே தூக்குவதை இயக்குனர்/ஒளிப்பதிவாளர் திருத்தியிருக்க வேண்டும்.
வீணடிக்கப்பட்ட ஒரு பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ். ஆந்திர அரசியலை சில வருடங்களுக்கு முன் ஆட்டிவைத்த ஒரு சம்பவத்தை (வயதான அரசியல்வாதி இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை) நன்றாக காட்டியுள்ளனர், ஆனால் இது இப்போதுள்ள எத்தனை இளைஞர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
சண்டைக்காட்சிகளில் ஹாங்காங்கில் இருந்து வரவழைக்கப்பட்ட Phantom Flex என்ற அதி நவீன காமெராவை புத்திசாலித்தனமாக கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர். இந்தக் காமெராவில் ஒரு செகண்டுக்கு 2500 பிரேம்களை (frames) எடுக்க முடியும் என்பது ஒரு ஆச்சரியம் என்றால், ஒரு செகண்டில் எடுக்கப்பட்ட காட்சியை ஸ்லோ மோஷனில் 18 செகண்ட் வரை நீட்டித்து காட்ட முடியும். இந்த வகை காமெராக்கள் பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில்தான் உபயோகிப்பார்கள்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் இதற்கு முன் அங்காடித் தெரு, பானா காத்தாடி போன்ற படங்களில் பணி புரிந்திருந்தாலும் இந்தப் படம் நிச்சயமாக அவருக்கு ஒரு மைல்கல் என்றுதான் சொல்லவேண்டும்.
ஜீவாவும், கார்த்திகாவும் பாடும் "வெண் பனியே" பாட்டின் பின்னணியில் வரும் பனிச் சிற்பங்கள் அட்டகாசமாக இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பாடல் சீனாவில் உள்ள ஹார்பின் (Harbin) என்ற இடத்தில் எடுக்கப்பட்டது. வருடம் ஒரு முறை நடக்கும் Ice & Snow Sculpture Festival என்ற வருடாந்திர நிகழ்வை அருமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர்.
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். குறிப்பாக அந்த குண்டு நடிகை சோனா வரும் காட்சி படு தண்டம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு பாடல்கள் தேவையா?
கே.வி ஆனந்தின் விறுவிறுப்பான இயக்கம், மற்றும் மிகத் தரமான ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காக ஒரு முறை திரை அரங்கில் சென்று பாருங்கள் (சென்னையாக இருந்தால் சத்யம் அரங்கத்தில் பார்ப்பது சாலச் சிறந்தது).
Comments