ராபர்ட் லுட்லம் (1927 - 2001) ஒரு மிகப் புகழ்பெற்ற மர்மக் கதை எழுத்தாளர். இவருடைய புத்தகங்கள் இதுவரை 290 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் என்பது உங்களுக்குத் தெரியும்) என்ற கணக்கில் விற்றிருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர், முதலில் அமெரிக்கக் கப்பற்படையில் பணியாற்றி இருக்கிறார். பின்னர், நாடகங்களின் மேல் உள்ள காதலால் பல்வேறு நாடகங்களை தயாரித்து, இயக்கி, நடித்தும் இருக்கிறார்.
1971 ம் இவர் எழுதி வெளிவந்த முதல் நாவல் தி ஸ்கார்லெட்டி இன்ஹெரிட்டன்ஸ் (The Scarletti Inheritance) வெறும் 75000 காப்பிகள் மட்டுமே விற்றது. பிறகு வெளிவந்த பல நாவல்கள் ஓரளவு வெற்றிபெற்றன என்றாலும், 1980 ல் இவர் எழுதி வெளிவந்த தி போர்ன் ஐடென்டிடி (The Bourne Identity ) மிகப் பெரிய வெற்றி பெற்றது. நம்மூர் பிரதாப் போத்தன் உடனே இதை சுட்டு 'வெள்ளி விழா" என்ற பெயரில் படமாக எடுத்து, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபு ஆகியோர் நடிக்க, வெளியிட்டார். இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் மிகப் பிரபலமாகின. படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
இதே நாவல் ஹாலிவுட்டில் திரைப் படமாக 2002 ல் வந்து மிகப் பெரும் வெற்றி பெற்றதைப் பார்த்து ஆனந்தப்பட லுட்லம் உயிருடன் இல்லை.
இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் பெரும் வெற்றி பெற்றன. பல புத்தகங்கள் திரைப் படங்களாகவும் வெளிவந்தன. இவருடைய சான்செலர் மானுஸ்க்ரிப்ட் (The Chancellor Manuscript ) என்ற நாவல் பிரபல நடிகர் டி காபிரோ நடிப்பில் இந்த வருடம் வெளிவருகிறது. மற்றொரு நாவல், தி மாடரீஸ் சர்கில் (The Matarese Circle ) பிரபல நடிகர்கள் டாம் க்ரூஸ் மற்றும் டென்ஸல் வாஷிங்டன் ஆகியோர் நடித்து 2013 ல் வெளிவரப்போகிறது.
1994 ல் உடல்நலம் மிகவும் மோசமாகி நான்கு முறை இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின், தீவிர கால் வலி காரணமாக லுட்லம் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அப்படியும் எழுதுவதை அவர் நிறுத்தவில்லை.
ஜனவரி 24 , 2001 ம் ஆண்டு இவருடைய பெரும்பாலான சொத்துக்களை இவருடைய இரண்டாம் மனைவியான கேரன் டன் (Karen Dunn ) பேருக்கு எழுதிவைத்தார். இது நடந்து சரியாக 13 நாட்களுக்குப் பின், பிப்ரவரி 10 , 2001 ம் ஆண்டில் இவருடைய வீட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சரிவர நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த லுட்லம் இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
இந்த தீ விபத்தில் மோசமாக காயமடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட லுட்லம், மறுபடியும் ஒரு மாரடைப்பு ஏற்பட்டு, மார்ச் 12 ,2001 ம் ஆண்டு காலமானார். அவருடைய மரணத்தின் உண்மையான காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆட்டாப்ஸி (autopsy ) செய்யும் முன்னரே, அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த தீ விபத்தில் மோசமாக காயமடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட லுட்லம், மறுபடியும் ஒரு மாரடைப்பு ஏற்பட்டு, மார்ச் 12 ,2001 ம் ஆண்டு காலமானார். அவருடைய மரணத்தின் உண்மையான காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆட்டாப்ஸி (autopsy ) செய்யும் முன்னரே, அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
அவர் இறந்தபோது அவருடைய மரணம் அவ்வளவாக சந்தேகிக்கப் படவில்லை என்றாலும், அவருடைய முதல் மனைவி மூலம் பிறந்த மகனும், மகளும் அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிவந்தார்கள். இந்நிலையில், லுட்லம்மின் நெருங்கிய உறவினரான டாக்டர் கென்னத் மைக்கேல் என்பவர் லுட்லம் மரணத்தை பல்வேறு காவல் மற்றும் மருத்துவத்துறை நண்பர்களுடன் ஆராய்ந்து, இப்போது அதை ஒரு புத்தகமாக வரும் 12 ம் தேதியன்று வெளியிடப் போகிறார். இந்தப் புத்தகத்தின் பெயர்: தி லுட்லம் ஐடென்டிடி (The Ludlum Identity).
லுட்லம் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த பல தீ அணைப்பு சாதனங்கள் ஏன் உபயோகிக்கப்படவில்லை, தீ அணைப்பு அதிகாரிகள் அங்கு வந்தபோது லுட்லம்மின் இரண்டாவது மனைவி, அவருக்கு உதவி ஏதும் செய்யாமல் போதையில் இருந்தது ஏன், லுட்லம் இறந்தபின் அவருடைய மரணத்தின் காரணத்தை ஆராயாமல் அவசர அவசரமாக ஏன் எரிக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விக்களுக்குக்காண காரணங்களை ஆராய்கிறது இந்தப் புத்தகம்.
மர்மக் கதை மன்னனின் மரணத்தில் இப்படி ஒரு மர்மமா? இந்தப் புத்தகத்தை படித்த பின் அதைப் பற்றி எழுதுகிறேன்.
Comments